ஆசிரியர்: பி. டியன்.
ஒளியிலிருந்து இருளுக்குச் செல்லுதல் - பகுதி ஒன்று
வேதபூர்வ கிறிஸ்தவத்திலிருந்து ஒரு நாட்டின் மதமாக விலகிச் செல்லுதல்...
திருச்சபை ஒளிவீசும் கலங்கரை விளக்கமாகவும், ஜீவனுள்ள தேவனின் மகிமையின் வெளிப்பாடாகவும் இருப்பதற்காக அழைக்கப்பட்டது. தேவனுடைய வார்த்தையும் அதனுடைய போதனைகளுமே இதன் தூண்களாக விளங்குகின்றன. திருச்சபையானது மனிதனின் பாரம்பரிய மரபுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சத்தியத்தை விட்டு விலகிச் சென்ற காலத்திய நிகழ்வை, சபை வரலாறு நமக்குத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. இத்தகைய வழி விலகியதிலிருந்து அதை மீட்டுக் கொண்டுவருவதற்கான விலைக்கிரயமோ மிக மிக அதிகம்.
“முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை” என்று பிரசங்கி புத்தகத்தில் சாலொமோன் ராஜா கூறினார். அரசரின் இக்கூற்றில் வரலாற்றைப் பற்றிய ஒரு நுட்பமான பார்வை இருக்கிறது, அது மீண்டும் மீண்டும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. மேலும் இது முந்தைய கால நிகழ்வுகளைக் காட்டிலும் அதிகமான சேதாரத்தை விளைவிக்கக் கூடியதாகவும் உள்ளது. தற்காலத் திருச்சபையானது கடந்கால வரலாற்றின் பாடங்களிலிருந்து உதவிகரமான பல படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள முடியும். இதுமட்டுமின்றி, கடந்த காலத் தவறுகளைத் திரும்பிப் பார்த்து, அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளும் போது, அது எண்ணற்ற பிரச்சினைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள உதவி செய்கிறது. வரலாறு நமக்குப் பாடங்களைக் கற்றுக் கொடுக்கும் ஓர் ஆசானாக இருப்பது மட்டுமின்றி, எச்சரிப்புகளை வழங்கும் ஒரு சேவகனாகவும் விளங்குகிறது. திருச்சபை எவ்வாறு சத்தியத்திலிருந்து விலகிச் சென்றது, அது எவ்வாறு மனித பாரம்பரியத்தைத் தூக்கிப் பிடித்தது, இதன் விளைவாக திருச்சபையின் வாழ்க்கை முறையில் இது எத்தகைய சேதாரத்தை ஏற்படுத்தியது என்பதையும், இதன் மூலமாக சபையின் சாட்சிக்கு எவ்வாறு பங்கம் ஏற்ப்பட்டது, என்பது பற்றிய காரியங்களையும், திருச்சபை வரலாற்றின் வெளிச்சத்தில் சில தொடர் கட்டுரைகளின் வாயிலாக நான் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஒரு திருச்சபை எவ்வாறு செயல்பட வேண்டும், அதன் தலைவர்கள் கட்டாயமாகக் கொண்டிருக்க வேண்டிய தகுதிகள் என்னென்ன என்பது பற்றி பரிசுத்த வேதாகமம் எவ்விதச் சமரசமுமின்றி நமக்குக் கற்பித்திருக்கிறது. உலக ஆட்சியாளர்களும், நாட்டின் அரசர்களும் சபைக்கு எவ்விதத்திலும் ஆணையிட்டு அதைக் கட்டுப்படுத்த முடியாது. அரசாங்கத்தின் மக்கள் ஒரு திருச்சபையில் ஒரு பங்காக இருக்க முடியுமென்றாலும், அவர்கள் அந்தந்த சபையின் மூப்பர்களாக இருந்து வழிநடத்துவதற்கான தகுதியைப் பெறாதவரை அவர்களால் ஒரு திருச்சபையை வழிநடத்த முடியாது. திருச்சபையின் தலைவர் கர்த்தராகிய கிறிஸ்து இயேசு ஆவார். மேலும் திருச்சபையானது விசுவாசம், ஆராதனை மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கை ஆகியவற்றுடன் தொடர்புடையது. இதற்கு மாறாக அரசாங்கமோ அதன் ஆட்சியாளர்கள், அதன் கொள்கைகள், அதன் அரசியல் மற்றும் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது ஆகியவற்றுடன் தொடர்புடையது. திருச்சபையும் அரசாங்கமும் வெவ்வேறானவை மற்றும் இரண்டு தனித்தனி நிறுவனங்கள் ஆகும்.
