பெந்தேகோஸ்தே சபைகளில் பேசப்படும் அந்நியபாஷையைக் குறித்து இன்று பலருக்கும் பலவிதமான கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கின்றன. இந்த வரம் எல்லோருக்கும் உரியதா? அல்லது குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் உரியதா? இது பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தின் அடையாளமா? அன்னியபாஷை பேசுபவர்கள் மட்டுமே பரலோகம் செல்ல முடியுமா? அந்நியபாஷை பேசாதவர்களிடத்தில் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறாரா? இல்லையா? போன்ற கேள்விகளும் சந்தேகங்களும் பலருக்கு இருக்கின்றன.
இதுகுறித்து ஒரு தெளிவைப்பெற எந்த ஒரு செய்தியையோ விளக்கத்தையும் நாம் கேட்டாலும், அது ஆளுக்கு ஆள், ஊழியருக்கு ஊழியர் கொடுக்கும் விளக்கங்களும் வேறுபடுகின்றன. ஆகவே, வேத புத்தகத்தில் தேவன் அந்த வரத்தை கொடுத்ததன் நோக்கம் என்ன? அதை எப்படி பயன்படுத்த வேண்டும்? எப்பொழுது பயன்படுத்த வேண்டும்? என்ற கேள்விகளுக்கு விடை கிடைப்பது அரிதாகவே இருக்கிறது.
ஆகவே, முழு வேத புத்தகத்திலும் அந்நியபாஷை குறித்து என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து, எல்லா வசனங்களும் பொருந்திவரும் வகையில் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் விதமாக இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறேன். அந்நியபாஷையின் வரம் என்றால் என்ன? இன்று பேசப்படும் அந்நியபாஷை உண்மையா? பொய்யா? அதை எப்படி/எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்ற உண்மையான தேடலுடன், அதைப்பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ள வாஞ்சிக்கும் எந்த ஒரு விசுவாசிக்கும், இந்த புத்தகம் நிச்சயம் உதவி செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
குறிப்பாக இந்த புத்தகத்தை எழுதுவதற்கு, ஜான் மெக் ஆர்தர் (John MacArthur) அவர்களின் வேத ஆராய்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்தப் புத்தகத்தில் உள்ள விளக்கங்கள் அவரது வேத ஆராய்ச்சியை ஒட்டியே அமைந்திருக்கும். இந்த புத்தகத்தின் மூலம் அந்நியபாஷையைக் குறித்த ஒரு தெளிவைப்பெற பரிசுத்த ஆவியானவர் தாமே உங்களுக்கு உதவி செய்வாராக.