கட்டுரைகள்

 

 WhatsApp Image 2025 02 08 at 18.46.27 e8b82ffd

ஆசிரியர்: யஷ்வந்த் குமார்

தமிழாக்கம்: ஜோசப் கோவிந்த்

திருமணம் என்றாலே கடினமானது. சராசரியாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 7 முதல் 9 மணி நேரம் வேலை செய்கிறார். அதன்படி கணக்கிட்டால் வாரத்தில் 40 முதல் 60 மணி நேரம் வேலை செய்கிறார். ஆனால் திருமண உறவுக்காக ஒவ்வொருவரும் ஒரு வாரத்தில் 168 (24x7) மணிநேரமும், 365 நாட்களும் உழைக்க வேண்டும். திருமண உறவில் விடுமுறை என்பதே இல்லை. நான் இங்கு சொல்ல வருவது உழைப்பு என்பதன் மூலம் கடினமாக, வேலை செய்வதை நான் அர்த்தப்படுத்தவில்லை. இதுபோன்ற விஷயங்களைப் பற்றி நான் குறிப்பிட்டு பேசவில்லை. திருமண உறவைப் பற்றி கவலைப்படுவது என்பது திருமண பந்தத்தை கவனித்துக்கொள்வதாகும். உங்கள் வாழ்வின் சக துணைக்கு நீங்கள் செய்யும் ஊழியத்தில் உங்களை அர்ப்பணிக்கவும், அவர்களை நேசிக்கவும், அவர்களை பலப்படுத்தவும் மற்றும் மேம்படுத்தவும். இதை அன்புடனும் ஆர்வத்துடனும் செய்யப்படும் வேலை.

சிலர் திருமண உறவுக்காக எந்தவித முயற்சியும் செய்ய மாட்டார்கள். ஆனால், திருமணத்தின் போது உறுதிமொழிகளை மட்டும் செய்துக்கொள்வார்கள். ஆனால், கிறிஸ்துவுக்கும் அவருடைய மணவாட்டியான திருச்சபைக்கும் உள்ள உறவான திருமண பந்தத்தைப் பெற அவர்கள் எந்தவித முயற்சியும் எடுப்பதில்லை, (எபேசியர் 5:22-33) சொல்லப்போனால், அவர்களுக்கு அப்படிப்பட்ட எண்ணம் இல்லை. திருமணம் என்பது உங்கள் விருப்பங்களையும் தேவைகளையும் நிறைவேற்றுவது மட்டுமல்ல. நீங்கள் விரும்பியபடி வாழ்வதற்காகவும் அல்ல. விரும்பியதைப் பெற்றுக் கொள்வதற்காக அல்ல. இந்த சத்தியத்தை திருமண தம்பதிகள் உணர வேண்டும். கணவன் மனைவி இருவரும் கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு அவருடைய ஆவியைப் பெற்று, அவருக்கு கீழ்படிந்து அவரை முன்மாதிரியாக கொண்டு அவரை மகிமைப்படுத்த இருவரும் ஒன்றாக இணைந்து வாழ்வதே உண்மையான கிறிஸ்துவை மையமாகக் கொண்ட திருமண உறவு.

அத்தகைய வாழ்க்கை எப்படி இருக்கும்? கிறிஸ்துவை மையமாகக் கொண்ட திருமண உறவைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது?

1.கிறிஸ்துவை மையமாகக் கொண்ட திருமண உறவில், கணவன் மனைவி இருவரும் ஒன்றாக கிறிஸ்துவைப் பின்பற்றுவார்கள்.

ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு, தங்களுடைய திருமண உறவுக்காக ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து, நல்ல நட்பைப் பெறலாம் மற்றும் இறுதிவரை அவர்கள் ஒன்றாக வாழலாம். இருப்பினும், அது கிறிஸ்துவை மையமாகக் கொண்ட திருமண உறவாக இருக்க முடியாது. முதன்மையமாக & மையமாக கொண்ட என்ற வார்த்தையை நாம் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். பூமியும் மற்ற கிரகங்களும் சூரியனைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் சுழல்வதைப் போலவே, கணவன் மற்றும் மனைவியின் திருமண உறவும் இயேசு கிறிஸ்துவைச் சுற்றி வர வேண்டும். நீங்கள் இருவரும் திருமணத்தில் இணைய வேண்டும் என்பது தேவனுடைய எண்ணம் என்பதையும் அதில் தேவனுக்கு ஒரு நோக்கம் இருப்பதை நீங்கள் முதலில் உணர வேண்டும், நடைக்கையிலும், சொல்லிலும், செயல்பாட்டிலும் கிறிஸ்துவின் சாயலாக மாறுவதற்கு கணவன் மனைவி இருவரும் இணைந்து செயல்பட வேண்டும். குழந்தைகளை வளர்க்கும் விஷயத்திலும், வேலையில் ஏற்படும் பிரச்சனைகளிலும், உறவினர்களால் வரும் கஷ்டங்களிலும், இன்னும் பல இக்கட்டான சூழ்நிலைகளிலும் நாம் இயேசுவை மட்டுமே நோக்கி முன்னோக்கி செல்கிறவர்களாக இருக்கவேண்டும். கணவன் மனைவி இருவரும் இனைந்து கிறிஸ்துவை ஆராதிக்க வேண்டும். இருவரும் இனைந்து கிறிஸ்துவின் நாமத்தை உயர்த்த வேண்டும், இருவரும் இனைந்து கிறிஸ்துவை மகிமைப்படுத்த வேண்டும், இருவரும் இனைந்து கிறிஸ்துவை பின்தொடர வேண்டும், இருவரும் இனைந்து கிறிஸ்துவை பின்பற்ற வேண்டும், இருவரும் இனைந்து கிறிஸ்துவின் நற்செய்தியை பிரசங்கிக்க வேண்டும். இருவரும் இனைந்து கிறிஸ்துவுக்கு நல்ல சாட்சிகளாக வாழவேண்டும்.

2. கிறிஸ்துவை மையமாகக் கொண்ட திருமண உறவில், கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் ஊழியம் செய்துக்கொள்வார்கள்

சேவை அல்லது ஊழியத்திற்கு இயேசு கிறிஸ்துவை விட சிறந்த உதாரணம் யாரும் இருக்க முடியாது. அவர் தேவனுடைய சொருபமாய் இருப்பதை அறிந்திருந்தும், சிலுவையில் மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து தன்னுடைய பிதாவிடத்திற்கு திரும்பப் போகிறார் என்பதை அறிந்திருந்தும், இயேசு கிறிஸ்து காட்டிக் கொடுக்கப்பட்ட முந்தைய இரவு உணவின் போது சீஷர்களின் கால்களைக் கழுவ அவர் நேரம் ஒதுக்கினார். (யோவான். 13:1-17). பேதுரு பதட்டம் அடைந்ததில் ஆச்சரியமில்லை. ‘என்னைப் போன்ற அயோக்கியனின் அழுக்குக் கால்களை ஆண்டவர் ஏன் கழுவ வேண்டும்’ என்று பேதுரு நினைத்திருக்கலாம். ஆம், சீஷர்களுக்கு அது முன் மாதிரியாக இருப்பதற்கு இயேசு கிறிஸ்து அதைச் செய்தார். அதேபோல திருமண உறவில் கூட, கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும். அவர்கள் ஒருவருக்கொருவர் ஊழியம் செய்துக்கொள்ள வேண்டும். ஆனால் அவர்களின் ஊழியம் இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தை பிரதிபலிக்க வேண்டும். இந்த செயல் கடினமானதகவும் மற்றும் தாழ்மையோடு இருக்ககூடியது. சோம்பலும், தற்பெருமையும் திருமண உறவை படிப்படியாக அழித்துவிடும். தாழ்மையோடு கூடிய ஊழியம் ஒரு கணவன் தனது மனைவியை உண்மையாக நேசிக்கிறான் என்பதற்கான அறிகுறியாகும்.

