1 | மோசே மறுமொழியாக, “இதோ, அவர்கள் என்னை நம்ப மாட்டார்கள்: என் பேச்சைக் கேட்கவும் மாட்டார்கள்.ஏனெனில்ஆண்டவர் உனக்குக் காட்சியளிக்கவில்லை”என்று சொல்வார்கள்” என்று கூறினார். |
2 | ஆண்டவர் அவரை நோக்கி, “உன் கையில் இருப்பது என்ன?” என்று கேட்டார்.ஒரு கோல்”என்றார் அவர். |
3 | அதைத்தரையில் விட்டெறி”என ஆணை விடுத்தார் ஆண்டவர்.அவரும் அதைத் தரையில் விட்டெறிந்தார்.அது ஒரு பாம்பாக மாறியது.அதனருகிலிருந்து அவர் விலகி ஓடினார். |
4 | ஆண்டவர் அவரை நோக்கி, “நீ உன் கையை நீட்டி வாலைப் பிடித்துத் தூக்கு” என்றார்.-அவரும் தம் கையை நீட்டி அதனைத் தூக்கினார்.அது அவருடைய கையில் கோலாக மாறிவிட்டது.- |
5 | “இது, தங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர்-ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்-உனக்குக் காட்சியளித்தார் என அவர்கள் நம்பி ஏற்றுக் கொள்வதற்காகவே”. |
6 | மேலும் ஆண்டவர் அவரை நோக்கி, “உன் கையை உன் மடிக்குள் இடு” என்றார்.அவ்வாறே அவர் தம் கையைத் தம் மடிக்குள் இட்டார்.அதை வெளியே எடுத்தபோது, அந்தோ, அவரது கை தொழுநோய் கண்டு உறைபனி நிறமாயிருந்தது. |
7 | பின்னர் ஆண்டவர், “உன் கையை உன் மடிக்குள் மறுபடியும் இடு” என்றார். அவ்வாறே அவரும் தம் கையை மறுபடியும் மடிக்குள் இட்டார்.மடியிலிருந்து அதை அவர் எடுத்தபோது, இதோ தம் உடம்பின் நிறமாகவே அது மாறிவிட்டிருந்தது. |
8 | அப்போது ஆண்டவர், “அவர்கள் உன்னை நம்பாமலும் முன்னைய அருஞ்செயலின் பொருளை உணராமலும் போனால், பின்னைய இவ்வருஞ்செயலின் பொருளை உணர்ந்தாவது நம்பக்கூடும்! |
9 | அவர்கள் இவ்விரு அருஞ்செயல்களையும்கூட நம்பாமல் உன் பேச்சையும் கேட்காமல் போனால், நைல்நதி நீரை முகந்து கட்டாந்தரையில் ஊற்றுவாய்.நைல் நதியில் முகந்த தண்ணீர் கட்டாந்தரையில் இரத்தமாக மாறிவிடும்” என்றார். |
10 | மோசே ஆண்டவரிடம்: “ஐயோ! ஆண்டவரே! நீர் உமது அடியானிடம் பேசுவதற்கும் முன்போ, பேசிய பின்போ, நாவன்மை அற்றவன் நான்! ஏனெனில், எனக்கு வாய் திக்கும்: நாவும் குழறும்” என்றார். |
11 | ஆண்டவர் அவரிடம், “மனிதனுக்கு வாய் அமைத்தவர் யார்? அவனை ஊமையாக அல்லது செவிடாக அல்லது பார்வையுள்ளவனாக அல்லது குருடனாக வைப்பவர் யார்? ஆண்டவராகிய நான்தானே! |
12 | ஆகவே, இப்போதே போ! நானே உன் நாவில் இருப்பேன்: நீ பேச வேண்டியதை உனக்குக் கற்பிப்பேன்” என்றார். |
13 | அதற்கு அவர், “வேண்டாம், ஆண்டவரே! தகுதியுடைய வேறொருவனை நீர் இப்போதே அனுப்பிவைப்பீராக!” என்றுரைத்தார். |
14 | இதைக்கேட்டு ஆண்டவர் மோசேயின் மேல் சினம் கொண்டு பின்வருமாறு கூறினார்: “லேவியனான ஆரோன் உனக்குச் சகோதரன் அல்லவா? அவன் நாவன்மை உடையவன் என்று எனக்குத் தெரியும்.இதோ அவன் உன்னைச் சந்திப்பதற்காக வந்து கொண்டிருக்கிறான்.அவன் உன்னைக் காணும்போது மனமகிழ்வான். |
15 | நீ அவனிடம் பேசி, இவ்வார்த்தைகளை அவன் வாயில் வைப்பாய்.நான் உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்து கொண்டு நீங்கள் செய்ய வேண்டியவற்றை உங்களுக்கு அறிவுறுத்துவேன். |
