பாடல்: மல்லிகா துரைப்பாண்டியன்
பாடல் பிறந்த கதை
தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின் வீட்டில் கம்பீரமாக நின்ற அந்த பிரமாண்டமான பியானோவிலிருந்து இசைமழை பொழிந்து கொண்டிருந்தது. கண்களை மூடியவாறு தனது கற்பனையில் உதித்த அந்த மெட்டை வாசித்துக்கொண்டிருந்தார் பண்டிதரின் கொள்ளுப்பேரன் திரு.TAG துரைப்பாண்டியன். பரம்பரை பரம்பரையாகக் கிறிஸ்தவத் தமிழ் உலகுக்கு, பேர்பெற்ற இக்குடும்பம் ஆற்றிய இசைத்தொண்டை, அவரது தலைமுறைச் சமுதாயத்திற்கு, தஞ்சை இம்மானுவேல் இசைக்குழுவின் இயக்குனர் என்ற பொறுப்பை மேற்கொண்டு அவர் செய்து வந்தார்.
''மல்லிகா! மல்லிகா! இங்கே வாம்மா! இதைக் கொஞ்சம் கேட்டுப் பாரேன்!'' எனக் குரல் கொடுத்தார் துரைப்பாண்டியன். தனது கணவரின் இசை ஊழியத்தில் தோளோடு தோள் நின்று பொறுப்பேற்கும் திருமதி மல்லிகா துரைப்பாண்டியன், விரைந்து வந்து அமர்ந்தார். அந்தப் புதிய மெட்டைக் கவனித்துக் கேட்டார்.
''புத்துணர்ச்சியூட்டும் உற்சாகமான மெட்டாக இருக்கிறதே!'' என, முகமலர்ச்சியுடன் கூறினார். ''அப்படியானால் அதற்கேற்ற பாடலொன்று எழுதிக் கொடு, பார்க்கலாம்.''என்று அன்புக் கட்டளையிட்டார் துரைப்பாண்டியன். அந்த மெட்டில் துதியின் சத்தம் தொனிப்பதாக உணர்ந்த மல்லிகா,
சங்கீதக் கலை மாமணி D.A. தனபாண்டியனின் மூத்த குமாரத்தியாகப் பிறந்த மல்லிகாவுக்கு, 'இசை' என்பது உயிரோடு கலந்த ஒன்று. ''மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்க வேண்டுமா?'' என்பது போல், தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின் கொள்ளுப் பேத்தியான மல்லிகா, இயற்கையிலேயே இனிய குரல் வளமும், தனது தகப்பனாரின் இசை ஞானமும் பெற்றிருந்தார். மேனாட்டு இசையில் வித்தகரான, தன் அத்தை மகன் D.A.G. துரைப்பாண்டியனைக் கைப்பிடித்த மல்லிகா, கணவரோடு சேர்ந்து தேவநாமத்துக்கு மகிமையாக இசைக்கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தார். தகப்பனாரின் கர்நாடக இசையும், கணவரின் மேனாட்டு இசையும் ஒருங்கிணைந்து, அழகான இசைவுடன் பல பாடல்கள் உருவாயின.
இசையில் இறைவன் தந்த தாலந்தை இவர்கள் இருவரும் இறைவனுக்கே முற்றிலுமாய் அர்ப்பணித்ததால், மேலும் மேலும் இவர்களின் இசை ஊழியம் ஆசீர்வதிக்கப்பட்டது. இவர்கள் நடத்திவந்த இம்மானுவேல் இசைக்குழு, அநேக இடங்களில் ஆலயக்கட்டுமான நிதிக்காகவும், சமுதாயத்தில் நலிவுற்றோர் நலனுக்காகவும், கிறிஸ்தவ இசைக் கச்சேரிகள் நடத்தியது. இந்த இசைக்கச்சேரிகள் தேவனுக்கு மகிமையாகவும், ஆன்மீகப் புத்துணர்ச்சியூட்டுவதாகவும் தமிழகமெங்கும் நடைபெற்றன.
HMV, கொலம்பியா நிறுவனங்கள், திருமதி மல்லிகா துரைப்பாண்டியன் பாடிய 10 இசைத்தட்டுகளை வெளியிட்டுள்ளன. இவரது தந்தை இசையமைத்த கர்நாடக இசைப்பாடல்கள் பலவற்றை, இவர் தனது சகோதரிகளான தேவிகா மற்றும் உமாவுடன் இணைந்து பாடியிருக்கிறார். CLS நிறுவனம் வெளியிட்ட ''இசைப்பாடல் பல பாடியே'', ''இரட்சணிய தேவாரம்'' போன்ற ஒலி நாடாக்களில் இப்பாடல்களைக் கேட்கலாம். இவ்விசைத் தம்பதியருக்கு இறைவன் தந்த மக்கட் செல்வங்கள் கிறிஸ்டியனும், கிறிஸ்டினாவும், இசையில் தேர்ச்சி பெற்றவர்களாகவும், இறைவனுக்கே அத்தாலந்துகளை அர்ப்பணிப்பவர்களாகவும் இருப்பது தேவ கிருபையே.
மல்லிகா துரைப்பாண்டியன் இதுவரை முப்பது பாடல்கள் எழுதியுள்ளார். இவரது தந்தை இவரை, ''நீ புரட்சிக் கவிஞரா, அல்லது வறட்சிக் கவிஞரா?'' என நகைச்சுவையோடு வினவுவார். வேதம் எனும் கருவூலத்திலிருந்து, ஆழ்ந்த சத்தியங்களைக் கருப்பொருளாக எடுத்தெழுதும் மல்லிகா சிரித்துக் கொள்வார். தாவீதின் சங்கீதம் இவருக்கு மிகவும் விருப்பமான உயிர்த்தோழன். வாழ்க்கையில் அநேக இடுக்கண்கள், பிரச்சினைகள், இன்னல்கள் வந்து நெருக்கும்போது, சங்கீதப் புத்தகமே இவரது புகலிடம். குறிப்பாக 46- ம் சங்கீதம் இவரது இதய கீதம் என்றே கூறலாம். இச்சங்கீதத்தின் அடிப்படையில், ''தேவன் நமக்கு அடைக்கலமே'', என்ற அருமையான பாடலை இயற்றியிருக்கிறார். மேலும், சங்கீதங்கள் 13, 34, 42, 148, 150- ஐயும் பாடல்களாக எழுதிப் பாடியிருக்கிறார்.
ஆபிரகாம் பண்டிதரின் இசை ஊழியத்தைத் தலைமுறை தலைமுறையாய்த் தொடர்ந்து செய்ய, தேவன் இக்குடும்பத்தை இவர்கள் சந்ததிவரை ஆசீர்வதித்து வழிநடத்தியிருக்கிறார்.