ஆசிரியர்: டி. யஷ்வந்த்குமார்
தமிழாக்கம்: ஜோசப் கோவிந்த்
“யோவான் 3:5 வசனத்தில் ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான். என்று இயேசு நிக்கொதேமுவிடம் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் என்ன?
“ஒருவன் உடல் ரீதியாகவும், ஆவிக்குரிய ரீதியாகவும் பிறந்தால் மட்டுமே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும். இந்த வசனத்தில் இயேசு சொல்லிய வார்த்தைகளின் அர்த்தம் இதுதான் என்று சிலர் கூறுகிறார்கள். இதற்குக் காரணம் உண்டு. குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது, அந்த குழந்தை உமிழ்நீரால் சூழப்பட்டுள்ளது. தாய் பிரசவத்திற்கு சற்று முன், இந்த உமிழ்நீரால் சூழப்பட்டுள்ள சவ்வு உடைந்து அம்னோடிக் என்ற திரவம் வெளியேறுகிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு பிரசவ வலி ஆரம்பித்து, தாய் பிரசவிக்கப் போகிறாள் என்பதற்கான அறிகுறியாகும். இந்த விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு, ஜலத்தினால் (நீர்) பிறப்பது என்பது உடல் ரீதியாகப் பிறப்பது என்று கூறப்படுகிறது. ஒருவேளை இயேசு சொல்லுவது உடல் ரீதியான பிறப்பைப் பற்றி பேசுகிறார் என்றால், ஏற்கனவே பிறந்து, வளர்ந்து, வயதான நிக்கோதேமு போன்ற ஒரு வயதான மனிதரிடம், “நீ இரட்சிக்கப்பட வேண்டும் என்றால், நீங்கள் முதலில் பிறந்து இந்த பூமியில் இருக்க வேண்டும்” என்று இயேசு சொல்வது அர்த்தமற்றதாக ஆகும்.
மற்ற சிலர் இப்படியாக போதிப்பார்கள், ஒருவர் இரட்சிக்கப்படுவதற்கு ஞானஸ்நானம் பெறுவது அவசியம். (யோவான் 3:5), இப்படிப்பட்ட பிரசங்கிகள் தங்களை நியாயப்படுத்திக் கொள்ள பயன்படுத்தும் வசனங்களில் ஒன்று. விசுவாசிகள் பெறும் தண்ணீர் ஞானஸ்நானம் இன்னும் நடைமுறையில் இல்லையென்றாலும், அத்தகைய ஒரு தகுதியான நற்செயலைச் செய்வதன் மூலம் உன் இரட்சிப்பை நீ பெற்றுக்கொள்ள முடியும் என்று இயேசு கூறுகிறாரா? இல்லை. ஏனென்றால், பரிசேயனாகிய நிக்கொதேமு இயேசு சொன்னதைப் புரிந்துகொண்டால், இயேசுவின் வார்த்தைகளால் அவன் ஏன் ஆச்சரியப்படுவான்? மகிழ்ச்சியுடன் மேலுக்கும் கீழுக்கும் குதித்திருக்க வேண்டும். ஓ, அவ்வளவுதான்! இரட்சிக்க படுவதற்கு இது போதுமா? நாளைக்கே இதை செய்வேன், என்று இயேசுவின் வார்த்தைகளால் நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஆனால் இயேசுவின் வார்த்தைகளுக்கு நிக்கொதேமு பதிலளித்த விதம் மற்றும் இயேசு அதன் பின்னர் போதித்த அனைத்து காரியங்களையும் நீங்கள் சிந்தித்துப் பார்த்தால், உங்கள் இரட்சிப்பை நம்முடைய சுய முயற்சியால் சம்பாதிக்க முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு புரிகிறதா? எந்த ஒரு மனிதனும் நற்பண்புகளினாலோ, நற்செயல்களினாலோ இரட்சிக்க முடியாது என்று அப்போஸ்தலர் 15 –ம் அதிகாரம் & ரோமர் 4 –ம் அதிகாரம் போன்ற வசனப் பகுதிகளில் மிகவும் தெளிவாக புரிந்து கொள்ளப்படுகிறது. இரட்சிப்பு என்பது கிருபையினாலும், விசுவாசத்தினாலும் மட்டுமே! (ரோமர் 3:22-30, 4:5) (கலாத்தியர் 2:16), (எபேசியர் 2:8-9), (பிலிப்பியர் 3:9). ஒரு நபர் இரட்சிக்கப்படுவதற்கு ஞானஸ்நானம் அவசியமாக இருந்தால், சுவிசேஷம் அறிவிக்கப்படும் போது, ஒவ்வொரு நிகழ்விலும் ஞானஸ்நானத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் இயேசுவோ அல்லது அப்போஸ்தலர்களோ அவ்வாறு செய்ததாக நாம் வேதத்தில் எங்கும் படிக்கவில்லை. அப். பேதுரு பெந்தெகொஸ்தே நாளில் தனது பிரசங்கத்தில் ஞானஸ்நானம் பற்றி குறிப்பிடுகிறார், (அப்போஸ்தலர் 2:38) ஆனால் அப்போஸ்தலர் 3 –ம் அதிகாரத்தில் பேசுகையில், பாவ மன்னிப்பைப் பெறுவதற்கு, ஒருவர் மனந்திரும்ப வேண்டும் என்று கூறுகிறார் (அப் 3:19). ஒருவேளை பாவ மன்னிப்புக்கு ஞானஸ்நானம் அவசியம் என்றால், பேதுரு அதை ஏன் இங்கு குறிப்பிடவில்லை?
