வேதாகமத்தை வாசி

நீதிமொழிகள் 27

                   
புத்தகங்களைக் காட்டு
1இன்று நடக்கப்போவதே தெரியாது: நாளை நடக்கப் போவதை அறிந்தவன்போலப் பெருமையாகப் பேசாதே.
2உன்னை உன்னுடைய வாயல்ல: மற்றவர்களுடைய வாய் புகழட்டும்: உன் நாவல்ல, வேறொருவர் நா போற்றட்டும்.
3கல்லும் மணலும் பளுவானவை: மூடர் தரும் தொல்லையோ இவ்விரண்டையும்விடப் பளுவானது.
4சினம் கொடியது: சீற்றம் பெருவெள்ளம் போன்றது: ஆனால் பொறாமையின் கொடுமையை எதிர்த்து நிற்க யாரால் இயலும்?
5வெளிப்படுத்தப்படாத அன்பை விட, குற்றத்தை வெளிப்படையாகக் கண்டிக்கும் கடிந்துரையே மேல்.
6நண்பர் கொடுக்கும் அடிகள் நல்நோக்கம் கொண்டவை: பகைவர் தரும் முத்தங்களோ வெறும் முத்தப்பொழிவே.
7வயிறார உண்டவர் தேனையும் உதறித் தள்ளுவார்: பசியுள்ளவருக்கோ கசப்பும் இனிக்கும்.
8தம் வீட்டை விட்டு வெளியேறி அலைந்து திரிபவர், தன் கூட்டை விட்டு வெளியேறி அலைந்து திரியும் குருவிக்கு ஒப்பானவர்.
9நறுமணத் தைலம் உள்ளத்தை மகிழ்விக்கும்: கனிவான அறிவுரை மனத்திற்குத் திட்டமளிக்கும்.
10உன் நண்பரையும் உன் தந்தையின் நண்பரையும் கைவிடாதே: உனக்கு இடுக்கண் வரும்காலத்தில் உடன்பிறந்தான் வீட்டிற்குச் செல்லாதே: தொலையிலிருக்கும் உடன்பிறந்தாரைவிட அண்மையிலிருக்கும் நன்பரே மேல்.
11பிள்ளாய், நீ ஞானமுள்ளவனாகி என் மனத்தை மகிழச்செய்: அப்பொழுது நான் என்னைப் பழிக்கிறவருக்குத் தக்க பதிலளிப்பேன்.
12எதிரில் வரும் இடரைக் கண்டதும் விவேகமுள்ளவர் மறைந்து கொள்வார்: அறிவற்றோர் அதன் எதிரே சென்று கேட்டுக்கு ஆளாவர்.
13அன்னியருடைய கடனுக்காகப் பிணையாக நிற்கிறவனுடைய ஆடையை எடுத்துக்கொள்: அதை அந்தக் கடனுக்காகப் பிணையப் பொருளாக வைத்திரு.
14ஒரு நண்பரிடம் விடியுமுன் போய் உரக்கக் கத்தி அவரை வாழ்த்துவது, அவரைச் சபிப்பதற்குச் சமமெனக் கருதப்படும்.
15ஓயாது சண்டைபிடிக்கும் மனைவி, அடைமழை நாளில் இடைவிடாத் தூறல் போன்றவள்.
16அவளை அடக்குவதைவிடக் காற்றை அடக்குவதே எளிது எனலாம்: கையால் எண்ணெயை இறுகப் பிடிப்பதே எளிது எனலாம்.
17இரும்பை இரும்பு கூர்மையாக்குவது போல, ஒருவர்தம் அறிவால் மற்றவரைக் கூர்மதியாளராக்கலாம்.
18அத்திமரத்தைக் காத்துப் பேணுகிறவருக்கு அதன் கனி கிடைக்கும்: தம் தலைவரைக் காத்துப் பேணுகிறவருக்கு மேன்மை கிடைக்கும்.
19நீரில் ஒருவர் தம் முகத்தைக் காண்பார்: அதுபோல, தம் உள்ளத்தில் ஒருவர் தம்மைக் காண்பார்.
20பாதாளமும் படுகுழியும் நிறைவு பெறுவதேயில்லை: ஒருவர் கண்களின் விருப்பமும் நிறைவு பெறுவதில்லை.
21வெள்ளியை உலைக்களமும் பொன்னைப் புடைக்குகையும் சோதித்துப் பார்க்கும்: ஒருவரை அவர் பெறுகின்ற புகழைக்கொண்டு சோதித்துப் பார்க்கலாம்.
22மூடனை உரலில் போட்டு உலக்கையால் நொய்யோடு நொய்யாகக் குத்தினாலும், அவனது மடமை அவனை விட்டு நீங்காது.
23உன் ஆடுகளை நன்றாகப் பார்த்துக் கொள்: உன் மந்தையின்மேல் கண்ணும் கருத்தமாயிரு.
24ஏனெனில், செல்வம் எப்போதும் நிலைத்திராது: சொத்து தலைமுறை தலைமுறையாக நீடித்திருப்பதில்லை.
25புல்லை அறுத்தபின் இளம்புல் முளைக்கும்: மலையில் முளைத்துள்ள புல்லைச் சேர்த்துவை.
26ஆடுகள் உனக்கு ஆடை தரும்: வெள்ளாட்டுக் கிடாயை விற்று விளைநிலம் வாங்க இயலும்.
27எஞ்சிய ஆடுகள் உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் தேவைப்படும் பாலைக் கொடுக்கும்: உன் வேலைக் காரருக்கும் பால் கிடைக்கும்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.