16 | உனக்குப் பதிலாக மக்களிடம் அவன் பேசுவதால், அவன் உனக்கு வாயாக இருப்பான்.நீயோ அவனுக்குக் கடவுள் போல் இருப்பாய். |
17 | இந்தக் கோலைக் கையில் எடுத்துச் செல்வாய்.இதைக் கொண்டு நீ அருஞ்செயல்கள் ஆற்றுவாய்!” |
18 | மோசே தம் மாமனார் இத்திரோவிடம் திரும்பிச்சென்று, அவரை நோக்கி, “எகிப்தில் உள்ள என் இனத்தவரிடம் நான் திரும்பிப் போகவும், அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா என்று பார்க்கவும் வேண்டும்” என்று கூற, இத்திரோ மோசேயைப் பார்த்து, “சமாதானமாய்ப் போய்வா” என்றார். |
19 | மிதியான் நாட்டில் ஆண்டவரும் மோசேயை நோக்கி, “எகிப்திற்குத் திரும்பிப் போ: ஏனெனில் உன் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் எல்லோரும் இறந்துவிட்டனர்” என்றுரைத்தார். |
20 | எனவே மோசே தம் மனைவியையும் தம் புதல்வர்களையும் ஒரு கழுதையின்மேல் ஏற்றிக்கொண்டு எகிப்து நாட்டுக்குத் திரும்பிச் சென்றார்.கடவுளின் கோலையும் மோசே தம் கையில் எடுத்துக்கொண்டார். |
21 | ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: “பார், நீ எகிப்திற்குத் திரும்பிச் சென்றபின், நான் உன் கையில் ஒப்படைத்துள்ள எல்லா அருஞ் செயல்களையும் பார்வோன் முன்னிலையில் செய்து காட்டு. |
22 | நான் அவன் இதயத்தைக் கடினப்படுத்துவேன்.அவன் மக்களைப் போகவிடமாட்டான்.நீ பார்வோனிடம்,ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:இஸ்ரயேல் என் மகன்: என் தலைப்பிள்ளை. |
23 | நான் உனக்குக் கூறிவிட்டேன்: என்னை வழிபடுமாறு என் மகனைப் போகவிடு! அவனை அனுப்ப நீ மறுத்துவிட்டால் நானே உன் மகனை, உன் தலைப்பிள்ளையை வெட்டி வீழ்த்தப்போகிறேன்”என்று சொல்வாய்”. |
24 | ஆண்டவர் மோசேயை வழியில் ஒரு சத்திரத்தில் எதிர்கொண்டு அவரைக் கொல்லப்பார்த்தார். |
25 | அப்போது சிப்போரா ஒரு கூரிய கல்லை எடுத்துத் தன் மகனுக்கு விருத்தசேதனம் செய்து அதைக்கொண்டு மோசேயின் பாதங்களைத் தொட்டு, “நீர் எனக்கு இரத்த மணமகன்” என்றாள். |
26 | பின்பு ஆண்டவர் அவரைவிட்டு விலகினார்.அப்போது அவள்,விருத்தசேதனத்தின் வழியாய் நீர் எனக்கு இரத்த மணமகன்”என்றாள். |
27 | இதற்கிடையில் ஆண்டவர் ஆரோனை நோக்கி, “மோசேயைச் சந்திக்க பாலைநிலத்திற்குப் பேர்” என்றார்.அவரும் சென்று கடவுளின் மலையில் அவரைச் சந்தித்து முத்தமிட்டார். |
28 | தம்மை அனுப்பியபொழுது, ஆண்டவர் கூறிய எல்லா வார்த்தைகளைப்பற்றியும் ஒப்படைத்த எல்லா அருஞ்செயல்களைப் பற்றியும் மோசே ஆரோனுக்கு அறிவுறுத்தினார். |
29 | மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் மக்களின் பெரியோர்கள் அனைவரையும் ஒன்று கூட்டினார்கள். |
30 | ஆண்டவர் மோசேயிடம் கூறியிருந்த எல்லா வார்த்தைகளையும் ஆரோன் எடுத்துக் கூறினார்.அருஞ்செயல்களையும் மக்கள் பார்க்கும் வண்ணம் செய்தார்.மக்களும் நம்பினர். |
31 | ஆண்டவர் இஸ்ரயேல் மக்களைச் சந்தித்துவிட்டார் என்றும் அவர்களது துயரத்தைக் கண்ணோக்கிவிட்டார் என்றும் மக்கள் கேள்விப்பட்டபோது, குப்புறவிழுந்து தொழுதனர். |