அப். பவுலின் சுவிசேஷ அறிவிப்பில் ஞானஸ்நானத்தைப் பற்றி எங்குமே குறிப்பிடப்படவில்லை. (1 கொரிந்தியர் 15:1-4) -வசனத்தில் தான் பிரசங்கித்த சுவிசேஷ சத்தியத்தின் சுருக்கத்தை கூறுகிறார். அதில் ஞானஸ்நானத்தைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. மேலும் (1 கொரிந்தியர் 1:17) -ல் அவர் கூறுகிறார், கிறிஸ்து என்னை ஞானஸ்நானம் கொடுப்பதற்கு என்னை அனுப்பவில்லை, ஆனால் அவர் என்னை சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அனுப்பினார்.' சுவிசேஷமும், ஞானஸ்நானமும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள் என்ற உண்மை அப். பவுலின் வார்த்தைகளிலிருந்து தெளிவாகிறது. இப்படியாக இல்லாமல், ஒருவன் இரட்சிக்கப்படுவதற்கு ஞானஸ்நானம் அவசியம் என்றால், அப். பவுல் ஞானஸ்நானம் கொடுக்காமல், வெறுமனே சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதால் என்ன பயன்? இப்படிச் செய்வதால் யாரும் இரட்சிக்கப் பட்டிருக்க மாட்டார்கள் அல்லவா! ஆகவே, சுவிசேஷமும் ஞானஸ்நானமும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள் என்ற சத்தியத்தை அப். பவுல் தெளிவாகப் புரிந்துகொண்டார். (லூக்கா 7:37) –ல் கண்ணீரால் கர்த்தருடைய பாதங்களைத் துடைத்த பெண், (மத்தேயு 9:2) -ல் முடக்குவாதக்காரர், (லூக்கா 18:13-14) -ல் வரி வசூலிப்பவர், இவர்கள் எல்லாம் ஞானஸ்நானம் பெறாமல் பாவ மன்னிப்பு பெற்றார்கள் என்று வேதத்தில் பார்க்கிறோம்.
மேலும், சிலர் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பே இரட்சிக்கப்பட்டதாக வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. கொர்நெலியு மற்றும் அவருடன் இருந்தவர்கள் பேதுரு சொல்லிய சுவிசேஷத்தைக் கேட்டு மனமாற்றம் அடைந்தனர். என்பதாக (அப்போஸ்தலர் 10:44-48) -ல் வாசிக்கிறோம். அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றதிலிருந்து (வச. 44) பரிசுத்த ஆவியின் வரங்களைப் பெறுவதிலிருந்து (வச. 46) அவர்கள் ஞானஸ்நானத்திற்கு முன்பே இரட்சிக்கப்பட்டார்கள் என்பது நமக்கு தெளிவாகிறது. அது மாத்திரமல்ல, அவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள் என்றும், பரிசுத்த ஆவியைப் பெற்றவர்கள் என்றும் பேதுருக்கு உறுதியான பிறகு தான் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி கட்டளையிட்டான்.
