கட்டுரைகள்

வேதபுத்தகத்திலே பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் பல தலைவர்களைப் பற்றி நாம் வாசிக்கிறோம். அவர்களில் சிலர் தேவ ஜனங்களை வழி நடத்தி சென்றார்கள். சிலர் இஸ்ரவேல் மக்களை நியாயம் விசாரித்திருக்கிறார்கள். பலர் தீர்க்கதாரிசிகளாய் இருந்திருக்கிறார்கள். சிலர் தேசத்தை அரசாண்டிருக்கிறார்கள். பலர் தேவ பலத்துடன் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்துகாட்டி அனேகருக்கு முன் மாதிரிகளாய் இருந்திருக்கிறார்கள். பலர் தேவனுக்கென்று இரத்த சாட்சிகளாய் மரித்தும் இருக்கிறார்கள். வேத புத்தகத்தை தவிர, உலக சரித்திரத்திலேயும் ஜான் வெஸ்லி, பில்லி கிரஹாம், அதோனிராம் ஜட்சன், சி. டி. ஸ்டட், பிஷப் ஹீபர் போன்ற பல தலைவர்களைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். இவர்களின் வாழ்க்கைப் பாதையை நாம் திரும்பி பார்க்கும் பொழுது, பலதரப்பட்ட பின்னனியங்களில் இருந்து பல நிலைகளில் தேவனுடைய ஊழியத்தை நிறைவேற்ற அழைக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் அத்தனை பேரின் நோக்கமும் தேவனுடைய சித்தத்தை செய்து, கிறிஸ்துவை தங்களுடைய வாழ்க்கையிலே பிரதிபலித்து, தேவனுக்கு மகிமை சேர்ப்பதாகவே இருந்திருக்கிறது!

சற்றே பின்னோக்கிச்சென்று, பழைய ஏற்பாட்டில் மோசேயின் வாழ்க்கையையும், புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலனாகிய பவுலினுடைய வாழ்க்கையையும் நாம் சிந்தித்துப் பார்ப்போம். தேவனுடைய ஊழியத்தை நிறைவேற்ற, தங்களுடைய வாழ்க்கையை முதலாவது சாட்சியுள்ளதாக மாற்றினார்கள்; பிறகு மக்களை தேவனுக்கு நேராக வழி நடத்தினார்கள். தங்கள் கைகளிலே தேவன் கொடுத்திருந்த ஜனங்களுக்காக அவர்கள் எதையும் செய்ய ஆயத்தமாயிருந்தார்கள்! இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தபோது, அவர்களை அழித்து விட்டு உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன் என்று தேவன் சொன்னபோது, மோசே அவர்களுக்காக் கெஞ்சி பிரார்த்தித்தான். மேலும், தேவரீர் அவர்களுடைய பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும், இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புத்தகத்திலிருந்து என்னுடைய பேரைக் கிறுக்கிப்போடும் என்றான். (யாத் 32:32)

மோசையைப் பின்பற்றி, அப்போஸ்தலனாகிய பவுலும் தன் ஜனத்தார் மேல் எத்தனை கரிசனை உள்ளவராக இருந்தார் என்பதை நாம் ரோமர் 9:1-3 வசனங்களில் வாசிக்கிறோம். தான் ஒருவன் சபிக்கப்பட்டு போனாலும், அதன் மூலம் இஸ்ரவேல் மக்கள் கிறிஸ்துவை அறிந்து கொள்வார்கள் என்றால், அதற்கும் தான் ஆயத்தமாய் இருப்பதாக சொல்கிறார்! தங்கள் ஜனங்களே தங்களை கொலைசெய்ய எத்தனித்த போதும், அவர்களை மன்னித்து, அவர்களுக்காக திறப்பிலே நின்றவர்கள்! என்னே! ஒரு கரிசனை! என்னே! ஒரு சாந்த குணம்! இவர்களெல்லாம் தங்கள் சொகுசான வாழ்க்கையை விட்டுக்கொடுத்தார்கள்! தேவன் பிரியப்படாத எதையும் தங்கள் வாழ்க்கையிலே அனுமதிக்காதவர்கள்! உலக வாழ்க்கையையும், மனுஷரால் வரும் மேன்மையையும் அற்பமாய் எண்ணினவர்கள்! தங்களை மறைத்து கிறிஸ்துவை பிரதிபலித்தவர்கள்! தேவ சித்தம் செய்ய தங்களை அற்பணித்தார்கள்! விலையேறபெற்ற கல், பொன், வெள்ளி போன்றவற்றை வைத்து தேவனுடைய ராஜ்ஜியத்தைக் கட்டியவர்கள்! தேவ சித்தம் ஒன்றையே தங்கள் வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டவர்கள்!

