1 | பின்னர், யோசியா எருசலேமில் ஆண்டவருக்காகப் பாஸ்கா விழாவைக் கொண்டாடினார்: முதல் மாதத்தின் பதினான்காம் நாளில் அவர்கள் பாஸ்காப்பலி செலுத்தினர். |
2 | அவர் குருக்களுக்கு அவர்களது பணிமுறையை வகுத்துக்கொடுத்து, ஆண்டவரின் இல்லப்பணியில் அவர்களை ஊக்குவித்தார். |
3 | அடுத்து, அவர் இஸ்ரயேலர் அனைவருக்கும் போதனை செய்தவர்களும் ஆண்டவருக்காகத் தங்களையே தூய்மையாக்கிக் கொண்டவர்களுமான லேவியரை நோக்கி,‘இஸ்ரயேல் அரசர் தாவீதின் மகன் சாலமோன் கட்டியெழுப்பிய திருக்கோவிலில் புனிதப் பேழையை வையுங்கள்: உங்கள் தோள்களில் அது ஒரு சுமையாக இருத்தலாகாது! இப்பொழுது, உங்கள் கடவுளாம் ஆண்டவருக்கும், அவர்தம் மக்கள் இஸ்ரயேலுக்கும் பணிபுரியுங்கள்! |
4 | இஸ்ரயேல் அரசர் தாவீதும், அவர்தம் மகன் சாலமோனும் எழுதியுள்ளவாறு குடும்பவாரியாகவும், பகுதிவாரியாகவும் உங்களையே தயார்ப்படுத்திக்கொண்டு, |
5 | நீங்கள் உங்கள் சகோதரராகிய மற்ற மக்களின் பிரிவிற்கேற்பப் பகுதி பகுதியாகத் திருத்தலத்தில் நில்லுங்கள். |
6 | அங்கே பாஸ்காப்பலி செலுத்தி உங்களையே தூய்மையாக்கிக் கொள்ளுங்கள்: மேலும் உங்கள் சகோதரர் மோசேமூலம் வந்துள்ள ஆண்டவரின் வாக்கிற்கேற்ப வாழுமாறு அவர்களையும் தயார்ப்படுத்துங்கள் ‘ என்று கூறினார். |
7 | அங்கிருந்த மக்கள் பாஸ்காப் பலிக்கென அவர்களின் எண்ணிக்கைப்படி. செம்மறி ஆட்டுக்குட்டிகளும் வெள்ளாட்டுக் குட்டிகளுமாக மொத்தம் முப்பதாயிரமும், காளைகள் மூவாயிரமும் அரசர் யோசியா, தம் உடைமையிலிருந்து அளித்தார். |
8 | அவருடைய தலைமை அலுவலர் மக்களுக்கும் குருக்களுக்கும் லேவியருக்குமாக, தன்னார்வக் காணிக்கை அளித்தனர். ஆண்டவரின் இல்லத் தலைமை அதிகாரிகளான இல்க்கியா, செக்கரியா, எகியேல் ஆகியோரும் பாஸ்காப் பலிக்காக இரண்டாயிரத்துஅறுநூறு ஆட்டுக்குட்டிகளையும், முந்நூறு காளைகளையும் அளித்தனர். |
9 | மேலும் கொனானியா, அவன் சகோதரரான செமாயா, நெத்தனியேல், லேவியர் தலைவர்களான அசபியா, எயியேல், யோசபாத்து ஆகியோரும் லேவியருக்குப் பாஸ்காப் பலிக்கென ஐயாயிரம் ஆட்டுக்குட்டிகளையும், ஐந்நூறு காளைகளையும் அளித்தனர். |
10 | அரசரின் கட்டளைப்படி குருக்கள் அவர்களுக்குரிய இடத்தில் நிற்க, லேவியர் தங்கள் பிரிவின்படி காத்திருக்க, பாஸ்காப்பலி தயாரிக்கப்பட்டது. |
11 | அவர்கள் பாஸ்காப் பலிக்குரிய ஆட்டுக்குட்டிகளை வெட்டினர்: குருக்கள் அவற்றின் குருதியைத் தங்கள் கைகளில் பிடித்துத் தெளிக்க, லேவியர் தோலுரித்தனர். |
12 | மேலும், மோசேயின் நூலில் எழுதியுள்ளவாறு மக்கள் ஆண்டவருக்கு எரிபலி செலுத்தும்படி அவர்கள் மூதாதையர் குடும்ப முறைமைப்படி, ஆடுகளையும் காளைகளையும் பிரித்துக் கொடுத்தனர். |
13 | பின்னர் அவர்கள் பாஸ்கா ஆட்டுக்குட்டியை திருச்சட்ட முறைமைப்படி தீயில் வாட்டினர்: புனித காணிக்கைகளைப் பானைகள், சட்டிகள், கொப்பரைகள் ஆகியவற்றில் சமைத்து மக்கள் எல்லாருக்கும் விரைவாகப் பகிர்ந்தளித்தனர். |
14 | இவ்வாறே தங்களுக்காகவும், குருக்களாகவும், பாஸ்காவை ஆயத்தம் செய்தனர். ஆரோனின் மக்களான குருக்கள் எரிபலியையும், கொழுப்பானவற்றையும் இரவுவரை செலுத்தியதால், லேவியர் தங்களுக்காகவும் ஆரோனின் புதல்வர்களான குருக்களாகவும் ஆயத்தம் செய்தனர். |