சில காலகட்டங்களில் திருச்சபைக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஓர் இணக்கமான உறவு இருந்தது. திருச்சபையில் ஏற்படும் பிரச்சினைகளில் பேரரசர்கள் தலையிட்டு தங்களுடைய கருத்தைச் சொல்லிவந்தார்கள். மிகவும் மோசமான நிலை என்னவென்றால், சில நேரங்களில் இவர்கள் திருச்சபையின் உபதேசக் காரியங்களிலும் தங்கள் மூக்கை நுழைத்து தங்கள் அதிகாரத்தைச் செலுத்தினார்கள் என்பதே ஆகும். திருச்சபைக்கும் அரசாங்கத்திற்கும் இடையே நிலவிய இத்தகைய இணக்கமே வேதபூர்வ கிறிஸ்தவத்தின் ஒரு வழிவிலகுதலின் செயலாகும்.
திருச்சபையின் சீர்திருத்தத்தைக் கொண்டாடுகிற நாம், சீர்திருத்தவாதிகளின் முயற்சிகளை நினைவுகூரும்போது, அது சத்தியத்தின் திரிபு எப்படி நடந்தது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். திருச்சபைக்கும் அரசுக்கும் இடையே ஓர் இணக்கம் ஏற்பட்டபோது, திருச்சபை தேவனுடைய வார்த்தையாகிய சத்தியத்திலிருந்து எவ்வாறு விலகிச் சென்றது என்பதை இந்தச் சுருக்கமான கட்டுரையின் வாயிலாக கண்டுபிடித்து உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
பேரரசன் கான்ஸ்டன்டைனின் எழுச்சி...
கிறிஸ்தவ வரலாற்றாசிரியர் “ஜஸ்டோ எல். கோன்சலேஸ்” என்பவரின் கூற்றுப்படி, “ரோமானியப் பேரரசு லிசினியஸ், மாக்சிமினஸ் தியா, கான்ஸ்டன்டைன் மற்றும் மாக்சென்டியஸ் ஆகியோருக்கு இடையே பங்கு பிரிக்கப்பட்டது”.1 ஓர் இராஜதந்திர உத்திக்காக, கான்ஸ்டன்டைன் தனது ஒன்றுவிட்ட சகோதரியான கான்ஸ்டனை லிசினியஸுக்கு திருமணம் செய்து வைத்தார். மேலும் அவருடன் ஓர் உடன்படிக்கையும் செய்துகொண்டார். கி. பி. 313 -ஆம் ஆண்டில் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றம் நிகழ்ந்தது. கான்ஸ்டன்டைன், லிசினியஸ் என்பவர் போக, மீதம் இருக்கிற தனது இரண்டு போட்டியாளர்களில் ஒருவரான மாக்சென்டியசுடன் போருக்குத் தயாரானார். கிறிஸ்தவ வரலாற்றாசிரியர்களான லாக்டான்டியஸ் மற்றும் யூசிபியஸ் ஆகிய இருவரின் வரலாற்றுப் பதிவுப்படி, கான்ஸ்டன்டைன் தனது வீரர்கள் வைத்திருந்த கேடயங்களில் ஒரு கிறிஸ்தவ சின்னத்தைப் பொறித்து வைத்தார் என்று சொல்லப்படுகிறது. அந்தச் சின்னத்துக்கு லாபரம் என்று பெயர். இது கிரேக்க எழுத்துக்களான சி மற்றும் ரோ போன்றது. பின்னாட்களில் இச்சின்னம் பேரரசின் ஏகாதிபத்திய அடையாளச் சின்னமாக மாறியது. போரின் இறுதியில், மக்சென்டியஸ் மில்வியன் எனப்படும் பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்து மூழ்கியதால் அவர் தோற்கடிக்கப்பட்டார். மாக்சென்டியஸுடனான போருக்குப் பிறகு, கான்ஸ்டன்டைன் மிலன் நகரில் லிசினியஸைச் சந்தித்தார். அங்கு நடைபெற்ற பேச்சு வார்த்தையின் பலனாக இவர்கள் இருவரும் கிறிஸ்தவர்களுக்கு ஏற்படுகிற துன்புறுத்தலை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொண்டனர். இந்த ஒப்பந்தம், “மிலன் ஆணை” என்று பொதுவாக வரலாற்றில் அறியப்படுகிறது.3
