கட்டுரைகள்

ஸ்காட்லாந்து தேசத்திலே ஒருமுறை ஒரு மாறுவேடப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. போட்டி நடத்துபவர்கள், உலகத்திலே மிகவும் பிரபலமான ஒரு மனிதரைக் குறிப்பிட்டு, போட்டியில் கலந்து கொள்பவர்கள் அனைவரும், அந்த பிரபல மனிதர்ன் குரலிலே பேசி, அவரைப்போலவே பாவனைகள் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள். உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பல கலைஞர்கள் இந்த மாறுவேடப் போட்டியில் கலந்துக் கொண்டார்கள். அவர்கள் எந்த பிரபல மனிதரைப்போல நடிக்கப் போகிறார்களோ, அந்த பிரபல நபரும் யாருக்கும் தெரியாமல் அதே மாறுவேடப் போட்டியிலே கலந்து கொண்டார். போட்டிகள் முடிவுற்று முடிவுகள் வெளியான போது, தன்னையே நடித்துக் காட்டின அந்த பிரபல நபருக்கு இரண்டாம் பரிசே கிடைத்தது. யாரோ ஒருவர் அவரைப் போலவே, அவரைவிட சிறப்பாக நடித்து, முதல் பரிசைத் தட்டிச் சென்றுவிட்டார்!

இன்றைக்கும் கிறிஸ்தவர்களில் பலரும், பல நேரங்களில், பல இடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே கசப்பான உண்மை! இந்த மாறுவேடப் போட்டியில் பங்கு பெற்றவர்களைப் போல, யாரோ ஒருவரைப் பற்றி அவர்கள் நடிப்பதில்லை, தங்களைப் பற்றி தாங்களே நடித்துக் கொண்டிருக்கிறார்கள்! உலகம் ஒரு நாடகமேடை, அதில் நாம் அனைவரும் நடிகர்கள் என்று ஷேக்ஸ்பியர் கூறியது நம் அனைவருக்கும் நினைவிருக்கலாம். உலகத்திலே உள்ள கிறிஸ்தவரல்லாத மக்களைப் பற்றி இங்கே நாம் கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால், வேத வாக்கியங்கள் அவர்களுக்குத் தெரியாததினால், அவர்கள் எப்படி வாழவேண்டும் என்று விரும்புகிறார்களோ அப்படி அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு கிறிஸ்தவன் அப்படித் தன் இஷ்டம் போல் வாழ முடியாது. தேவன் தன் பிள்ளைகள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான தெளிவான கட்டளைகளைக் கொடுத்திருக்கிறார். அதன் படி நாம் வாழ வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். வேத வசனங்களை அறிந்து, தேவன் இப்படிதான் தன்னை வாழ சொல்கிறார் என்பதை அறிந்திருக்கிற ஒரு கிறிஸ்தவன், அப்படி வாழ மனமற்றவனாய், இருக்கும் இடத்திற்கும் சமயத்திற்கும் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொள்ளும் போது, கிறிஸ்தவ உலகில் வீட்டிலும், திருச்சபையிலும், வேலை ஸ்தலத்திலும், வெளியிடங்களிலும் பல நாடக மேடைகளை அமைத்து, அவனே சிறந்த நடிகனாக நடித்துக் கொண்டிருக்கிறான்!

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும், பிரியமும், பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியதக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள் (ரோமர் 12:2). இங்கே பவுல் கூறுவது என்ன? ஒரு விசுவாசி திருச்சபையிலேயும் கூட தன்னைச்சுற்றி இருக்கிறவர்களுக்கு இணையாக வேஷம் தரிக்கக் கூடாது. திருச்சபையிலே இருக்கிற பலரும் தங்களை சுற்றி ஏதோ வெளிச்சம் பிரகாசிப்பதைப் போல நடந்து கொள்கிறார்கள். ஆனால் நீங்கள் மிக அருகிலே போய்ப் பார்த்தால் தான் மற்றவர்களை குறித்து எவ்வளவு கேடாய் பேசுகிறார்கள், அவர்களுடைய வார்த்தை எவ்வளவு சுத்தமில்லாததாய் இருக்கிறது என்பது தெரியும்! திருச்சபைக்குள்ளாக சமாதானம் என்று கூறிக்கொள்வார்கள்! பிரசங்க பீடத்திலே நின்று பிரசங்கித்தவர், அப்பொழுது தான் திருச்சபை அன்பால் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று பிரசங்கித்திருப்பார்! ஆனால் அதே ஆராதனை முடிவதற்கு முன்னால், ஏதோ ஒரு பிரச்சனையை முன் வைத்து வெளியே சண்டை ஆரம்பித்திருக்கும்! சிலர் திருச்சபையிலே மிகவும் நல்லவர்களைப் போல காட்டிக்கொள்வார்கள்; ஆனால் வேலை ஸ்தலத்திலோ தான் ஒரு கிறிஸ்தவன் என்பதற்கான சாட்சியை இழந்திருபார்கள். பிரியமானவர்களே! ஒரு கர்த்தருடைய பிள்ளை இப்படி இருக்க முடியாது.