3. கிறிஸ்துவை மையமாகக் கொண்ட திருமண உறவில், கணவன் மனைவி இருவரும் தாழ்மையுடன் இருப்பார்கள்

இயேசு ஒருமுறை சொன்னார், "நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்." (மத்தேயு 11:29). தாழ்மையை குறித்த விசயத்தில் கூட சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார். எத்தனை காலம் உனக்கே நீ முக்கியத்துவம் கொடுத்து வாழ்வதும், உன்னைப் பற்றியே சிந்தித்து, உன் விருப்பங்களையும், உனக்கு வேண்டியவைகளையே நிறைவேற்றுவதன் மூலம் திருப்தி அடைவது. தாழ்மை என்பது உங்கள் துணையை உங்களை விட முக்கியமானவர் என்று எண்ணி அவர்களுக்கு மதிப்பளிப்பது, அவர்களின் விருப்பங்களுக்கு மதிப்பளித்தல், அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்பது, அவர்களுக்குச் ஊழியம் செய்வது, அவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அவர்களிடம் பேசுவது, அவர்களின் கருத்துக்களைப் பகிர்ந்துக்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். கிறிஸ்துவைப் போன்ற மனதைப் பெற எல்லா தம்பதிகளும் தினமும் திருமண உறவில் விழிப்போடு இருக்க வேண்டும்.

4. கிறிஸ்துவை மையமாகக் கொண்ட திருமண உறவில் கணவணும் மனைவியும் ஒருவருக்கொருவர் மன்னிக்கிறவர்களாக இருப்பார்கள்.

கிறிஸ்தவ திருமண உறவில் இணைந்த இருவரும் மீட்கப்பட்ட பாவிகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் துணையின் வார்த்தைகள், தோற்றம், செயல்கள், சில சமயங்களில் அவர்களின் மௌனம் கூட உங்களை புண்படுத்தும் மற்றும் உங்களுக்கு அது இடையூறாக இருக்கலாம். அவர்களின் கோபத்தையும் வெறுப்பையும் உங்கள் மனதிலேயே வைத்திருந்தால், நாளடைவில் அது உங்கள் திருமண உறவில் விரிசல் ஏற்பபட்டு அழித்துவிடும். அதன் பிறகு திருமண உறவு தோழமையோடு இனி தொடராது. "ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்." (எபேசியர் 4:32) விசுவாசிகளை கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினராக்கும்படி வேதம் கட்டளையிடுகிறது என்றால், விசுவாசிகளாகவும், திருமண உறவைக் கொண்ட கணவனுக்கும் மனைவிக்கும் இந்த விதிமுறை எவ்வளவு முக்கியமானது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

5. கிறிஸ்துவை மையமாகக் கொண்ட திருமண உறவில் தியாகத்தோடு கூடிய அன்பு இருக்கும்.

இயேசுகிறிஸ்து தம்மை சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து தியாகம் செய்து நமக்கெல்லாம் ஒரு நல்ல முன்மாதிரியாக இருந்தார். ஆனால் இங்கே முக்கிய விஷயம் உங்கள் துணைக்காக உங்கள் உயிரைக் கொடுப்பது மட்டுமல்ல. சிலர் தங்கள் துணைக்காக இறக்கவும் தயாராக உள்ளனர். அவர்களுக்காக இறப்பது எளிது, ஒன்றாக தியாகத்தோடு வாழ்வது கடினம். அதற்கு கணவன் மனைவி இருவரும் இயேசு கிறிஸ்துவைப் போல ஒருவரையொருவர் தியாகமாக நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். தியாகம் செய்யும் அன்பு தன் துணைக்கு எது நல்லது, எது சிறந்தது, எது ஆரோக்கியமானது. என்பதை அறிந்து அதையே செய்யவேண்டும். உதாரணமாக, இயேசு கிறிஸ்து, "கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். (எபேசியர் 5:27). நீயும் போய் அப்படியே செய். இயேசு கிறிஸ்துவாக, நீங்கள் உங்கள் துணைக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும், மேலும் அவர்கள் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்துப்போவதற்கு உங்களை அவர்களுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் உங்கள் பங்கை நீங்கள் செய்வதன் மூலம், உங்கள் துணையை நீங்கள் உண்மையிலேயே நேசிக்கிறீர்கள் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.

6. கிறிஸ்துவை மையமாகக் கொண்ட திருமண உறவில், கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அடிக்கடி கலந்து உரையாடுகிறவர்களாக இருபார்கள்.