பின்னர் நடைபெற்ற போரில், லிசினியஸ் மாக்சிமினஸ் தியாவை தோற்கடித்தார். பிறகு லிசினியஸ் மற்றும் கான்ஸ்டன்டைன் ஆகியோர் இணைந்து ரோமானியப் பேரரசை ஆண்டனர். ஆனால் உண்மை என்னவென்றால், இரண்டு பேரரசர்களும் தாங்கள் மட்டுமே பேரரசின் ஒரே ஆட்சியாளராக இருக்க வேண்டுமென்று தீராத வாஞ்சை கொண்டிருந்தனர். ஒரு நாள் இந்தத் தீராத வாஞ்சை வன்மாக வெடித்தது. இந்த நிலையில் பேரரசன் கான்ஸ்டன்டைன் தனக்கு எதிராக லிசினியஸின் உறவினன் ஒருவரால் தீட்டப்பட்ட சதித்திட்டத்தைக் கண்டுபிடித்தார். இதன் விளைவாக, கி. பி. 314 - ஆம் ஆண்டில், லிசினியஸ் கான்ஸ்டன்டைன் மீது போர் பிரகடனம் செய்தார். கான்ஸ்டன்டைனுக்கு லிசினியஸை நசுக்க ஒரு பொன்னான வாய்ப்புக் கிடைத்தாலும், அவர் சமாதானத்தை விரும்பினார். இரண்டு பேரரசர்களுக்கு இடையே எப்போதும் பதட்டங்கள் இருந்து வந்தன. ஒருசமயத்தில் பதட்டம் அதிகரித்தன் காரணமாக, கி. பி. 322 -இல் லிசினியஸின் ஆட்சிக்குட்ட பகுதிகளை கான்ஸ்டன்டைன் ஆக்கிரமித்தார். ஒரு கடுமையான போருக்குப் பிறகு, கான்ஸ்டன்டைனின் இராணுவம் வாகை சூடியது. லிசினியஸ் தப்பி ஓடினார். கான்ஸ்டன்ஸின் ஒன்றுவிட்ட சகோதரியாகிய லிசினியஸின் மனைவியின் தலையீட்டால் லிசினியஸின் உயிரைக் காப்பாற்ற கான்ஸ்டன்டைன் ஒப்புக்கொண்டார். ஆயினும் பின்னாட்களில் லிசினியஸைக் கொலை செய்யும்படி கான்ஸ்டன்டைன் உத்தரவிட்டார் அல்லது கொல்வதற்கு ஒப்புதல் அளித்தார். லிசினியஸ் இறந்த பின் கான்ஸ்டன்டைன் முழு ரோமானியப் பேரரசின் ஒரே ஆட்சியாளரானார்.
கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். மேலும் அவர் பறிமுதல் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சொத்துகளை மீட்டெடுக்கும் படியான ஆணைகளையும் பிறப்பித்தார். திருச்சபைகளுக்கு அரசாங்க மானியங்களை வழங்கினார், குருமார்களுக்கு சிறப்புச் சலுகைகளை வழங்கினார். இறுதியாக, ஞாயிற்றுக் கிழமையை அதிகாரப்பூர்வமான ஓய்வுநாளாகவும் ஆராதனை செய்கிற நாளாகவும் அறிவித்தார். இவைமட்டுமின்றி, ரோம அரசாங்கத்தில் கிறிஸ்தவர்களை வெளிப்படையாக வேலை செய்யும்படி அனுமதித்தார். பேரரசனுடைய இந்த நடவடிக்கைகள் பல திருச்சபைகளுக்கு பெரும் நிவாரணமாகத் திகழ்ந்தன. இத்தனை காரியங்களைச் செய்தபோதிலும், கான்ஸ்டன்டைனின் கிறிஸ்தவ நம்பிக்கை ஒரு புதிராகவே இருந்தது. அவர் பிற சமயச் சடங்குகளைச் செய்வதிலோ, பிற கடவுள்களை வணங்குவதிலோ தொடர்ந்து ஈபட்டுவந்தார். ஆயினும், பேரரசர் கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக இருந்தார், இதன் மூலம் கிறிஸ்தவம் ரோமானியப் பேரரசின் ஓர் ஏகாதிபத்திய மதமாக மாறியது.
வேதபூர்வ கிறிஸ்தவத்திலிருந்து வழிவிலகுதல்...
