ஆசிரியர்: சாம் ராமலிங்கம்
அகதிகளால் ஆரம்பிக்கப்பட்ட அந்தியோகியா சபை
ஆதித்திருச்சபையாகிய எருசலேமில் 120 சீஷர்களால் உருவானது (அப்.1:15). இதர திருச்சபைகள் பிலிப்பு, பேதுரு, பவுல், பர்னபாவால் சந்திக்கப்பட்டு சீடர்களாக எழும்பிய விசுவாசிகளால் தொடங்கப்பெற்றது (அப்.8:5, 8,10:24,44). ஆனால் அந்தியோகியா சபை அப்படியின்றி, பெயர் குறிப்பிடப்படாத அகதிகளால் ஆரம்பிக்கப்பெற்ற சபையாகும் (அப்.11:19-20).
திருவாளர் கு.று. கிராண்ட் இதைக்குறித்து, “இங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தற்பெருமை சிறிதேனும் இல்லை. அவ்வூழியத்தை நிறைவேற்றிய மனிதர்களில் ஒருவரது பெயரும் குறிப்பிடப்படவில்லை. இஃது எத்தனை மேன்மை வாய்ந்தது” என்று கூறுகிறார். கிறிஸ்தவம் அந்தியோகிவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி, சபையின் முன்னேற்றப் பாதையில் ஒரு முக்கியமான படியாகும்.
பாலஸ்தீனத்திற்கு வடக்கே அமைந்திருந்த சிரியா நாட்டில் ஓரண்டஸ் என்னும் ஆற்றுப்படுகையில் இருந்த அந்தியோகியா பட்டணம்;, ரோமப் பேரரசில் மூன்றாவது நகரமாகவும், “பண்டைய உலகின் பாரிஸ் மாநகரம்” என்றும் சிறப்புப் பெயர் பெற்றிருந்தது. இங்கிருந்து தான் பவுலும் உடன் ஊழியரும் மிஷனரிப் பயணங்களைத் தொடங்கினார்கள். அப்பயணங்களின் வாயிலாக நற்செய்தி புறவினத்தாருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
உபத்திரவத்தினால் உருவான அந்தியோகியா சபை (அப்.11:19, 20)
ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்பட்டபின் (7:58-60), எருசலேமில் சீடர்களுக்கு உபத்திரவத்தினிமித்தம் சீடர்கள் சிதறடிக்கப்பட்டனர். அந்த நேரத்தில் குறைந்தது ஒரு பதினைந்தாயிரம் சீடர்களாவது இருந்திருக்க வேண்டும். ஒரு சிறிய கணக்கு: அப்.1:15ல் - 120, அப்.2:41ல் - 3000, அப்.4:4ல் - 5000, அப்.5:14ல் திரளான புருஷர்களும், ஸ்தீரிகளும் (எண்ணமுடியவில்லை). அப்.8:1ல் அப்போஸ்தலர் தவிர இதர சீடர்கள் அனைவரும் யூதேயா, சமாரியா தேசங்களில் சிதறடிக்கப்பட்டனர்; அப்.8:5ல் பிலிப்பு (பந்தி விசாரிக்கும் எழுவரில் ஒருவன் அப். 6:5) சமாரியாவிற்கு சென்று அங்கே சுவிசேஷம் அறிவிக்கிறார், அப்.11:19ல் சிதறடிக்கப்;பட்டவர்கள் பெனிக்கேநாடு, சீப்புருதீவு மற்றும் அந்தியோகியா பட்டணம் வரை சுற்றித்திரிந்து அங்குள்ள யூதர்களுக்கு வசனத்தைப் பிரசங்கித்தனர். ஆகவே இந்த சபை உபத்திரவத்தினால் சிதறடிக்கப்பட்ட சீடர்களின் முயற்சியால் உருவானது.