ஒரு கிறிஸ்தவனின் ஐக்கியம் கிறிஸ்துவுடனும் சக விசுவாசிகளுடனும் இருக்கிறது என்று அப்போஸ்தலனாகிய யோவான் கூறுகிறார். (1 யோவான் 1:3). கிறிஸ்துவுடனான ஐக்கியம் பற்றி இதற்கு முன்பே நாம் இதை குறித்து பார்த்ததால், சக விசுவாசிகளுடன் (குறிப்பாக உங்கள் துணையுடன்) ஐக்கியம் பற்றி சில வார்த்தைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒருவருக்கொருவர் பேசுவதும் அல்லது ஒன்றாக வாழ்வதில் மிக முக்கியமான பகுதியாகும். கணவன் மனைவி இருவருமே அன்றாட வாழ்க்கை உரையாடல்களில் பேசுபவர்களாகவும் கேட்பவர்களாகவும் இருக்க வேண்டும். எப்போதும் ஒருவரே பேசுவதும், எப்போதும் ஒருவரே கேட்பதும் இது நல்ல பழக்கம் அல்ல. இந்த விஷயத்தில் பலர் தோல்வியடைகிறார்கள். சில அறிவாளிகள் மனைவியிடம் அன்பாகவும், கனிவாகவும் பேசுவது ஆண்மைக் குணம் இல்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு கணவனும் தன் மனைவி சொல்வதைக் கேட்கவும், அவளிடம் பேசுவதற்கு நேரத்தை செலவிடவும் தயாராக இருக்க வேண்டும். நேரமெடுத்து அவர்களிடம் தொடர்பு கொண்டு இனிமையான நேரத்தை ஒன்றாக அனுபவிக்க வேண்டும். இதுவே ஒரு கணவனின் நல்ல பண்பாகும். 'இது நமக்குப் பொருந்தாது' என்று பெண்கள் நினைக்க கூடாது, ஏனென்றால் மேற்கூறிய விஷயங்கள் அது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் பொருந்தும். "சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; என்கிறது பரிசுத்த வேதம் (நீதிமொழிகள் 10:19). எனவே, உங்கள் திருமண உறவு ஆரோக்கியமாக இருக்க, உங்கள் கலந்து உரையாடல் தொடர்பு மற்றும் உங்கள் ஐக்கியம் ஆரோக்கியமாக இருக்க சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும். உங்களது உரையாடல் "... எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.. இருக்கட்டும்" (கொலோசெயர் 4:6).

7. கிறிஸ்துவை மையமாகக் கொண்ட திருமண உறவில், கணவன் மனைவி இருவரும் ஐக்கியத்தோடு வளருகிறவர்களாக இருபார்கள்.

இந்த பணி நாம் கிறிஸ்துவுடன் செய்கிறோம். கிறிஸ்துவின் கிருபையிலும் ஞானத்திலும் வளர வேண்டும் என்பதே ஒவ்வொரு விசுவாசியின் விருப்பமாகும். எபேசு திருச்சபை கிறிஸ்துவுடன் ஐக்கிய படவும், கிறிஸ்துவோடு நெருங்கி வரவும் அப்போஸ்தலனாகிய பவுல் ஜெபித்தார். (எபேசியர் 1:14-19). இந்த நிகழ்வால் கிறிஸ்து மகிமைப்படுகிறார். ஆனால் திருமணம் அல்லது குடும்ப உறவு என்பது திருமணத்திற்கு மட்டுமே உரியது. (ஆதியாகமம் 2:24; எபிரேயர் 13:4). கணவன் மனைவி இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையில், குறிப்பாக ஒருவருக்கொருவர் இருக்க வேண்டிய ஐக்கிய வளர்ச்சியால் கிறிஸ்து மகிமைப் படுத்தப்படுகிறார். இது பலருக்குத் தெரியாது, எனவே தான் கணவன் மனைவி உறவு அவ்வளவு முக்கியமில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால், விசுவாசியான நீங்கள், இந்த சத்தியத்தை உணர்ந்து, உங்கள் துணையுடனான உறவில் ஐக்கியத்தில் வளர்ந்து கிறிஸ்துவை மகிமைப்படுத்த வேண்டும்.

8. கிறிஸ்துவை மையமாகக் கொண்ட திருமண உறவில், கணவன் மனைவி இருவரும் கிறிஸ்துவில் நம்பிக்கையுடன் வாழ்வார்கள்.