ரோமானியப் பேரரசின் மதம் ஏகாதிபத்தியமாக இருந்தது. கிறித்துவம் ஒரு நாட்டின் மதமாக மாறியது (அதாவது நாட்டை ஆளுகிற ஆட்சியாளர்களால் உலகம் தொடர்பான மற்றும் ஆன்மீகம் தொடர்பான அதிகாரத்தைத் தங்கள் கைகளில் வைத்திருக்கும் நாடாக மாறியது). இதன் விளைவாக கூடியவிரைவிலேயே ஆராதனை முறைகளில் ஆதிக்கம் செலுத்திய நாட்டின் ஏகாதிபத்திய சட்ட நெறிமுறைகளால் கிறிஸ்தவம் பாதிப்படையத் தொடங்கியது. இந்த மாற்றத்தை கிறிஸ்தவம் தக்கவைத்துக் கொண்டது. இதனால் கிறிஸ்தவம் விரைவிலேயே தனது தனித்துவத்தை இழந்தது, அது மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவேயில்லை. இங்கே சபைக்கு நேரிட்ட உபத்திரவங்கள் நிறுத்தப்பட்டன, ஆனால் அது அப்போஸ்தலர் காலக் கிறிஸ்தவத்திலிருந்து அதிக தூரம் வழிவிலகிச் சென்றுவிட்டது.
இப்போது திருச்சபை ரோமானிய பேரரசரின் உத்தியோக பூர்வ ஆதரவைப் பெற்றுக்கொண்டது. திருச்சபையின் உள்விவகாரங்களில் பேரரசர் கான்ஸ்டன்டைன் பலமுறை தலையிட்டு பல வழிகாட்டுதல்களை வழங்கினார். பேரரசரின் உத்தியோகபூர்வ ஆதரவால் கிறிஸ்தவர்களும் உணர்வுபூர்வமான மகிழ்சியில் திளைத்தனர். தேவனே கான்ஸ்டன்டைனை தெரிந்தெடுத்தார் என்று கிறிஸ்தவர்கள் இந்த உலகிற்குக் காட்ட முயன்றனர். ஆயினும் கான்ஸ்டன்டைன் ஒருபோதும் கிறிஸ்தவ போதகர்களின் வழிகாட்டுதலின் கீழாக வரவில்லை. அவர் அடிக்கடி பிற சமயச் சடங்குகளில் பங்கேற்றுவந்தார். மேலும் கிறிஸ்தவ தலைவர்கள் பேரரசனின் செயல்களைக் கண்டிக்கவில்லை.7 அவர் கி. பி. 314 -ஆம் ஆண்டிலும், 325 -ஆம் ஆண்டிலும் நடைபெற்ற ஆர்லஸ் மற்றும் நிசியாவில் நடைபெற்ற கிறிஸ்தவ மாநாடுகளில் பங்குபெற்று, டொனாட்டிஸ்ட் மற்றும் அரைய்ன் இறையியல் குழப்பங்களுக்கு தீர்வு காண்பதற்காக ஒரு மத்தியஸ்தராக தலைமைப் பொறுப்பை ஏற்றார்.8
முன்பு, ஒரு கிறிஸ்தவராக இருப்பதற்கு பெரிய கிரயம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் இப்போது, திருச்சபையில் உறுப்பினராக இருப்பது அதிகமான அரசியல் நன்மைகளையும் சமூக நன்மைகளையும் கொண்டு வந்தது. மறுபிறப்பின் அனுபவமற்ற ஆயிரக்கணக்கான இரட்சிக்கப்படாத மக்கள் திருச்சபையில் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். சபைகள் எண்ணிக்கையில் வளர்ந்தன. ஆனால் ஆன்மீக அல்லது ஆவிக்குரிய காரியங்களில் மிகவும் பலவீனமாகக் காணப்பட்டது. இந்த விசுவாச துரோகத்தைக் காணச் சகிக்காத பல பரிசுத்தவான்கள் துறவு வாழ்க்கையைத் தெரிந்தெடுத்து, எகிப்து மற்றும் சிரியாவின் பாலைவனப் பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர்.
ரோமானியப் பேரரசு முழுவதிலும் சபை கூடிவருவதற்கான கட்டடங்களைக் கட்ட கான்ஸ்டன்டைன் உத்தரவிட்டார். இவ்வாறு கட்டப்படும் கட்டங்களில் தேவனைக் கனப்படுத்த வேண்டும் என்பதற்காக பிற சமய வாழிபாட்டு முறைமைகளைப் புகுதித்தினார். திருச்சபையின் கட்டடங்களுக்கு இறந்துபோன பரிசுத்தவான்களின் பெயரைச் சூட்டினார்.