வேதாகமத்தின் ஒரு பகுதியின் சரியான அர்த்தத்தை அறிவதற்கு, அந்த பகுதி முழுவதுமாக வேதத்தின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிட்டு பார்த்து புரிந்து கொள்ளப்பட வேண்டும். இந்த கொள்கை & கோட்பாடு மிகவும் முக்கியமானது. வேதத்தின் எந்த இரண்டு பகுதிகளுக்கும் இடையில் முரண்பாடு இருக்க முடியாது, ஏனென்றால் அவை தேவனின் வார்த்தைகள். வேதத்தில் ஏதாவது ஒரு வாக்கியத்தின் எந்தப் பகுதியையும் எடுத்துக்கொண்டு அந்த வாக்கியப் பகுதியை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு கோட்பாட்டை உருவாக்குவது சரியான முறை அல்ல. ஞானஸ்நானம் அல்லது வேறு எந்த நீதியான செயலாலும் ஒரு நபர் இரட்சிக்கப்படுவதில்லை என்பதே வேதத்தின் விரிவான போதனை. எனவே ஒரு விஷயத்தைப் பற்றிய வேதத்தின் அனைத்து தனித்தனி வசனங்களிலும் சமநிலை உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த உண்மையை மனதில் கொண்டு இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் அவசியம் என்று போதிக்கும் பகுதிகளை வேத ஆய்வு கண்ணோட்டத்தோடு பார்ப்போம்.
(அப்போஸ்தலர் 2:38) –வசனத்தில் அப். பேதுரு மனமாற்றத்தை ஞானஸ்நானத்துடன் தொடர்புபடுத்தி போதித்தார் என்று வாசிக்கிறோம். “பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்,” கிரேக்க அறிஞர்கள் இந்த வார்த்தைகளை 'பேதுரு - பாவமன்னிப்புக்காக நீங்கள் மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஒவ்வொருவரும் ஞானஸ்நானம் பெறுங்கள்' எனவே அப். பேதுரு மனந்திரும்புதலை ஞானஸ்நானத்துடன் ஒப்பிட்டு பேசுகிறார் என்று சொல்லுவதற்கு வாய்ப்பில்லை, இந்த விளக்கத்திற்கு பலம் சேர்க்ககுடியது எதுவென்றால், கிரேக்க மொழியில் “ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்” என்ற வார்த்தை ஒருமையில் உள்ளது. என்றால் இந்த சொல்லாடல் மனந்திரும்புதலுக்கும், பாவமன்னிப்பிற்கு மட்டுமே! ஞானஸ்நானத்திற்கு அல்ல. இந்த உபதேசம் புதிய ஏற்பாட்டோடு உடன்படுகிறது.
(மாற்கு 16:16) வசனப்பகுதியில் ஒரு நபர் இரட்சிக்கப்படுவதற்கு ஞானஸ்நானம் அவசியம் என்று வாதிடுபவர்கள் தங்களுடைய வாதத்தை தற்காத்துக் கொள்ள அதிகம் பயன்படுத்துவாதகும். "16. விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்." இந்த வசனத்தில் யார் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவார்கள் என்பதை கவனியுங்கள்? ஞானஸ்நானம் பெறாதவனுக்கா? அல்லது விசுவாசியாதவனுக்கா? நன்றாக சிந்தியுங்கள் விசுவாசியாதவனுக்கு தான். ஞானஸ்நானம் என்பது முதல் பகுதியில் மட்டுமே உள்ளது, ஏனெனில் விசுவாசம் உள்ளார்ந்த மன மாற்றம் அதின் பொது அடையாளத்திற்கு ஞானஸ்நானம் பெறுகிறான். ஆனால் அந்த நபர் ஞானஸ்நானம் பெற்றாலும், அவனுக்கு விசுவாசம் இல்லாவிட்டால், அவன் ஆக்கினையிலிருந்து தப்பிக்க முடியாது. இதிலிருந்து நாம் தெரிந்துக்கொள்வது என்னவென்றால், ஞானஸ்நானம் அல்ல, இரட்சிப்பது விசுவாசம் தான் என்பது தெளிவாகிறது.