உங்களுடைய கவனம் எப்போதும் குழந்தைகள், அவர்களின் கல்வி, வீடு, வீட்டுக்கு தேவையான, எதிர்காலத் திட்டங்கள், வங்கி இருப்புதொகை போன்றவற்றில் உங்கள் கவனம் அதிக நேரம் இருப்பதை விட, உங்கள் கவனம் கிறிஸ்துவின் மீதும், அவருடைய வாக்குறுதிகளிலும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை நீங்கள் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை என்பதை நீங்கள் காணும்போதும், ​​​​உங்கள் வேலையை நீங்கள் இழக்கும்போதும், ​​​​உங்கள் வங்கி இருப்பை சரிபார்க்கும் போதும், ​​நீங்கள் ஏமாற்றமடையலாம், ஆனால் இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருக்கும் போது ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள். (ரோமர் 10:11) மற்றும் (1 யோவான் 3:3). கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கை மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் நம்மை மீண்டும் தொடர வைக்கிறது. (கொலோசெயர் 1:24-27) "கிறிஸ்து உங்களுக்கு மகிமையின் நம்பிக்கையாக இருக்கிறார்." கணவன் மனைவி இருவரும் உங்கள் மனதை தற்காலிகமான விஷயங்களிலிருந்து விலக்கி, கிறிஸ்துவில் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையில் அதிக மகிழ்ச்சியடைய கற்றுக்கொள்ளுங்கள்.

9. கிறிஸ்துவை மையமாகக் கொண்ட திருமண உறவில், கணவன் மற்றும் மனைவி இருவரும் திருச்சபையில் ஐக்கியப்படுவார்கள்.

கிறிஸ்து திருச்சபைக்காக தனது உயிரைக் கொடுத்ததார், கிறிஸ்துவை மையமாகக் கொண்ட திருமண உறவும் திருச்சபைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. கிறிஸ்துவுக்குள் நாம் வளர்ந்து முதிர்ச்சியடையவும், பிறருக்கு அன்புடன் ஊழியம் செய்யவும், நமது வரங்களையும் திறமைகளையும் திருச்சபையின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தவும், ஒன்றாக ஆராதிக்கவும், தியாகத்துடன் கூடிய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் கற்றுக் கொள்ளவும், வேதத்தின்படியான வாழ்க்கை மற்றும் பக்தி பற்றிய புரிதலை அதிகரிக்கவும், தயாராகவும். கிறிஸ்துவை இரண்டாம் வருகையில் சந்திக்க நமக்கு திருச்சபை மிகவும் அவசியம். நிச்சயமாக தேவனின் பார்வையில் திருமணத்தை விட திருச்சபையே முக்கியமானது (இயேசு திருமணத்திற்காக மரிக்கவில்லை). ஆகவே, கணவன் மனைவி இருவரும் திருச்சபையில் இணைக்கப்பட்டு கிறிஸ்துவின் சரீர அங்கத்தினர்களாக தங்களின் பங்களிப்பை சரியாகச் செய்வது மிகவும் முக்கியம்.

கிறிஸ்துவை மையமாகக் கொண்ட திருமண உறவைப் பற்றி இந்த கட்டுரையில் இதுவரை சொல்லப்பட்டதை நடைமுறைப்படுத்துவது எளிதான காரியம் அல்ல. அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவருவது என்பது மிகுந்த கடின உழைப்புடன் கூடியது அதற்கு அவருடைய ஆவியின் உதவி நமக்கு தேவை. எல்லாவற்றிலும் (குறிப்பாக திருமணத்தின் மூலம்) கிறிஸ்துவை மகிமைப்படுத்த ஒரு வலுவான, ஆழமான பற்றுதல் நமக்கு இருக்க வேண்டும். கிறிஸ்துவை உங்கள் திருமணத்தின் மையமாக ஆக்குவதன் மூலம் வரும் எல்லையில்ல திருப்தியை கிறிஸ்துவுக்குள் ஒவ்வொரு திருமண தம்பதிகள் காண வேண்டும் என்பதே எனது ஜெப வேண்டுதலாக இருக்கிறது.

Add comment


Security code
Refresh

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.