பாடல் : J.S. அற்புதராஜ் மர்காஷிஷ்
பாடல் பிறந்த கதை
''கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? இல்லவே, இல்லை! இந்த வேத புத்தகமெல்லாம் நான் நம்பக் கூடாத கற்பனைக் கதைப் புத்தகம் தான்!'' என இளமைத்துடிப்புடன் முழங்கிக் கொண்டிருந்தான் அந்தப் போதகரின் மகன்! ''உன் வாலிப நாட்களில் உன் சிருஷ்டிகரை நினை'' என்ற வேதவசனத்திற்கு எதிர்மறையாக, தெய்வ நம்பிக்கையை முற்றும் இழந்த நாத்திகனாக மாறியிருந்தான் வாலிபன் அற்புதராஜ்!
ஆனால் தன்னை விட்டுத் தூரமாய் விலகி ஓடிய, காணாமற்போன இந்த ஆட்டைத் தேடித் தூக்கி அணைத்து, மாற்றினார் நல்ல மேய்ப்பனாம் இறைவன் இயேசு. ஆம், 1969 -ம் ஆண்டில், இந்த அற்புதத்தை ஆண்டவர் அற்புதராஜின் வாழ்க்கையில் நிகழ்த்தி, அவரை ஆட்கொண்டார். புது வாழ்வு பெற்ற அற்புதராஜ் தன்னை ஆண்டவரின் கரத்தில் அர்ப்பணம் செய்தார். இந்த அருமையான அர்ப்பணப் பாடலை இயற்றிய சகோதரர் J.S. அற்புதராஜ் மர்காஷிஷ், தென்னிந்தியத் திருச்சபையின் திருநெல்வேலித் திருமண்டலப் போதகரான அருள்திரு. ஜான் சாமுவேல் ஐயரின் மகனாக 27.3.1942 அன்று பிறந்தார். இவரது சொந்த ஊர் மெஞ்ஞானபுரம். கண்டிப்புடன் கூடிய, பயபக்தியுள்ள கிறிஸ்தவக் குடும்பப் பின்னணியில் வளர்ந்தார். நாசரேத்தில் தனது படிப்பைத் தொடர்ந்த அற்புதராஜ், முதுநிலைக் கலைப்பட்டம் பெற்று, அத்துடன் ஆசிரியர் பயிற்சி முதுநிலைப்பட்டமும் பெற்று முடித்தார். தற்சமயம் திருநெல்வேலியிலுள்ள CSI ஷாப்டர் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
தனது சிறுவயது முதல் இசையில் விருப்பமுள்ளவராக வளர்ந்த அற்புதராஜ், நாசரேத் மற்றும் முதலூர் ஆலய / பள்ளிப் பாடகர் குழுவில் இருந்தார். பின்னர் சாயர்புரத்திலும், தூத்துக்குடி கால்டுவெல் காலனி ஆலயத்திலும் ஆர்கன் வாசித்து, பாடகர் குழுத் தலைவராகவும் திருப்பணியாற்றினார். தற்போது பாளையங்கோட்டையிலுள்ள கதீட்ரல் பேராலயப் பாடகர் குழுத் தலைவராக விளங்குகிறார். 05.05.1966 அன்று திருமணமான இச்சகோதரருக்கு தேவன் ஒரு மகளையும் இரு மகன்களையும் கொடுத்து, இவரது இல்லறத்தை ஆசீர்வதித்திருக்கிறார். மேனாட்டிசையில் புலமை மிக்க இவர், கீ போர்டு வாசிப்பதில் திறமை பெற்றிருக்கிறார். இதுவரை 85 பாடல்களை இயற்றி ராகமமைத்திருக்கிறார். ''மலரைப் பார்த்து'', ''சிலுவையைப் பார்த்து'' என்ற இரு ஒலிநாடாக்களையும் வெளியிட்டிருக்கிறார்.
சகோதரர் அற்புதராஜ் தூத்துக்குடியில் பணியாற்றிய நாட்களில், 1978-ம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற, கிறிஸ்துவுக்கு வாலிபர் இயக்கத்தின் சிறப்புக் கூடுகைக்கென இப்பாடலை இயற்றினார். அக்கூட்டங்களில் இப்பாடல் முதன்முறையாகப் பாடப்பட்டு அறிமுகமானது. வாலிபர் மத்தியில் ஊழியம் செய்துவரும் அற்புதராஜ், இப்பாடலைத் தனது செய்தியின் இறுதியில், சமர்ப்பண அழைப்புப் பாடலாகப் பாடுவது வழக்கமாயிற்று. இப்பாடலின் மூலம், அநேக வாலிபர்கள் ஆண்டவருக்குத் தங்களை அர்ப்பணம் செய்தனர்.
ரோமர் 12- ம் அதிகாரத்தின் முதலிரு வசனங்களின் அடிப்படையில், நம்மை முற்றிலும் அர்ப்பணம் செய்ய அழைக்கும் இப்பாடல், வாலிபர்களுக்கெனப் பிரத்தியேகமாக எழுதப்பட்டாலும், கிறிஸ்தவ சமுதாயத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிப் பாடும் அர்த்தமுள்ள பாடலாக இன்றும் விளங்குகிறது. இப்பாடலைக் கொண்டு தேவன் அதிசய அற்புதங்களைத் தன் வாழ்வில் பொழிந்ததாக சகோதரர் அற்புதராஜ் சாட்சி பகருகின்றார். கிறிஸ்தவ வாழ்வின் இவ்வுலக ஓட்டத்தில், சோதனைகளால் தடுமாறி விழும் வேளைகளில், மீண்டும் நமது அர்ப்பணத்தை ஆண்டவரிடம் புதுப்பித்துக்கொள்ளவும் இப்பாடல் உதவுகிறது எனத் தன் அனுபவத்திலிருந்து எடுத்துக் கூறுகிறார்.