1 | அப்பொழுது, இறைவாக்கினர் ஆகாயும், இத்தோ மகன் செக்கரியாவும்- யூதாவிலும் எருசலேமிலும் வாழ்ந்த யூதருக்கு இஸ்ரயேலின் கடவுள் பெயரால் இறைவாக்கு உரைத்தனர். |
2 | அப்போது செயல்தியேல் மகன் செருபாபேலும், யோசதாக்கின் மகன் ஏசுவாவும் முன்வந்து, எருசலேமிலுள்ள கடவுளின் கோவிலை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கினர். கடவுளின் இறைவாக்கினர் அவர்களோடு இருந்து உதவி செய்தனர். |
3 | அக்காலத்தில், பேராற்றின் அக்கரைப்பகுதிக்கு ஆளுநராக இருந்த தத்னாயும், செத்தர்போசனாயும் அவர்களைச் சார்ந்தவர்களும், அவர்களிடம் வந்து, “இக்கோவிலைக் கட்டியெழுப்பவும் இம்மதில்களைக் கட்டி முடிக்கவும் உங்களுக்கு உத்தரசு கொடுத்தது யார்?” என்று வினவினர். |
4 | மேலும் அவர்கள், “இக்கட்டடத்தைக் கட்டுவோர் யார், யார்?” என்று வினவினர். |
5 | கடவுளின் கருணைக் கண் யூத மூப்பர்கள் மேல் இருந்தால் இச்செய்தி தாரியுவைச் சென்றடையும்வரை அவர்களால் தடுத்து நிறத்த இயலவில்லை. எனவே அவர்கள் தாரியுவுக்கு இதைப்பற்றி ஒரு மடல் அனுப்பினார்கள். |
6 | பேராற்றின் அக்கரைப் பகுதிக்கு ஆளுநனாக இருந்த தத்னாயும் செத்தர்போசனாயும் அவனைச் சார்ந்தவர்களும் பேராற்றின் அக்கரைப் பகுதிக்கு அதிகாரியானவர்களும் மடலின் நகல் ஒன்றை மன்னர் தாரியுவுக்கு அனுப்பினர். |
7 | அவருக்கு அனுப்பிய கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது பின்வருமாறு: “மன்னர் தாரியுவுக்கு எல்லா நலமும் உரித்தாகுக! |
8 | மன்னர் அறியவேண்டியது: யூதா மாநிலத்திலுள்ள மாபெரும் கடவுளின் கோவிலுக்குச் சென்றிருந்தோம்: பெரும் கற்களால் அது கட்டப்பட்டு வருகிறது. சுவரில் மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவ்வேலை நுணுக்கமாகவும் விரைவாகவும் செய்யப்பட்டு வருகின்றது. |
9 | எனவே அம் மூப்பர்களை நோக்கி, 'இக்கோவிலைக் கட்டவும், இச்சுவர்களைக் கட்டி முடிக்கவும் உத்தரவு கொடுத்தது யார்?' என்றோம். |
10 | அவர்கள் தலைவர்கள் யார், யார் எனபதை உமக்கு எழுதி அறிவிக்க அவர்களின் பெயர்களைக் கேட்டோம். |
11 | அவர்கள் எங்களுக்குச் சொன்ன மறுமொழியாவது: 'விண்ணுக்கும் மண்ணுக்கும் கடவுளானவரின் ஊழியர்கள் நாங்கள். பல ஆண்டுகளுக்குமுன் இஸ்ரயேலின் பேரரசர் ஒருவர் கட்டிய கோவிலைத் தான் மீண்டும் கட்டியெழுப்புகிறோம். |
12 | எம் முன்னோர் விண்ணகக் கடவுளுக்குச் சினமூட்டியதால், அவர் பாபிலோனின் மன்னனும் கல்தேயனுமான நெபுகத்னேசரின் கையில் அவர்களையும், இக்கோவிலையும் ஒப்புவித்தார். அவன் இக்கோவிலை அழித்தான். மக்களை பாபிலோனுக்கு நாடு கடத்தினான். |
13 | ஆனால் பாபிலோன் மன்னர் சைரசு தம் முதலாம் ஆட்சி ஆண்டில் கடவுளின் இக்கோவிலைக் கட்ட ஆணையிட்டார். |
14 | மேலும் நெபுகத்னேசர் எருசலேமிலுள்ள கோவிலிருந்து பாபிலோன் கோவிலுக்குக் கொண்டு வந்த திருக்கோவில் பொன், வெள்ளிப் பாத்திரங்களை மன்னர் சைரசு பாபிலோன் கோவிலிருந்து எடுத்தார். ஆளுநராகத் தாம் நியமித்த சேஸ்பட்சர் என்பவரிடம் ஒப்படைத்தார். |
15 | மன்னர் அவரிடம் “இப்பாத்திரங்களை எடுத்துக்கொண்டு போய் எருசலேம் கோவிலில் வை. கடவுளின் கோவில் அது இருந்த இடத்திலேயே கட்டப்படட்டும்” என்றார். |
16 | எனவே சேஸ்பட்சர் திரும்பி வந்து எருசலேமில் கடவுளின் கோவிலுக்கு அடித்தளம் இட்டார். அதனால் அன்று முதல் இன்று வரை இது கட்டப்பட்டு வருகின்றது. ஆனால் அது முடிவு பெறவில்லை. |
17 | ஆகவே, இப்பொழுது மன்னர் விரும்பினால், பாபிலோனில் உள்ள தமது கருவூலத்தில் தேடிப்பார்க்கட்டும். எருசலேமில் கடவுளுக்குக் கோவில் கட்டச் சைரசு மன்னர் கட்டளை கொடுத்திருக்கின்றாரா என்பதை அறியட்டும். இதைக் குறித்து மன்னர் தம் விருப்பத்தை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டுகின்றோம்'.” |