பெயரிடப்படாத சீடர்களால் உருவான அந்தியோகியா சபை (அப்.11:20)
சிதறடிக்கப்பட்ட யூதக் கிறிஸ்தவர்கள் பெனிக்கே நாடு, சீப்புருதீவில் உள்ள யூதர்களுக்கு சுவிசேஷம் அறிவித்தனர் (அப்.11:19). சீப்புருதீவார், சிரேனே பட்டணத்தாருக்கு சுவிசேஷம் அறிவித்திருக்க வேண்டும் (அப்.11:20). சிரேனே பட்டணத்தாரும், சீப்புரு தீவார் சிலரும் அந்தியோகியா வரை சென்று சுவிஷேசம் அறிவித்தனர். அந்தப் பெயரிடப்படாத சிரேனே மற்றும் சீப்புரு தீவில் உள்ள சீடர்களால் ஆரம்பிக்கப்பட்ட சபையே இந்த அந்தியோகிய சபையாகும்.
அந்நிய ஜாதியார் நிறைந்த அந்தியோகியா சபை (அப். 11:20)
அப்.11:20ம் வசனம் இவ்வாறு சொல்கிறது, “சீப்புரு தீவாரும், சிரேனே பட்டணத்தாரும் அந்தியோகியாவில் இருந்த கிரேக்கருக்கு கர்த்தராகிய இயேசுவைக்குறித்துப் பிரசங்கித்தார்கள்”. அந்தியோகியாவில் இருந்தவர்கள் அனைவரும் புறஇன மக்களான கிரேக்கர்கள் ஆவர்.
ஆண்டவரின் கரத்தைக் கண்ட அந்தியோகியா சபை (அப். 11:21)
அந்தப் புறவின மக்களோடே கர்த்தரின் கரம் இருந்தது (அப்.11:21). அதினால் வசனத்தைக் கேட்டவர்கள் விசுவாசித்து இயேசுவை ஏற்றுக் கொண்டார்கள். கலா.3:28ல் சொல்லப்பட்டபடி யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசம் பாராட்டாதபடி, கர்த்தருடைய கரம் அந்தியோகியா பட்டணத்தாரிடம் இருந்தது.
ஆண்டவரின் கிருபை நிலைத்திருந்த அந்தியோகியா சபை (அப்.11:23)
அந்தியோகியா பட்டணத்தார் விசுவாசிகளானதைக் குறித்து கேள்விப்பட்ட எருசலேம் சபையார், பர்னபாவை அந்தியோகிவுக்கு அனுப்பினார்கள். அந்தியோகியா வந்த பர்னபா அந்த மக்களிடம் ஆண்டவருடைய கிருபை நிலைத்திருப்பதை பர்னபா கண்கூடாகக் கண்டார். எனவே, கர்த்தரிடத்தில் மன உறுதியாய் நிலைத்திருக்கும்படி அவர்களுக்கு புத்தி சொன்னார்.
அநேக ஜனங்களை கர்த்தரண்டை சேர்த்த அந்தியோகியா சபை (அப்.11:24)
நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும், விசுவாசத்தினாலும் நிறைந்த பர்னபாவின் தலைமைத்துவம் புதிதாகத் தோன்றிய அந்தியோகியா சபைமக்களுக்கு கிடைப்பது எவ்வளவு சிறந்தது! அதனால் அந்தியோகிவில் அநேக ஜனங்கள் தொடர்ந்து சந்திக்கப்பட்டு, இரட்சிக்கப்பட்டு கர்த்தரிடமாய் சேர்க்கப்பட்டனர்.
ஆண்டவரின் உபதேசம் பிரசங்கப்பண்ணப்பட்ட அந்தியோகியா சபை (அப்.11:25, 26)
இந்த சபையின் தலைமைத்துவத்தில் இருந்த பர்னபா தர்சுப் பட்டணத்து சவுலை அந்தியோகியாவுக்கு அழைத்துவந்தார். பர்னபாவும், சவுலும் கிட்டத்தட்ட ஒருவருஷ காலமாக அந்தியோகியா பட்டணத்தில் உள்ள திருச்சபைக்கு இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தை பிரசங்கித்து வந்தனர்.