15 | மேலும் ஆசாபின் வழிமரபினரான பாடகர், தாவீது, ஆசாபு, ஏமான், அரசரின் திருக்காட்சியாளர் எதுத்தூன் ஆகியோரின் கட்டளைக்கேற்ப தமக்குக் குறிக்கப்பட்ட இடத்தில் நின்றனர். வாயிற்காப்போர் ஒவ்வொரு வாயிலிலும் நின்றிருந்தனர், அவர்கள் தங்கள் பணிமுறையிலிருந்து வழுவவில்லை. ஏனெனில், அவர்கள் சகோதரர்களான லேவியர் அவர்களுக்காகப் பாஸ்காவை ஆயத்தம் செய்தனர். |
16 | பாஸ்காவைக் கொண்டாடுதல், ஆண்டவரின் பலிபீடத்தில் எரிபலிகளைச் செலுத்துதல் ஆகிய அவரது வழிபாட்டுமுறை அனைத்தும் அரசர் யோசியாவின் கட்டளைப்படி அந்த நாளில் ஆயத்தம் செய்யப்பட்டன. |
17 | அங்கிருந்த இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் அப்பொழுது பாஸ்காத் திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்: அன்றுமுதல் புளியாத அப்பத் திருவிழாவையும், ஏழு நாள்கள் கொண்டாடினர். |
18 | இறைவாக்கினர் சாமுவேல் காலம் தொட்டு இன்றுவரை இஸ்ரயேலில் இதுபோன்று பாஸ்காத் திருவிழா நடைபெற்றதில்லை: யோசியாவும், குருக்களும், லேவியரும், அங்கிருந்த யூதா, இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் எருசலேம் வாழ் மக்களும் பாஸ்கா விழாவைக் கொண்டாடியது போல் இஸ்ரயேல் அரசர்களில் எவரும் கொண்டாடியதில்லை. |
19 | யோசியா ஆட்சியேற்ற பதினெட்டாம் ஆண்டில் இப்பாஸ்கா விழா கொண்டாடப்பட்டது. |
20 | இவையாவும் முடிந்தபின், அதாவது, யோசியா திருக்கோவிலை ஒழுங்குபடுத்தியபின், எகிப்திய மன்னன் நெக்கோ யூப்பரத்தீசு ஆற்றின் பகுதியிலிருந்த கர்க்கமிசு என்ற இடத்திற்குப் படையெடுத்து வந்தான். யோசியாவும் அவனை எதிர்கொண்டு சென்றார். |
21 | ஆனால் எகிப்திய மன்னன் அவரிடம் தூதரை அனுப்பி,‘யூதாவின் அரசே! உமக்கும் எனக்கும் என்ன? இன்று நான் உமக்கெதிராகப் படையெடுத்துவரவில்லை. மாறான, வேறொருவனுடன் போரிடவே நான் செல்கிறேன். நான் இதனை விரைவாகச் செய்ய வேண்டுமென்று கடவுள் கூறியுள்ளார். என்னோடு இருக்கும் கடவுளை எதிர்ப்பதை நீர் நிறுத்துவீர்! இல்லையெனில், அவர் உம்மை அழித்துவிடுவார் ‘ என்றார். |
22 | ஆயினும், யோசியா தம் எண்ணத்தை மாற்றிக்கொள்ளாமல், மாறுவேடத்தில் அவனோடு போரிடச் சென்றார்: நெக்கோ மூலம் வந்த கடவுளின் வாய்மொழியைக் கேளாமல், மெகிதோ பள்ளத்தாக்கில் அவனோடு போரிடச் சென்றார். |
23 | அரசர் யோசியாவின் மேல் வில்வீரர் அம்பெய்ய, அவர் தம் அலுவலர்களைப் பார்த்து,‘என்னை உடனே அப்புறப்படுத்துங்கள், ஏனெனில் நான் பெரிதும் காயமடைந்துள்ளேன் ‘ என்றார். |
24 | அவருடைய அலுவலர்கள் அவரைத் தேரிலிருந்து இறக்கி, அவரது இரண்டாம் தேரில் ஏற்றி, எருசலேமுக்குக் கொண்டு வந்தனர். அவர் அங்கே இறக்க, தம் மூதாதையரின் கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டார். யோசியாவுக்காக யூதா, எருசலேம் முழுவதும் துக்கம் கொண்டாடியது. |
25 | யோசியாவுக்காக எரேமியாவும் ஓர் இரங்கற்பா இயற்றினார். அது எல்லாப் பாடகர், பாடகியராலும், அவருக்காகப் புலம்பும் பொழுது இன்றுவரை பாடப்படுகிறது. இது, இஸ்ரயேலில் நிலையான நியமமாகி, புலம்பல் பற்றிய நூலில் காணக்கிடக்கிறது. |
26 | யோசியா ஆட்சியின் மற்ற நிகழ்ச்சிகளும், ஆண்டவரின் சட்டத்திற்கேற்ப அவர் செய்த அவருடைய பக்திச் செயல்களும், |
27 | தொடக்க முதல் இறுதிவரை எல்லாமே இஸ்ரயேல், யூதா அரசர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன. |