இரண்டாம் நூற்றாண்டில் இரத்த சாட்சிகள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களில் விசுவாசிகள் ஒன்றுகூடி திருவிருந்து அனுசரிக்கும் பழக்கம் வழக்கத்தில் இருந்தது. விரைவில் அவர்கள் அந்தக் கல்லறைகளில் வழிபாட்டுத் தலங்களைக் கட்டினார்கள். இறுதியாக, இரத்த சாட்சிகள் அடக்கம்பண்ணப்பட்ட இடங்கள் புனித ஸ்தலங்களாக மாறின. இரத்தசாட்சிகள் பயன்படுத்திய பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் ஆராதனை செய்வது கடவுளுக்குப் பிரியமானது என்னும் எண்ணம் மக்கள் மனதில் உருவாகியது. அந்த இரதத்த சாட்கள் பயன்படுத்திய பொருட்களை அந்த ஆராதனைக் கூடத்தின் பீடத்தின் கீழ் புதைத்துவைத்தனர். நாளடைவில் இத்தகை இரத்த சாட்சிகளின் நினைவுச் சின்னங்களுக்கும் அதிசய வல்லமை இருப்பதாக மக்கள் நம்பத் தொடங்கினர். இறுதியில், புனிதர்களின் நினைவுச்சின்னங்களுக்கு சில அதிசய சக்திகள் இருப்பதாக மக்கள் நம்பினர்.
பேரரசன் கான்ஸ்டன்டைனின் தாயாராகிய ஹெலினா, கிறிஸ்து வாழ்ந்த பகுதியாகிய பாலஸ்தீனத்துக்கு புனிதப் பயணம் மேற்கொண்டபோது, இயேசுகிறிஸ்து அறைந்து கொல்லப்பட்ட சிலுவையைக் கண்டுபிடித்ததாக நினைத்தபோது, இந்த முழு மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் ஓர் உத்வேகம் அளித்தார். மேலும் வெகு விரைவிலேயே இந்த சிலுவைக்கு அதிசய சக்திகள் இருப்பதாகக் கூறப்பட்டது, அதிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட மரத் துண்டுகள் ரோம சாம்ராஜ்யம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டன. இந்த ஹெலினா புனித பூமியில், கிறிஸ்து பிறந்த இடத்திலும், ஒலிவ மலையிலும் சபைக்கான கட்டிடங்களைக் கட்டினாள்.
திருச்சபையின் பிஷப்களுக்கு புனித ஆடைகள் என்று சொல்லப்படுகிற சிறப்பு ஆடைகள்அறிமுகப்படுத்தப்பட்டன. இதனிமித்தம் இந்த பிஷப்கள் மற்றவர்களைக் காட்டிலும் மிகவும் ஆடம்பரமான ஆடைகளை அணியத் தொடங்கினார்கள்.9 மேலும் பிற தெய்வங்களின் வழிப்பாட்டு ஆராதனை முறைகள் மற்றும் திருவிழாக்களில் கடைப்பிடிக்கப்பட்ட மெழுகுவர்த்திகள், புனித யாத்திரைகள் போன்றவை கிறிஸ்தவ மதத்திற்குள் ஊடுருவின. அணிவகுப்பு ஆராதனைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, பாடகர் குழுக்கள் உருவாகின. இதன் விளைவாக சபையின் ஆராதனையில் சபை மக்களின் பங்களிப்பு குறைந்து, அவர்கள் வெறுமனே வந்து செல்லக்கூடியவர்களாக மாறினார்.10
மேற்கண்ட காரியங்கள் யாவும் திருச்சபைக்குள் புகுந்ததினால், வேதபூர்வ கிறிஸ்தவத்திலிருந்து படிப்படியாக திருச்சபை விலகிச் சென்றது. திருச்சபையின் வழிவிலகலில் இது ஒரு தொடக்கம் மட்டுமே எனலாம். இதற்குப் பிறகு பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டன என்பது வரலாறு. ஆயினும் அந்தக் கால கட்டங்களிலும் சில தேவபக்தியுள்ள சிலர் திருச்சபை விவகாரங்களின் தன்னாட்சி அதிகாரத்தைப் பாதுகாக்க விரும்பினர். இத்தாலியின் மிலன் நகரைச் சேர்ந்த பிஷப் அம்புரோஸ் என்பார் இத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.11 இந்த அம்புரோஸ் பயமற்றவராகவும் திருச்சபையின் ஆளுமை மிக்க தலைவராகவும் விளங்கினார். கி. பி. 