1 | பிள்ளாய்! உன் அடுத்திருப்பவரின் கடனுக்காக நீ பொறுப்பேற்றிருந்தால், அல்லது அன்னியர் ஒருவருக்காகப் பிணையாய் நின்றால், |
2 | அல்லது உன் வார்த்தைகளை முன்னிட்டு ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டால், அல்லது உன் வாய்ச் சொல்லிலேயே நீ பிடிபட நேரிட்டால், |
3 | பிள்ளாய்! உன்னை விடுவித்துக் கொள்ள இப்படிச் செய்: நீ அடுத்திருப்பவரின் கையில் அகப்பட்டுக் கொண்டதால், விரைந்தோடிச் சென்று அவரை வருந்தி வேண்டிக்கொள். |
4 | அதைச் செய்யும் வரையில் கண்ணயராதே: கண் இமைகளை மூடவிடாதே. |
5 | நீ வேடன் கையில் அகப்பட்ட மான் போலிருப்பாய்: கண்ணியில் சிக்கிய குருவிக்கு ஒப்பாவாய்: உன்னைத் தப்புவித்துக் கொள்ளப்பார். |
6 | சோம்பேறிகளே, எறும்பைப் பாருங்கள்: அதன் செயல்களைக் கவனித்து ஞானமுள்ளவராகுங்கள்: |
7 | அதற்குத் தலைவனுமில்லை, கண்காணியுமில்லை, அதிகாரியுமில்லை. |
8 | எனினும், அது கோடையில் உணவைச் சேர்த்துவைக்கும்: அறுவடைக் காலத்தில் தானியத்தைச் சேகரிக்கும். |
9 | சோம்பேறிகளே, எவ்வளவு நேரம் படுத்திருப்பீர்கள்? தூக்கதிலிருந்து எப்போது எழுந்திருப்பீர்கள்? |
10 | இன்னும் சிறிது நேரம் தூங்குங்கள், இன்னும் சிறிது நேரம் உறங்குங்கள்: கையை முடக்கிக்கொண்டு இன்னும் சிறிது நேரம் படுத்திருங்கள். |
11 | வறுமை உங்கள் மீது வழிப்பறிக் கள்வரைப்போல் பாயும்: ஏழ்மைநிலை உங்களைப் போர்வீரரைப்போல் தாக்கும். |
12 | போக்கிரி அல்லது கயவன் தாறுமாறாகப் பேசிக்கொண்டு அலைவான். |
13 | அவன் கண் சிமிட்டுவான்: காலால் செய்தி தெரிவிப்பான்: விரலால் சைகை காட்டுவான். |
14 | அவன் தன் வஞ்சக உள்ளத்தில் சதித்திட்டம் வகுப்பான்: எங்கும் சண்டை மூட்டிவிடுவான். |
15 | ஆகையால் அவனுக்கு எதிர்பாராத நேரத்தில் கேடு வரும்: தீடீரென்று அழிந்துபோவான்: மீPளமாட்டான். |
16 | ஆண்டவர் வெறுக்கும் ஆறு, ஏழாவது ஒன்றும் அவரது வெறுப்புக்கு உரியது. |
17 | அவை இறுமாப்புள்ள பார்வை, பொய்யுரைக்கும் நாவு, குற்றமில்லாரைக் கொல்லும் கை, |
18 | சதித்திட்டங்களை வகுக்கும் உள்ளம், தீங்கிழைக்க விரைந்தோடும் கால், |
19 | பொய்யுரைக்கும் போலிச்சான்று, நண்பரிடையே சண்டை மூட்டிவிடும் செயல் என்பவையே. |
20 | பிள்ளாய்! உன் தந்தையின் கட்டளையைக் கடைப்பிடி: தாயின் அறிவுரையைப் புறக்கணியாதே. |
21 | அவற்றை எப்போதும் உன் இதயத்தில் இருத்திவை: உன் கழுத்துக்கு மாலையென அணிந்து கொள். |
22 | நீ நடந்து செல்லும்போது அவை உனக்கு வழிகாட்டும்: நீ படுத்திருக்கும்போது அவை உன்னைக் காவல் காக்கும்: விழித்திருக்கும்போது உன்னுடன் உரையாடும். |
23 | கட்டளை என்பது ஒரு விளக்கு: அறிவுரை என்பது ஒளி: கண்டித்தலும் தண்டித்தலும் நல்வாழ்வுக்கு வழி. |
24 | அவை உன்னை விலைமகளிடமிருந்து, தேனொழுகப் பேசும் பரத்தையிடமிருந்து விலகியிருக்கச் செய்யும். |
25 | உன் உள்ளத்தால் அவளது அழகை இச்சியாதே: அவள் கண்ணடித்தால் மயங்கிவிடாதே. |
26 | விலைமகளின் விலை ஒரு வேளைச் சோறுதான்: ஆனால், பிறன் மனையாளோ உயிரையே வேட்டையாடி விடுவாள். |
27 | ஒருவன் தன் மடியில் நெருப்பை வைத்திருந்தால், அவனது ஆடை எரிந்துபோகாமலிருக்குமா? |
28 | ஒருவன் தழல்மீது நடந்து சென்றால், அவன் கால் வெந்துபோகாமலிருக்குமா? |
29 | பிறன்மனை நயப்பவன் செயலும் இத்தகையதே: அவளைத் தொடும் எவனும் தண்டனைக்குத் தப்பமாட்டான். |
30 | திருடன் தன் பசியைத் தீர்க்கத் திருடினால், அவனை மக்கள் பெருங்குற்றவாளியெனக் கருதாதிருக்கலாம். |
31 | ஆனால், அவன் பிடிபடும்போது ஏழு மடங்காகத் திருப்பிக்கொடுக்க வேண்டும்: தன் குடும்பச் சொத்து முழுவதையுமே கொடுத்துவிட நேரிடும். |
32 | கற்புநெறி தவறுகிறவன் மதிகேடன். அவ்வாறு செய்வோன் தன்னையே அழித்துக்கொள்கின்றான். |
33 | அவன் நைய நொறுக்கப்படுவான், பழிக்கப்படுவான்: அவனது இழிவு ஒருபோதும் மறையாது. |
34 | ஏனெனில், தன் மனைவி தனக்கே உரியவள் என்னும் உணர்ச்சி ஒரு கணவனிடம் சினவெறியை உண்டாக்கும்: பழி தீர்த்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் நாளில், அவன் இரக்கம் காட்டமாட்டான்: |
35 | சரியீடு எதுவும் ஏற்றுக் கொள்ளமாட்டான்: எவ்வளவு பொருள் கொடுத்தாலும்”அவன் சினம் தணியாது. |