ஞானஸ்நானம் (திருமுழுக்கு) என்ற சொல்லுக்கு 'முழ்குதல்' என்று பொருள். ‘baptizo’ என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டு ஞானஸ்நானம் என்று கூறப்படுகிறது. ஆனால் புதிய ஏற்பாட்டில் இந்த வார்த்தை எங்கு பயன்படுத்தப்பட்டாலும் அது தண்ணீர் ஞானஸ்நானத்தை குறிக்கிறது என்று நினைக்கக்கூடாது. (1 பேதுரு 3:21) -வசனத்தில், பேதுரு ஞானஸ்நானம் பற்றி பேசுகையில், “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல்,” இந்த சந்தர்ப்பத்தில் தண்ணீர் ஞானஸ்நானம் பற்றி பேதுரு பேசவில்லை, ஏனென்றால் தண்ணீர் ஞானஸ்நானத்தால் உடலின் அசுத்தங்கள் அகற்றப்படுகின்றன. பேதுரு இங்கே கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் மூழ்குவதைக் குறிப்பிடுகிறார், அந்த ஞானஸ்நானத்தை குறித்து பேசுகிறார். மேலும் ரோமர் 6-ம் அதிகாரத்திலும், கலாத்தியர் 3-ம் அதிகாரத்திலும் தண்ணீர் ஞானஸ்நானத்தை குறித்து பேசவில்லை. அங்கு பரிசுத்த ஆவியினால் பெரும் ஞானஸ்நானத்தை பற்றி பேசுகிறது.
(அப்போஸ்தலர் 22:16) -ல் அப். பவுல் - அனனியா தன்னிடம் கூறியவற்றை விவரித்து பேசுகையில் “இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.” இந்த வசனத்திலும் கிரேக்க வார்த்தைகளுடன் என்ன கிரேக்க வார்த்தைகள் தொடர்புடையவை என்பதை ஆராய்ந்த வேத வல்லுநர்கள் "நீங்கள் ஏன் தாமதம் செய்கிறீர்கள்? எழுந்து ஞானஸ்நானம் பெறுங்கள். அவருடைய நாமத்தில் ஜெபிப்பதன் மூலம் உங்கள் பாவங்களைக் கழுவுங்கள்." இதன் பொருள் என்னவென்றால் ஜெபத்திற்கும் பாவங்களைக் கழுவுவதற்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது, ஆனால் ஞானஸ்நானத்தினால் பாவங்களைக் கழுவ முடியாது என்பது தெளிவாகிறது.
அப்படியென்றால் ஞானஸ்நானம் அவசியம் இல்லையா? என்று கேட்டால் நான் அப்படிச் சொல்லவில்லை. சொல்லப்போனால் ஞானஸ்நானத்தின் முக்கியத்துவத்தை குறைப்பது என்னுடைய நோக்கமில்லை, உண்மையாக மனந்திரும்பி பாவ மன்னிப்பைப் பெற்ற ஒவ்வொரு நபரும் ஞானஸ்நானம் பெற வேண்டும், மற்றும் கட்டாயமாக பெற்றுக்கொள்வான். (ஏனெனில் ஒரு விசுவாசி தேவனை நேசித்து அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியும் குணம் கொண்டவராக இருப்பான்.) ஆனால் ஒரு நபர் ஞானஸ்நானத்தால் இரட்சிக்கப்படுகிறார் என்றும், ஆனால் அந்த நபர் வேறு எந்த நல்ல காரணத்திற்காகவும் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளவில்லை என்றாலும், அந்த காரணத்திற்காக அந்த நபர் அழிந்து நித்திய நரகத்திற்குச் செல்வார் என்பதை வேதம் போதிக்கவில்லை, என்று நினைவில் கொள்ளுங்கள்.
ஞானஸ்நானம் பற்றிய அடிப்படை வேத போதனைகளை எளிதாகப் புரிந்துக் கொள்வதற்கு இந்த இணைப்பின் மூலம் 'ஞானஸ்நானம்' என்ற கட்டுரையைப் படியுங்கள்.
ஞானஸ்நானம் பற்றிய போதனைகள் கட்டுரையின் இணைப்பு: https://truthintamil.com/களஞ்சியம்/கட்டுரைகள்/594-ஞானஸ்நானம்-பற்றிய-விளக்கங்கள்.html
மேலும், 'இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் அவசியம்' என்ற போதனையைப் பற்றிய விரிவான புரிதலுக்கு, இந்த இணைப்பைப் பார்க்கவும் 'ஞானஸ்நானத்தின் மூலம் இரட்சிப்பு வருமா?' என்ற இந்த கட்டுரையைப் படியுங்கள்.
