1 | ஞானம் தனக்கு ஒரு வீட்டைக் கட்டியிருக்கின்றது: அதற்கென ஏழு தூண்களைச் செதுக்கியிருக்கின்றது. |
2 | அது தன் பலிவிலங்குகளைக் கொன்று, திராட்சை இரசத்தில் இன்சுவை சேர்த்து, விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது: |
3 | தன் தோழிகளை அனுப்பிவைத்தது: நகரின் உயரமான இடங்களில் நின்று, |
4 | “அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்” என்று அறிவிக்கச் செய்தது: மதிகேடருக்கு அழைப்பு விடுத்தது: |
5 | “வாருங்கள், நான் தரும் உணவை உண்ணுங்கள்: நான் கலந்துவைத்துள்ள திராட்சை இரசத்தைப் பருகுங்கள்: |
6 | பேதைமையை விட்டுவிடுங்கள்: அப்பொழுது வாழ்வீர்கள்: உணர்வை அடையும் வழியில் செல்லுங்கள்” என்றது. |
7 | இகழ்வாரைத் திருத்த முயல்வோர் அடைவது ஏளனமே: பொல்லாரைக் கண்டிப்போர் பெறுவது வசைமொழியே. |
8 | இகழ்வாரைக் கடிந்து கொள்ளாதே: அவர்கள் உன்னைப் பகைப்பார்கள். ஞானிகளை நீ கடிந்து கொண்டால், அவர்கள் உன்னிடம் அன்புகொள்வர். |
9 | ஞானிகளுக்கு அறிவுரை கூறு: அவர்களது ஞானம் வளரும்: நேர்மையாளருக்குக் கற்றுக் கொடு: அவர்களது அறிவு பெருகும். |
10 | ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்: தூயவராகிய அவரைப்பற்றிய உணர்வே மெய்யுணர்வு. |
11 | என்னால் உன் வாழ்நாள்கள் மிகும்: உன் ஆயுட்காலம் நீடிக்கும். |
12 | நீங்கள் ஞானிகளாய் இருந்தால், அதனால் வரும் பயன் உங்களுக்கே உரியதாகும்: நீங்கள் ஏளனம் செய்வோராய் இருந்தால், அதனால் வரும் விளைவை நீங்களே துய்ப்பீர்கள். |
13 | மதிகேடு என்பதை வாயாடியான, அறிவில்லாத, எதற்கும் கவலைப்படாத ஒரு பெண்ணுக்கு ஒப்பிடலாம். |
14 | அவள் தன் வீட்டு வாயிற்படியிலோ, நகரின் மேடான இடத்திலோ உட்கார்ந்துகொண்டு, |
15 | தம் காரியமாக வீதியில் செல்லும் வழிப்போக்கரைப் பார்த்து, |
16 | “அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்” என்பாள்: மதிகேடரைப் பார்த்து, |
17 | “திருடின தண்ணீரே இனிமை மிகுந்தது: வஞ்சித்துப் பெற்ற உணவே இன்சுவை தருவது” என்பாள். |
18 | அந்த ஆள்களோ, அங்கே செல்வோர் உயிரை இழப்பர் என்பதை அறியார்: அவளுடைய விருந்தினர் பாதாளத்தில் கிடக்கின்றனர் என்பது அவர்களுக்குத் தெரியாது. |