வேதாகமத்தை வாசி

உன்னதப்பாட்டு 4

                   
புத்தகங்களைக் காட்டு
1என்னே உன் அழகு! “என் அன்பே, என்னே என் அழகு! முகத்திரைக்குப் பின்னுள்ள உன் கண்கள் வெண்புறாக்கள்! கிலயாதின் மலைச்சரிவில் இறங்கி வரும் வெள்ளாட்டு மந்தை போன்றது உன் கூந்தல்.
2உன் பற்களோ மயிர் கத்தரிப்பதற்கெனக் குளித்துக் கரையேறும் பெண் ஆடுகளின் மந்தை போல்வன: அவையாவும் இரட்டைக் குட்டி போட்டவை: அவற்றுள் ஒன்றேனும் மலடு இல்லை.
3செம்பட்டு இழைபோன்றன உன்னிதழ்கள்: உன் வாய் எழில் மிக்கது: முகத்திரையின் பின்னிருக்கும் உன் கன்னங்கள் பிளந்த மாதுளம் பழத்திற்கு நிகரானவை.
4தாவீதின் கொத்தளம்போல் அமைந்துள்ளது உன் கழுத்து: வரிவரியாய் ஆயிரம் கேடங்கள் ஆங்கே தொங்குகின்றன: அவையெலாம் வீரர்தம் படைக்கலன்களே.
5உன் முலைகள் இரண்டும் லீலிகள் நடுவில் மேயும் இருமான் குட்டிகளை ஒக்கும்: கலைமானின் இரட்டைக் குட்டிகளைக் ஒக்கும்.
6பொழுது புலர்வதற்குள், நிழல்கள் மறைவதற்குள், வெள்ளைப்போள மலையினுக்கு விரைந்திடுவேன்: சாம்பிராணிக் குன்றுக்குச் சென்றிடுவேன்:
7என் அன்பே, நீ முழுவதும் அழகே! மறுவோ உன்னில் சிறிதும் இலதே!
8லெபனோனிலிருந்து வந்திடு மணமகளே: லெபலோனிலிருந்து வந்திடு புறப்படு: அமானா மலையுச்சியினின்று - செனீர் மற்றும் எர்மோன் மலையுச்சியினின்று- சிங்கங்களின் குகைளினின்று - புலிகளின் குன்றுகளினின்று இறங்கிவா!
9என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய்: என் தங்காய், மணமகளே, உன் விழிவீச்சு ஒன்றினாலே, உன் ஆரத்தின் முத்து ஒன்றினாலே, என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாய்.
10உன் காதல் எத்துணை நேர்த்தியானது: என் தங்காய், மணமகளே, உன் காதல் திராட்சை இரசத்தினும் இனிது! உனது பரிமளத்தின் நறுமணமோ எவ்வகைத் தைலத்தின் நறுமணத்தினும் சிறந்தது.
11மணமகளே, உன் இதழ்கள் அமிழ்தம் பொழிகின்றன: உன் நாவின்கீழ்த் தேனும் பாலும் சுரக்கின்றன: உன் ஆடைகளின் நறுமணம் லெபனோனின் நறுமணத்திற்கு இணையானது.
12பூட்டியுள்ள தோட்டம் நீ: என் தங்காய், மணமகளே, பூட்டியுள்ள தோட்டம் நீ: முத்திரையிட்ட கிணறு நீ!
13மாதுளைச் சோலையாய்த் தளிர்த்துள்ளாய்: ஆங்கே தித்திக்கும் கனிகள் உண்டு: மருதோன்றியும் நரந்தமும் உண்டு.
14நரந்தம், மஞ்சள், வசம்பு, இலவங்கம், எல்லாவகை நறுமண மரங்களும், வெள்ளைப்போளமும் அகிலும், தலைசிறந்த நறுமணப் பொருள்கள் யாவுமுண்டு.
15நீ தோட்டங்களின் நீரூற்று: வற்றாது நீர்சுரக்கும் கிணறு: லெபலோனினின்று வரும் நீரோடை!
16வாடையே, எழு! தென்றலே, வா! என் தோட்டத்தின்மேல் வீசு! அதன் நறுமணம் பரவட்டும்! என் காதலர் தம் தோட்டத்திற்கு வரட்டும்! அதன் தித்திக்கும் கனிகளை உண்ணட்டும்!

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.