ஞானஸ்நானத்தின் மூலம் இரட்சிப்பு வருமா? கட்டுரையின் இணைப்பு:
இப்போது நமது முக்கிய வேத பகுதியைப் பற்றி சிந்திப்போம்.
(யோவான் 3:5) “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்.”
ஜலத்தினால் (தண்ணீரால்) பிறப்பது என்பது உடல் ரீதியாக பிறப்பது அல்ல, தண்ணீரால் ஞானஸ்நானம் பெறுவதும் அல்ல. அப்படியென்றால், ஒரு நபர் இரட்சிக்கப்படுவதற்கும், பரலோகராஜ்யத்தில் நுழைவதற்கும் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கும் இயேசுவின் வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் என்ன? இந்தக் கேள்வியைக் கேட்டதற்காக நிக்கொதேமுவை இயேசு கண்டித்தார். “நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா?” இயேசு நிக்கொதேமுவிடம் கேட்டார். (யோவான் 3:10). பெரிய பரிசேயனாக இருகிற உனக்கு இது தெரியாதா? பழைய ஏற்பாட்டில் பெரிய அறிஞராக இருக்கிற நீ, என்னுடைய இந்த வார்த்தைகள் உனக்குப் புரியவில்லையா? இயேசு அவனை கடிந்துகொண்டார். என்றால் இதைக் குறித்த காரியங்கள் ஏற்கனவே பழைய ஏற்பாட்டில் வெளிப்படுத்தப் பட்டுள்ளது என்று நமக்கு புரிகிறது. அதனால்தான் இயேசு நிக்கொதேமுவை கடிந்துகொண்டார். பழைய ஏற்பாட்டின் எந்த வேதப்பகுதியை இயேசு மனதில் வைத்து நிக்கோதேமுவிடம் பேசினார்?
(எசேக்கியேல் 36:24-27) "24. நான் உங்களைப் புறஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, உங்களைச் சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுயதேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன். 25. அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள். 26. உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். 27. உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்.”
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தேவன் தம்முடைய மக்களை ஒன்று சேர்ப்பதாக வாக்குறுதி அளித்தார். அதுமட்டுமல்லாமல், தூய்மையான தண்ணீரால் அவற்றைக் கழுவி, எல்லா அசுத்தங்களும் நீங்கும்படியாகத் தம்முடைய ஆவியை அவர்களுக்குள் வைப்பேன் என்றும் கூறினார். ஒரு நபர் மீண்டும் பிறப்பதற்கு என்ன செய்கிறார் என்று தேவன் இந்த வசனப் பகுதில் வலியுறுத்து சொல்லப்பட்டுள்ளது. மனிதர்கள் தங்களை தாங்களே இரட்சித்துக் கொள்கிறார்கள் என்றும் அல்லது தங்கள் சொந்த மீட்ப்பை சம்பாதித்துக்கொல்கிரார்கள் என்று அந்த வசனம் கூறவில்லை. மனிதனின் ஒரே நம்பிக்கை, அவனை மறுபடியும் பிறக்க செய்யும் பணி. தேவன் "சுத்தமான தண்ணீரை உங்கள் மீது தெளிப்பார்." "எல்லா அசுத்தங்களையும் உங்களிடமிருந்து அகற்றுவார்." ஜலத்தினால் (தண்ணீரினால்) பிறப்பது என்ற இயேசுவின் வார்த்தைகளின் மூலப் பொருள் இதுதான். தேவன் கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்.” என்றும் வாக்குறிதி செய்தார். ஆவியினால் பிறத்தல் என்ற இயேசுவின் வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் இதுதான். இதுவே மறுபிறப்பை பற்றிய இயேசுவின் விளக்கம். தேவன் நமது பாவங்களிலிருந்து நம்மைக் கழுவி பரிசுத்தப்படுத்துகிறார், மற்றும் அவருடைய ஆவியை நமக்கு அருளுகிறார். பரிசேயர்கள் இந்த இரட்சிப்பை குறித்தே இஸ்ரவேலர்களுக்கு அறிவிக்க வேண்டும். ஆனால் வெறும் புறச்சடங்குகள் மற்றும் வெளி தோற்றத்துடன் கூடிய பக்தி அல்ல.