சற்றே முன்னோக்கி வந்து, இன்றைக்குத் தங்களைத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்களின் வாழ்க்கையையும் நாம் சற்று சிந்தித்துப் பார்போம். தங்களுடைய வாழ்க்கை எத்தனை சீர்கெடதாக இருந்தாலும் பரவாயில்லை; ஆனால், தங்கள் திருச்சபை மக்கள் பாரிசுத்தமான வாழ்க்கை வாழவேண்டும் என்று நினைப்பவர்கள். மது பானத்திற்கு அடிமையான திருச்சபை போதகர்களைப் பற்றி நான் கேள்வி பட்டிருக்கிறேன். திருச்சபையின் சொத்துக்களைத் திருடி, பிறகு கண்டுபிடிக்கப்பட்டு சிறை சென்ற போதகர்களும் உண்டு! சொத்துக்காக சகோதரனை கொலை செய்து, கொலைகாரனான பிரசங்கியார்களும் உண்டு! தங்கள் இஷ்டப்படி நடக்க வில்லை என்பதற்க்காக பழிவாங்ககும் திருச்சபைத் தலைவர்களும் உண்டு! திருச்சபை மற்றும் ஊழிய ஸ்தாபனங்களின் பொறுப்புகளில், தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களையும், தங்கள் ஜாதியை சேர்ந்தவர்களையும் அல்லது தங்களுக்கு வேண்டப்பட்டவர்களையும் கொண்டுவருவதற்கு மிகுந்த பிரயாசப்படும் தலைவர்களும் உண்டு! அரசியலிலே சிறந்து விளங்க வேண்டுமா? கிறிஸ்தவ திருச்சபைகளுக்கு சென்று அங்கே அவர்கள் எப்படி அரசியல் செய்கிறாகள் என்று கவனித்துப்பார். பிறகு உன்னை மிஞ்ச யாராலும் முடியாது! என்ற முதுமொழி தோன்றுமளவுக்கு, திருச்சபையில் அரசியல் செய்வோரும் உண்டு! இன்னும் எத்தனையோ காரியங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்!

இன்றைக்குத் திருச்சபைகளிலேயும், ஊழிய ஸ்தாபங்களிலேயும் சிறந்தத் தலைவர்களின் பற்றாக்குறைக்கு மிக முக்கிய காரணம், தேவன் தன்னுடைய ஊழியத்திற்கென்று அழைக்காத பலரும், ஏதோ ஒரு ஆதாயத்திற்காக, ஊழியத்தில் ஈடுபட்டிருப்பதே! திருச்சபைகளில் பிரச்சனைகளுக்கும், குழப்பங்களுக்கும் மற்றுமொரு காரணம், உலக வாழ்க்கையிலே அல்லது வியாபாரத்திலே சிறந்து விளங்கும் கிறிஸ்தவர்களை அழைத்து திருச்சபையிலே பொறுபான இடங்களிலே அமர்த்துவதுதான்! மேலோட்டமாக பார்க்கும் பொழுது, இதிலே தவறென்ன இருக்கிறது என்பது போல தோன்றும். ஆனால் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகத்திலே இரண்டு விதமான ஞானம் உண்டு. ஒன்று தேவ ஞானம்; மற்றொன்று உலக ஞானம். தேவனுடைய ஊழியத்திற்கென்று தேவனால் பிரிதெடுக்கப்படாதவர்கள், அதற்கென்று சாரியாக ஆயத்தப்படாதவர்கள் தேவனுடைய ஊழியத்தில் ஈடுபடும்பொழுது, அவர்கள் உலகத்தின் விதிமுறைகளின் படி செயல்படுவார்கள்; ஆனால் ஆவிக்குறிய பகுத்தறிவு அவர்களுக்கு இருக்காது. உலகத்தின் திட்டங்கள், நிகழ்வுகள் திருச்சபைக்குள்ளேயும், கர்த்தருடைய ஊழியத்திலேயும் வேலை செய்யாது! இவர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தை கட்டாமல், தங்களுடைய ராஜ்ஜியத்தை கட்டவே முயற்சி செய்வார்கள். தேவனை மறைத்து தங்களையே வெளிகாட்டுவார்கள். தேவனுடைய ஊழியத்தை செய்கிறோம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல், தாங்கள் எது சரி என்று நினைக்கிறார்களோ அதையே செய்வார்கள்.

அன்பானவர்களே, தொடர்ந்து பாவத்திலே வாழுகிற எந்த ஒரு ஊழியரையோ, போதகரையோ, தனி மனிதனையோ தேவன் பயன் படுத்துகிறதில்லை. அவர்கள் எவ்வளவு பெயர் பிரஸ்தாபம் பெற்றவர்களாயிருந்தாலும் சரி, எவ்வளவு தாலந்து நிறைந்தவர்களாயிருந்தாலும் சரி, அவர்கள் தேவனுக்கென்று எதையுமே செய்ய முடியாது! ஏனென்றால், அவர்கள் செய்வதை தேவன் ஏற்றுக்கொள்கிறதில்லை! அவர்கள் எல்லாரும், மரத்தினாலும், வைக்கோலினாலும் கட்டிடத்தைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். பிரியமானவர்களே, நீங்கள் தேவனுடைய ஊழியத்தில் ஏதேனும் பொறுப்பில் இருப்பீர்கள் என்றால், உங்களுடைய வாழ்க்கை எப்படிபட்டதாக இருக்கிறது? உங்களுடைய ஊழியம் எதன் அடிப்படையில் நடைபெறுகிறது? தேவனுடைய சித்தத்தின் அடிப்படையிலா? அல்லது மனித சித்ததின் அடிப்படையிலா? நாம், இயேசு கிறிஸ்துவின் நீதியை தரித்தவர்களாய் இருக்க வேண்டும்; அதற்குத் தக்கதாய் ஒரு வாழ்க்கை வாழ்கிறவர்களாய் இருக்க வேண்டும்! தேவன் தெரிந்துக்கொண்ட தலைவர்களின் ஊழியங்களிலேயும் பிரச்சனைகளும், பாடுகளும் வந்தது! தேவனுடைய சித்தத்தின் படி அவர்கள் தெரிந்து கொள்ளப்பட்டதினால் தேவன் அதை கையில் எடுத்தார். தேவன் தொரிந்துகொள்ளாத தலைவர்களின் ஊழியத்திலேயும் பாடுகளும் பிரச்சனைகளும் வருகிறது. தேவன் அவர்களை தொரிந்துகொள்ளாததினால் அவர்கள் பிரச்சனைகளிலேயே சிக்கித் தவிக்கிறார்கள்! அன்றும்... இன்றும்... தேவை தேவ சித்தமே...!

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.