சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரவேல் நாட்டில் தாவீது என்னும் பேருள்ள ஒரு சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் தகப்பனாருடைய ஆடுகளை மேய்த்து வந்தான். அவனுக்கு இருந்த ஏழு அண்ணன்களில் முதல் மூன்று அண்ணன்கள் இஸ்ரவேல் நாட்டின் ராணுவத்தில் சேவகர்களாக பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். தாவீதின் தகப்பனாகிய ஈசாய், ஒருமுறை தாவீதை அழைத்து ராணுவத்தில் இருக்கிற அவனுடைய அண்ணன்களை சந்தித்து நலம் விசாரித்து வரவும், அவர்களுக்கு தேவையான உணவை கொடுத்து விட்டு வரவும் அனுப்பினார்.
அந்நாட்களில் இஸ்ரவேல் நாட்டிற்கு அருகில் இருந்த பெலிஸ்தர் இஸ்ரவேல் மீது போர் தொடுக்கும்படி படையெடுத்து வந்திருந்தார்கள். பெலிஸ்திய ராணுவத்தினர், இஸ்ரவேல் ராணுவத்தைவிட மிகவும் பலசாலிகளாகவும் அதிக போர் ஆயுதங்கள் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். பெலிஸ்திய ராணுவத்தில் கோலியாத் எனும் பெயர் கொண்ட ராட்சசன் ஒருவன் இருந்தான். அவன் கிட்டத்தட்ட இரண்டு மீட்டர் உயரம் உள்ளவனும், மிகவும் பலசாலியும் கைதேர்ந்த போர் வீரனாகவும் இருந்தான். அவனைக் கண்டு ஒட்டுமொத்த இஸ்ரவேல் ராணுவமும் பயந்து நடுங்கியது. ஒவ்வொரு நாளும் அவன் இஸ்ரவேல் ராணுவத்திற்கு முன்பாக வந்து நின்று, இஸ்ரவேல் மக்களின் கடவுளை சபித்து, ஏளனம் செய்து, இஸ்ரவேல் நாட்டையும் மிகவும் இழிவாக பேசுவான். நாம் எல்லோரும் போர் செய்வதற்கு பதிலாக உங்களில் ஒருவனை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். அவன் வந்து என்னோடு சண்டை போடட்டும், அவன் என்னை தோற்கடித்தால், எங்கள் முழு பெலிஸ்திய நாடும் உங்களுக்கு அடிமையாக இருப்பார்கள் என்றும், நான் அவனை தோற்கடித்தால் நீங்கள் எல்லோரும் எங்களுக்கு அடிமைகள் என்றும் சொல்லுவான். என்னுடன் சண்டையிட உங்களில் ஒரு போர் வீரன் கூட இல்லையா என்று சொல்லி மிகவும் ஏளனம் செய்வான்.
தாவீது தன்னுடைய அண்ணன்களை பார்க்க போர்க்களத்திற்கு வந்த போதும் இந்த ராட்சசன் முன்னாள் வந்து, இஸ்ரவேல் நாட்டையும் அவர்களின் கடவுளையும் சபித்து தூஷிக்கிதையும், அவர்களை ஏளனம் பண்ணுகிறதையும் கண்டான். பலமுள்ள இஸ்ரவேலின் கடவுளை நான் நம்புகிறபடியால் கடவுளின் பலத்தினால் நான் இந்த ராட்சசனை தோற்கடிப்பேன் என்று சொன்னான். தாவீதின் இந்த வார்த்தைகளை அன்றைய இஸ்ரவேலின் ராஜாவாக இருந்த சவுலுக்கு அறிவித்தார்கள். தாவீது வெறும் 15 வயதுள்ள சிறுவனாக இருந்தபடியாலும், போர் புரிவதில் அவனுக்கு பயிற்சி இல்லாததினாலும் தாவீதின் மீது சவுலுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. ஆனாலும் அவனது தைரியத்தையும் உறுதியையும் பார்த்து, அந்த ராட்சசனுடன் சண்டைக்கு செல்ல தாவீதிற்கு அனுமதி அளித்தான். மேலும், சவுல் ராஜா போருக்கு தேவையான ஆயுதங்களையும், பாதுகாப்பு கவசங்களையும் தாவீதுக்கு கொடுத்தான். ஆனாலும் அவைகளில் தனக்கு பழக்கம் இல்லாததால் இவை எதுவுமே வேண்டாம் என்று தாவீது நிராகரித்துவிட்டு, கல் எரியும் ஒரு கவனையும் ஐந்து கூழாங்கற்களை மட்டும் எடுத்துக் கொண்டான்.
தன்னுடன் சண்டையிட வந்திருக்கும் தாவீதை கண்ட ராட்சசன், “நீ கோலுடன் என்னிடம் வர நான் என்ன நாயா? என்று சொல்லி அருகே வா, வானத்துப் பறவைகளுக்கும் விளங்குகளுக்கும் உன் உடலை இறையாக்குவேன்“ என்றான். ஆனால், தாவீது பெலிஸ்தியனிடம் நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய், நானோ நீ இகழ்ந்த இஸ்ரயேலின் படைத்திரளின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர்தம் பெயரால் வருகிறேன் இன்றே ஆண்டவர் உன்னை என் கையில் ஒப்புவிப்பார். நான் உன்னை வீழ்த்தி உன் உடலைத் துண்டிப்பேன் பெலஸ்தியரின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கும் பூவுலக விலங்குகளுக்கும் கையளிப்பேன்: ஆண்டவர் வாளினாலும் ஈட்டினாலும் மீட்கின்றவர் அல்லர் என்று இந்த மக்கள்கூட்டம் அறிந்து கொள்ளட்டும் ஏனெனில் இது ஆண்டவரின் போர் அவரே உங்களை எங்கள் கையில் ஒப்புவிப்பார் என்றார். ராட்சசன் எழுந்து தாவீதை நோக்கி புறப்படுகையில் தாவீது அவனுடன் போரிட விரைந்து ஓடினான். தாவீது ஒரு கல்லை எடுத்து கவணில் வைத்து சுழற்றிப் பெலிஸ்தியனுடைய நெற்றியை குறி பார்த்து எறிந்தான். அந்த கல்லிலும் அவனது நெற்றிக்குள் தாக்கிப் பதியவே அவன் தரையில் முகம் குப்புற விழுந்தான். இவ்வாறு தாவீது கையில் வாளேதும் இன்றிக் கவணும் கல்லும் கொண்டு அவனை வீழ்த்திக் கொன்றார். நம்முன் இருக்கும் பிரச்சனை எத்தனை பெரியதாக இருந்தாலும் கடவுளை நோக்கி உதவி கேட்கும் பொழுது தம்மிடத்தில் கேட்கிற யாவருக்கும் அவர் உதவி செய்கிற கடவுளாய் இருக்கிறார் என்று திருமறை போதிக்கிறது.
இந்த கட்டுரை இந்து தமிழ் திசை, ஆனந்த ஜோதி இணைப்பிதழுக்காக எழுதப்பட்டு, செப்டம்பர் 7, 2023 அன்று வெளிவந்துள்ளது.