புதிய ஏற்பாட்டில் மீண்டும் பிறப்பது அல்லது (மறுஜென்மம்) என்பது யாராலும் கேட்கப்படாத அல்லது கற்பிக்கப்படாத புதிதான செய்தியல்ல. இந்த விஷயங்கள் பழைய ஏற்பாட்டில் பலமுறை குறிப்பிடப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம். உதாரணமாக, முன்பு பார்த்த எசேக்கியேலின் புத்தகத்தில் இவைகள் ஏற்கனவே வாக்குறுதியளிக்கப் பட்டதாக வாசிக்கிறோம். எசேக்கியேல் 11:19-20 "19. அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஏக இருதயத்தைத் தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக் கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன். 20. அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்." இந்த வசனப்பகுதி அனைத்தும் நிக்கொதேமு நன்கு அறிந்திருக்க வேண்டும். “நீ ஏன் வேதத்தை அறியாமல் இருக்கிறாய்?” என்று இயேசு அவனைக் கண்டிக்கிறார். இஸ்ரவேல் மக்களுக்கு போதகனாக இருந்தும், புதிய ஏற்பாட்டு வாக்குத்தத்தங்களின் நிறைவேற்றத்தை உணராதிருக்கிறான். இதிலிருந்து நமக்கு புரிவது பரிசேயர்களின் போதனைகள் தேவனுடைய வார்த்தையிலிருந்து எவ்வளவு விலகிச் சென்றது என்பது மிகத் தெளிவாக நமக்கு புரிகிறது.
அந்த பரிசேயர்கள் பொய்யான சுவிசேஷத்தைப் பிரசங்கித்தனர். நற்காரியங்களை (புண்ணிய) காரியங்களைச் செய்வதன் மூலம் இரட்சிப்பைப் பெறலாம் என்று போதித்தனர். தங்களுடைய சொந்த நீதியான செயல்களால் தங்கள் பாவத்திற்கு பரிகாரம் செய்துக்கொள்ள முடியும் என்று அவர்களுக்கு கற்பித்தனர். ஆனால், இயேசு அதை முற்றிலும் நிராகரித்து இவ்விதம் சொன்னார்: "6. மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்." (யோவான் 3:6). "மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.” என்று (ரோமர் 8:8) வசனத்தில் அப். பவுல் கூறுகிறார். மாம்சத்தின் பலவீனம் மற்றும் இயலாமையை குறித்து பழைய ஏற்பாட்டில் பல வசனங்களில் மிகத் தெளிவாகக் சொல்லப் பட்டுள்ளது. எனவே அவைகளை நிக்கொதேமு அறிந்திருக்க வேண்டும்.
ஒரு நபரின் நடத்தை மற்றும் வெளிப்புற செயல்கள் மட்டுமே அவனை அது இரட்சிக்காது. உண்மையான பிரச்சினை இருதயத்தைப் பற்றியது. வெளிப்புற மாற்றத்தை விட உள்ளான மாற்றம் மிக முக்கியமானது. இருதயம் மாறாவிட்டால், வெளி தோற்றத்தில் பக்தியின் வேஷத்தை காட்டுவதெல்லாம் வீண். அத்தகைய நபர் இரட்சிக்கப்படவில்லை.
'மனிதனின் முழுமையான வீழ்ச்சி' என்ற கோட்பாட்டை நிக்கொதேமு அறிந்திருக்க வேண்டும். அதனால்தான் இயேசு இவ்விதமாக சொன்னார்: "நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்.” நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் சொன்னதில் ஆச்சரியப்பட வேண்டாம்" (யோவான் 3:7). ஏனெனில் இதெல்லாம் வேதத்தில் உள்ளது. இஸ்ரவேலின் பிரசங்கியாக, நிக்கொதேமு மனிதன் தன்னை இரட்சித்துக் கொள்ள முடியாது என்பதையும், மறுபிறப்பு அடைவது முற்றிலும் தேவனின் செயல் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.