தேவ மனிதரான பில்லி கிரஹாமை பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். அவரைப் பற்றி அவருடைய மகனிடம், உங்கள் தந்தையார் ஒரு சிறந்த பிரங்கியார் என்று நாங்கள் அறிவோம், அவரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்ட பொழுது, அவருடைய மகன் சொன்ன பதில் என்ன தொர்யுமா? அவர் அங்கே பிரசங்கபீடத்திலே என்ன பிரசங்கிகிறாரோ, அதையே வீட்டிலும் செய்கிறார் என்று சொன்னாராம். நாம் ஒவ்வொருவரும், இந்த உலகத்திலே, வாழ்க்கையிலே நடிப்பது மிகவும் எளிதானது. மாயக்காரரே! என்று கர்த்தர் சொல்லுகிறாரல்லவா? அப்படி வாழ்வது எளிது. ஒரு மனிதன் நாடகத்திலே மிகவும் வித்தியாசமான குண நலனை வெளிப்படுத்துகிறான். நாடகத்திலே எந்த நேரத்திலே எப்படி செயல் பட வேண்டுமோ அப்படி அவன் செயல்படுகிறான். நாமும் நம்முடைய உண்மையான வாழ்க்கையிலே, உள்ளத்திலே உண்மையாக உணராத காரியங்களை செயல்படுத்தும் பொழுது, நாமும் மாய்மாலக்காரராய் இருக்கிறோம். உண்மையாகவே நாம் எப்படி இல்லையோ, அப்படி நம்மைக் காட்டிகொள்ள நாம் முற்படும் பொழுது, நம்முடைய வாழ்க்கைக்காக தேவன் வைத்திருக்கும் சித்தத்தையும் நாம் உணர்ந்துகொள்ள முடியாதவர்களாய் போய்விடுவோம்

ஒரு விசுவாசி, பரிசுத்த ஆவியானவர் அவனுக்குள்ளே வாசம் பண்ணுகிற காரணத்தினாலே, அவனுடைய வாழ்க்கையை அவர் மறுரூபப் படுத்திருக்கிறதினாலே, அவன் புதிய மனதோடே கூட வித்தியாசமான வாழ்க்கை வாழ அழைக்கப்பட்டிருக்கிறான். பரிசுத்த ஆவியானவர் நம்முடைய மனதைப் புதுப்பிக்க நாம் அனுமதி கொடுக்கும் பொழுது, தேவனுடைய சித்தத்தை நாம் கண்டுகொள்ள முடியும். பிலிப்பியர் 4:13ல் என்ன வாசிக்கிறோம்? என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலனுண்டு. ஆம், பிரியமானவர்ளே ஒரு விசுவாசி தன்னுடைய வாழ்க்கையிலே தேவனுடைய சித்தம் எதுவோ, அதைச்செய்ய பெலன் பெற்றிருக்கிறான்.

நாம் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும், பிரியமும், பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியதக்கதாக, நம்முடைய மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாக அழைக்கப்படிருகிறோம். இதற்கு அடிப்படை, நம்முடைய சரீரங்களைப் பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமான ஜீவபலியாக அவருக்கு ஒப்புகொடுத்து, ஒவ்வொரு நாள் காலையிலேயும், ஆண்டவரே இது உம்முடைய நாள், நான் உம்மோடு இணைந்து, உம்முடைய சித்தத்தை செய்யப் போகிறேன். நீர் என் மூலமாய் வாழப்போகிறீர்; அதற்காக உமக்கு ஸ்தோத்திரம் என்று சொல்ல வேண்டும். இதுவே மகிழ்ச்சியின் பாதை! இதுவே வாழ்க்கையில் பூரணமடையும் ஒரு வாழ்க்கை! அருமையானவர்களே, நீங்கள் உங்கள் வாழ்க்கையை ஒரு நாடகமாக நடித்துக் கொண்டிருப்பீர்கள் என்றால், அதை விட்டு விட்டு உண்மையான ஒரு வாழ்க்கை வாழ, உங்களை அற்பணியுங்கள்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.