ஆண்டவரின் சீடர்களுக்கு அடையாளத்தைக் கொடுத்த அந்தியோகியா சபை (அப்.11:26)
பவுலும் பர்னபாவும் தலைவர்களாக இருந்து ஊழியம் செய்து வந்த இந்த அந்தியோகியவில் சீடர்களுக்கு “கிறிஸ்தவர்கள்” (‘கிறிஸ்து’ அவர்கள்) என்ற அடையாளம் கொடுக்கப்பட்டது.
ஆபத்பாந்தவர்களால் நிறைந்த அந்தியோகியா சபை (அப்.11:25-30)
“உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும்” அந்தியோகியாவுக்கு வந்து அகபு என்ற தீர்க்கதரிசியால் அறிவிக்கப்பட்ட போது, அந்தியோகியாவில் உள்ள சீடர்கள் அவரவர் திராணிக்குத்தக்கதாக யூதேயாவில் குடியிருக்கிற சகோதரருக்கு உதவியாக பணம் சேகரித்து பர்னா சவுல் மூலம் எருசலேம் சபை மூப்பர்களுக்கு அனுப்பினார்கள்.
ஆவிக்குரிய தலைவர்களை தன்னகத்தே கொண்ட அந்தியோகிய சபை (அப்.13:1)
அந்தியோகியா சபையில் ஜனங்களை வழிநடத்த பர்னபா, நீகர் என்னப்பட்ட சிமியோன், சிரேனே ஊரானாகிய லுகி, காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீன், சவுல் என்னப்பட்ட பவுல் ஆகிய ஆவிக்குரிய தலைவர்கள் இருந்தனர்.
ஆண்டவரை ஆராதித்த அந்தியோகியா சபை (அப்.13:2)
ஆண்டவரை ஆராதிக்கும் காரியத்தில் அந்தியோகியா சபை சிறந்து விளங்கியது. அந்தியோகியா சபையார் தங்கள் தலைவர்களுடன் சேர்ந்து அடிக்கடி உபவாசித்து கர்த்தரை ஆராதித்தார்கள்.
ஆண்டவரின் பணிக்கு ஆட்களை அனுப்பிய அந்தியோகியா சபை (அப்.13:2-3)
அந்தியோகியா சபையில் இயேசுவின் நேரடி அப்போஸ்தலர்களுடைய தலைமை எதுவும் இல்லை. ஆயினும் அவர்கள் பர்னபா மற்றும் சவுலின் தலைமையில் நன்கு விசுவாசத்தில் வளர்க்கப்பட்டிருந்தனர். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட, வேகமாக வளரக்கூடிய சபை, பர்னபாவையும் சவுலையும் இழப்பது ஒரு பெரிய இழப்பாகவே இருந்தாலும், கர்த்தர் தாம் அழைத்த ஊழியத்திற்காக அவர்களைப் பிரித்து அனுப்பும்படி ஆவியானவர் மூலம் திருவுளம் பற்றியபோது (அப்.13:2), அவர்கள் உடனே கீழ்ப்படிந்து ஆண்டவரின் பணிக்கு ஆட்களை அனுப்பினர்.
அப்.1:8ல் ஆண்டவர் சொல்லிய ‘எருசலேம், யூதேயா, சமாரியா, உலகின் கடைமுனை’ ஆகிய நான்கு பகுதிகளில் இயேசுவுக்கு சான்று பகர்தல் மற்றும் நற்செய்தி அறிவிக்கும் திட்டத்தில் முதல் மூன்று பகுதியை ஆதித்திருச்சபையான எருசலேம் சபை நிறைவேற்றியது. நான்காம் பகுதியான ‘உலகின் கடைமுனை’ என்பதை இந்த இரண்டாவது திருச்சபையான அந்தியோகியா திருச்சபை நிறைவேற்றியது என்றால் அது மிகையாகாது. ஒவ்வொரு திருச்சபையும் அந்தியோகியா சபையைப் பின்பற்றி ஊழியம் செய்தால் நிச்சயம் நாம் ‘உலகின் கடைமுளை’ வரை நற்செய்தியை எடுத்துச் செல்வது சாத்தியமே!