அன்புள்ள வாசகரே, நீங்கள் இவற்றை எல்லாம் உணர்ந்திருக்கிறீர்களா? நம் அனைவரின் ஆத்மீக நன்மைக்காகவே தேவன் இவற்றை வேதத்தில் பதிவு செய்துள்ளார். ஞானஸ்நானத்தால் எந்த மனிதனும் இரட்சிக்கப்பட முடியாது, பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது. இத்தனை காலமும் இந்தப் பொய்யான உபதேசத்தால் நீங்கள் ஏமாற்றப்பட்டிருந்தால், தேவன் உங்கள் மீது கிருபை வைத்து இவற்றை உங்கள் முன் வைக்கிறார். ஆகையால் இதற்கு முன்பு நீங்கள் கேட்டு வந்த போதனை பொய் என்பதை உணருங்கள். ஞானஸ்நானம் பெற்றதால் 'நான் பரலோகம் செல்வேன்' என்ற பொய்யான உறுதிமொழியை சொல்லி உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.
ஒருவன் பரலோக இராஜியத்தில் பிரவேசிக்க வேண்டுமென்றால் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறக்க வேண்டும் என்று இயேசு சொன்னார். ஜலத்தினால் பிறப்பது என்றால் பாவங்கள் கழுவப்பட்டு பரிசுத்தம் அடைவது என்று தெரிந்துக்கொண்டோம். ஆவியினால் பிறப்பது என்பது தேவனுடைய பரிசுத்த ஆவியைப் பெறுவதும், புதிய இருதயத்தைப் பெறுவதும் என்று கற்றுக்கொண்டோம். அப்படியென்றால் நீங்கள் ஜலத்தினாலும், ஆவியினாலும் மீண்டும் பிறந்திருக்கிறீர்களா? நீங்கள் உண்மையிலேயே மனம்திரும்பினீர்களா? உங்கள் பாவங்கள் கழுவப்பட்டதா? நீங்கள் பாவ மன்னிப்பு பெற்றீர்களா? நீங்கள் பரிசுத்த ஆவி என்ற வரத்தை பெற்றீர்களா? இந்தக் கேள்விகள் மிக மிக முக்கியமானவை. இது உன் இரட்சிப்பிற்கு சம்மந்தப்பட்டது.
உண்மையாகவே மறுபிறப்பு அடைந்தவர்களிடம் காணப்படும் அறிகுறிகளைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனைக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகள் வழியாக "நீங்கள் மீண்டும் பிறந்தவரா? & உண்மையான மனமாற்றத்தின் ஏழு உறுதியான அறிகுறிகள் போன்ற கட்டுரைகளைப் படிக்க பரிந்துரைக்கிறோம்.
நீங்கள் மீண்டும் பிறந்தவரா? என்ற கட்டுரையின் இணைப்பு: https://truthintamil.com/களஞ்சியம்/கட்டுரைகள்/313-நீங்கள்-மறுபடியும்-பிறந்திருக்கிறீர்களா.html
உண்மையான மனமாற்றத்தின் ஏழு உறுதியான அறிகுறிகள் என்ற கட்டுரையின் இணைப்பு:
'இரட்சிப்பு கர்த்தருடையது' என்ற சத்தியத்தை இந்த கட்டுரையில் நாம் கற்றுக் கொண்டோம். அன்புள்ள வாசகரே, நீங்கள் பாவ சுபாவத்துடன் பிறந்து, ஆத்மீக ரீதியில் இருளில், இறந்தவர்களாகவும், உங்களை நீங்களே இரட்சித்துக் கொள்ள முடியாதவர்களாகவும் இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்தீர்களா? எந்த ஒரு நற்காரிய செயல்களாலும் உங்களால் இரட்சிப்பை அடைய முடியாது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? நம்மைக் இரட்சித்துக் கொள்ள நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதையும், தேவன் தம்முடைய கிருபையால், நம்மில் மறுபிறப்பின் அற்புதத்தை நிகழ்த்துவார் என்பதையும் நீங்கள் உணர்கிறீர்களா?
ஆண்டவரே, இந்தக் கட்டுரையைப் படிக்கும் ஒவ்வொருவரும் இந்த சுவிசேஷத்தின் சத்தியத்தால் தெளிவுபடுத்தப்பட்டு, வெளிப்படுத்துதல் 7:9,10 -ல் 'எங்கள் இரட்சிப்புக்கு ஸ்தோத்திரம்' என்று திரள் கூட்டத்தினர் கூறியது போல் எண்ணப்பட்டு, உம்மைத் துதிக்கும் கிருபையை எங்களுக்கு தந்தருள வேண்டும் என்று தாழ்மையோடு வேண்டுகிறேன். ஆமென்.