முன்னொரு காலத்தில் யோனா என்ற இறைத்தூதர் ஒருவர் வாழ்ந்து வந்தார். கடவுள் தரும் செய்தியை சம்பந்தப்பட்ட மக்களுக்கு அறிவிப்பது அவரது பணி. அவரது காலத்தில் நினிவே என்ற பட்டணத்தில் இருந்த மக்கள் மிகவும் தீயவர்களாகவும் ஒழுக்க நெறி கெட்ட வாழ்க்கை வாழ்பவர்களாகவும் இருந்தனர். அச்சமயத்தில் கடவுள் யோனாவிடம், “நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், அதற்கு அழிவு வரப்போகிறது என்று அங்குள்ளோருக்கு அறிவி. அவர்கள் செய்யும் தீமைகள் என்முன்னே வந்து குவிகின்றன” என்றார்.
யோனாவோ கடவுளிடமிருந்து தப்பியோட எண்ணித் தர்சீஸ் என்ற ஊருக்கு புறப்பட்டார். அவர் தர்சீசுக்குப் புறப்படவிருந்த ஒரு கப்பலைக் கண்டு, கட்டணம் கொடுத்து, கடவுளிடமிருந்து தப்பியோட அந்தக் கப்பலில் ஏறி, தர்சீசுக்குப் பயணப்பட்டார். ஆனால் கடவுள் கடலில் கடுங்காற்று வீசும்படி செய்தார். கடலில் பெரும் கொந்தளிப்பு உண்டாயிற்று: கப்பல் உடைந்துபோகும் நிலையில் இருந்தது. கப்பலில் இருந்தவர்கள் திகிலடைந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தம் தெய்வத்தை நோக்கி மன்றாடலானார்கள். கப்பலின் பளுவைக் குறைப்பதற்காக அவர்கள் அதிலிருந்த பொதிகளை கடலில் தூக்கியெறிந்தார்கள். யோனாவோ ஏற்கெனவே கப்பலின் அடித்தட்டுக்குப் போய்ப் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். கப்பல் தலைவன் அவரிடம் வந்து, “என்ன இது? இப்படித் தூங்கிக் கொண்டிருக்கிறாயே! எழுந்திரு. நீயும் உன் தெய்வத்தை நோக்கி வேண்டிக்கொள். ஒருவேளை அந்தத் தெய்வமாவது நம்மைக் காப்பாற்றலாம். நாம் அழிந்து போகாதிருப்போம்” என்றார்.
பிறகு கப்பலில் இருந்தவர்கள், “நமக்கு இந்தப் பெரும் தீங்கு யாரால் வந்தது என்று கண்டறியச் சீட்டுக் குலுக்குவோம்” என்று சொல்லி, சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். சீட்டு யோனாவின் பெயருக்கு விழுந்தது. எனவே, அவர்கள் அவரை நோக்கி, “இப்பொழுது சொல். இந்தப் பெருந்தீங்கு யாரால் வந்தது? உன் வேலை என்ன? எங்கிருந்து வருகிறாய்? உன் நாடு எது?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “நான் ஒரு யூதன். நீரையும் நிலத்தையும் படைத்த விண்ணகக் கடவுளை வழிபடுபவன்” என்று சொன்னார். மேலும், தாம் அந்த கடவுளிடமிருந்து தப்பியோடி வந்ததாகவும் கூறினார். எனவே, அவர்கள் மிகவும் அஞ்சி, “நீ ஏன் இப்படிச் செய்தாய்,” என்று கேட்டார்கள். கடலில் கொந்தளிப்பு மேலும் கடுமையாகிக் கொண்டிருந்ததால் அவர்கள் யோனாவிடம், ”கடல் கொந்தளிப்பு அடங்கும்படி நாங்கள் உன்னை என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “நீங்கள் என்னைத் தூக்கிக் கடலில் எறிந்து விடுங்கள். அப்பொழுது கொந்தளிப்பு அடங்கிவிடும்: நீங்கள் பிழைத்துக் கொள்வீர்கள். உங்களைத் தாக்கும் இந்தக் கடும்புயல் என்னால்தான் உண்டாயிற்று என்பதை நான் அறிவேன்” என்றார்.
அவர்கள் அதைக் கண்டு கடவுளை நோக்கிக் கதறி, “கடவுளே, இந்த மனிதனுடைய உயிரின் பொருட்டு எங்களை அழிக்க வேண்டாம்: குற்றமில்லாத ஒருவனைச் சாகடித்ததாக எங்கள் மீது பழிசுமத்த வேண்டாம். ஏனெனில், கடவுளாகிய நீரே உமது திருவுளத்திற்கேற்ப இவ்வாறு செய்கிறீர்” என்று சொல்லி மன்றாடினார்கள். பிறகு அவர்கள் யோனாவைத் தூக்கிக் கடலில் எறிந்தார்கள்: கடல் கொந்தளிப்பும் தணிந்தது. அதைக் கண்டு அந்த மனிதர்கள் கடவுளுக்கு மிகவும் பயந்தார்கள். கடவுள் ஏற்பாடு செய்திருந்த படியே ஒரு பெரிய மீன் வந்து யோனாவை விழுங்கிற்று. யோனா மூன்று நாள் இரவும் பகலும் அந்த மீன் வயிற்றில் இருந்தார். யோனா மீனின் வயிற்றிலிருந்த படியே தன் தவறுக்காக மனம்வருந்தி கடவுளை நோக்கி மன்றாடினார். ஆண்டவர் அந்த மீனுக்குக் கட்டளையிட, அது யோனாவைக் கரையிலே கக்கியது. தன்னுடைய படைப்புகள் மீது முழு ஆளுகையை செலுத்தும் கடவுள் “எனது பெயரைப் போற்றிடும் என் மக்கள் சிறுமையுற்று, தங்கள் பாவங்களிலிருந்து மனம் வருந்தி, இரந்து மன்றாடி, என் திருமுகத்தை நாடினால், வானகத்திலிருந்து அவர்களது மன்றாட்டுகளைக் கேட்டு அவர்கள் பாவங்களை மன்னித்து அவர்களை விடுவிப்பேன்” என்று சொல்கிறார்.
இந்த கட்டுரை இந்து தமிழ் திசை, ஆனந்த ஜோதி இணைப்பிதழுக்காக எழுதப்பட்டு, செப்டம்பர் 14, 2023 அன்று வெளிவந்துள்ளது.