390 -ஆம் ஆண்டில், பேரரசர் தியோடோசியஸ் தெசலோனிக்கேயா மாகாணத்தின் ஆளுநர் கொலை செய்யப்பட்டதற்காக, ஏறத்தாழ ஏழாயிரம் தெசலோனிக்கேய மக்களை படுகொலை செய்யவும் உத்தரவிட்டார். பேரரசர் திருவிருந்தில் பங்கேற்கும்படி சபைக்கு வந்தபோது, அவர் இந்தப் படுகொலைக்காக மனப்பூர்வமான மன்னிப்பைக் கேட்காதவரையும், கர்த்தருக்கு முன்பாக தன்னைக் குற்றவாளி என்று அறிக்கையிடாத வரை அவருக்கு திருவிருந்து கொடுப்பதில்லை என்று கூறிவிட்டார். ஆவிக்குரிய காரியங்களில் திருச்சபையின் நியாயமான உரிமைகளை ஆட்சியாளர்கள் மதித்து நடக்க வேண்டும் என்று அம்புரோஸ் விரும்பிச் செயல்பட்டார்.12
இத்தகைய தீரம்மிக்க அம்புரோஸ் என்பவரைப் போல் பலர் தைரியமாக நடந்து கொள்ளவில்லை என்பது துக்கமான காரியம். எனவே நாட்கள் செல்லச் செல்ல நிலைமை மேலும் மோசமாகியது. தலைவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு உண்மையாக நடந்துக் கொள்ளாதபோது, திருச்சபை சத்தியத்திலிருந்து விலகிச் சென்றுவிட்டது. என்பதே திருச்சபை வரலாறு நமக்குச் சான்றளிக்கிறது. அதேவேளையில், இவற்றின் ஊடாகத் தேவனின் இறையாண்மையும் தொடர்ந்து வெளிப்பட்டதை திருச்சபை வரலாற்றில் நாம் காண்கிறோம். திருச்சபை தேவனுக்குச் சொந்தமானது, அவரே தமது சபையைக் கட்டுகிறார். உண்மையுள்ள தேவனுடைய மக்களாகிய ஆண்களும் பெண்களும் இருந்தனர். வழிவிலகிச் சென்றவர்களுக்கு மத்தியில் இவர்கள் சத்தியத்திற்காக உறுதியாக நின்று, தங்கள் இன்னுயிரையே கொடுத்தனர். இறுதியில், தேவன் ஒரு சபைச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தார்.
ஆகவே, இன்றைய திருச்சபை மக்களாகிய நாம் தேவனுக்கும் அவருடைய வார்த்தைகளுக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. நமக்கு முன் வாழ்ந்து மறைந்த, மகிமையில் சந்திக்கப்போகும் திரளான சாட்சிகளின் மேகத்தை நாம் நினைவுகூர்வது பெரும் நன்மையைக் கொண்டுவரும்.
அடுத்த கட்டுரையில், ரோமன் கத்தோலிக்க திருச்சபை மற்றும் போப்பாண்டவர் ஆட்சியை நிறுவ வழிவகுத்த நிகழ்வுகளை கண்டறிந்து உங்கள் முன்சமர்ப்பிக்க விரும்புகிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கட்டுரைக்கு உதவிய அடிக்குறிப்புகள்...
1. Justo L. Gonzalez, The Story of Christianity, The Early Church to the Present Day, pg. 125-126.
2. Ibid, 125.
3. Ibid.
4. Mark A. Noll, Turning Points Decisive Moments in the History of Christianity, Pg. 60.
5. Earle E. Cairns, Christianity through the centuries, 3rd edition, pg. 138.
6. Ibid. 107
7. Ibid, 116-118.
8. Earle E. Cairns, Christianity through the centuries, 3rd edition, pg. 119.
9. Justo L. Gonzalez, The Story of Christianity, The Early Church to the Present Day, pg. 120-121.
10. Earle E. Cairns, Christianity through the centuries, 3rd edition, pg. 119.
11. Justo L. Gonzalez, The Story of Christianity, The Early Church to the Present Day, pg. 107.
12. Ibid, 115