1 | யோசியா அரசரானபோது அவருக்கு வயது எட்டு: அவர் எருசலேமில் முப்பத்தோர் ஆண்டுகள் ஆட்சி செய்தார். |
2 | அவர் ஆண்டவர் திருமுன் நேரியன செய்து, தம் மூதாதை தாவீதின் வழியிலேயே நின்று, நெறிமுறை வழுவாது ஒழுகினார். |
3 | அவரது ஆட்சியின் எட்டாம் ஆண்டில், அவர் இன்னும் இளைஞராக இருந்தபோது, அவர் மூதாதை தாவீதின் கடவுளை நாடிச்செல்லலானார்: தமது ஆட்சியின் பன்னிரண்டாம் ஆண்டில், தொழுகை மேடுகள், அசேராக் கம்பங்கள், செதுக்கப்பட்ட சிலைகள், வார்க்கப்ட்ட சிலைகள் ஆகியவற்றை அகற்றி, யூதாவையும் எருசலேமையும் தூய்மையாக்கத் தொடங்கினார். |
4 | அவர் தம் மேற்பார்வையில் பாகாலின் பலிபீடங்களை உடைத்தெறிந்தனர்: அதற்கு மேலிருந்த சிலைகளை அவர் உடைத்தார். மேலும், அசேராக் கம்பங்களையும், செதுப்பட்டனவும் வார்க்கப்பட்டனவுமாகிய சிலைகளையும் தூள்தூளாக்கி, அவற்றிற்குப் பலியிட்டவர்களின் கல்லறைகளிலேயே வீசியெறிந்தார். |
5 | அவர் அர்ச்சகர்களின் எலும்புகளை அவர்களின் பலிபீடங்களிலேயே சுட்டெரித்து, யூதாவையும் எருசலேமையும் தூய்மைப்படுத்தினார். |
6 | மேலும் மனாசே, எப்ராயிம், சிமியோன், நப்தலி வரையிலுள்ள எல்லா நகர்களிலும் அவ்வாறே செய்தார். |
7 | பலிபீடங்களையும் அசேராக் கம்பங்களையும் உடைத்தெறிந்தார்: செதுக்கப்பட்ட சிலைகளைத் தூள்தூளாக்கினார். இஸ்ரயேல் நாட்டிலிருந்த எல்லாத் தூபப் பீடங்களையும் நொறுக்கியபின், அவர் எருசலேமுக்குத் திரும்பினார். |
8 | இவ்வாறு நாட்டைத் தூய்மையாக்கிய அவர்தம் ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில் அவர்தம் கடவுளாம் ஆண்டவரின் இல்லத்தைச் செப்பனிட அட்லியா மகன் சாப்பான், நகரின் ஆளுநர் மாசேயா, பதிவாளர் யோவாகு ஆகியோரை அனுப்பினார். |
9 | மனாசே எப்ராயிம், எஞ்சியிருந்த இஸ்ரயேல் ஆகியோரிடமும் மற்றும் யூதா, பென்யமின், எருசலேம் வாழ் மக்கள் அனைவரிடமிருந்தும் வாயிற் காவலராகிய லேவியர் சேகரித்த பணத்தை அவர்கள் கோவிலுக்குக் கொண்டு வந்தனர்: அவற்றைத் தலைமைக் குரு இல்க்கியாவிடம் ஒப்படைத்தனர். |
10 | அவர்கள் அதை ஆண்டரின் இல்ல மேற்பார்வையாளரிடம் அளித்தனர். அவர்களோ அதை பணிசெய்வோரிடம் கோவிலைச் செப்பனிட்டுச் செம்மைப்படுத்துமாறு கொடுத்தனர். |
11 | அவர்களே தச்சருக்கும் கொத்தருக்கும் பணம் கொடுத்தனர்: யூதாவின் அரசர்கள் அழித்து விட்ட வீடுகளுக்காக வாங்கப்பட்ட செங்கற்கள், இணைப்பு மரங்கள் ஆகியவற்றுக்காகவும் பணம் கொடுத்தனர். |
12 | வேலையாள்கள் நேர்மையோடு வேலை செய்தனர்: இப்பணியை மேற்பார்வை செய்ய மெராரியின் புதல்வர்களான யாகத்து, ஒபதியா என்ற லேவியரும், கோகாத்தியரான செக்கரியாவும் மெசுல்லாமும் நியமிக்கப்பட்டிருந்தனர். இறைக்கருவிகளை மீட்டுவதில் திறமைமிக்க லேவியர் எல்லாரும், |
13 | கூலியாள்களுக்குப் பொறுப்பாளராகவும், தனித்தனிப் பணி செய்யவும் அனைவருக்கும் மேற்பார்வையாளராகவும் இருந்தனர்: லேவியர் சிலர் எழுத்தரும் அலுவலரும் வாயிற்காப்பாளருமாகவும் இருந்தனர். |
14 | ஆண்டவரின் இல்லத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தை வெளியே எடுத்தபோது, மோசே வழியாக அளிக்கப்பட்ட ஆண்டவரின் திருச்சட்டநூலை குரு இல்க்கியா கண்டு பிடித்தார். |
15 | அப்பொழுது இல்க்கியா எழுத்தராகிய சாப்பானைப் பார்த்து,‘இதோ, நான் ஆண்டவரின் இல்லத்தில் திருச்சட்ட நூலைக் கண்டெடுத்தேன் ‘ என்று கூறி அவர் அந்த நூலைச் சாப்பானிடம் ஒப்படைத்தார். |
16 | சாப்பான் அந்நூலை அரசரிடம் கொண்டுவந்து, அவரை நோக்கி,‘உம் அலுவலர்களுக்கு நீர் கட்டளையிட்டவை அனைத்தையும் அவர்கள் செய்கிறார்கள்: |
17 | ஆண்டவரின் கோவிலில் சேர்ந்த பணத்தை அவர்கள் எடுத்து அதிகாரிகள் கையிலும் பணியாளர்கள் கையிலும் ஒப்படைத்தனர் ‘ என்றார். |
18 | எழுத்தர் சாப்பான் மீண்டும் அரசரைப் பார்த்து,‘குரு இல்க்கியா என்னிடம் ஒரு நூலைக் கொடுத்தார் ‘ என்று கூறி, அதனை அரசருக்குப் படித்துக் காட்டினார். |
19 | அரசர் திருச்சட்ட நூலைப் படிக்கக் கேட்டபோது தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டார். |
20 | பின்னர், இல்க்கியா, சாப்பான் மகன் அகீக்காம், மீக்காவின் மகன் அப்தோன், எழுத்தர் சாப்பான், அரச அலுவலர் அசாயா ஆகியோரைப் பார்த்து அரசர், |
21 | ‘கண்டெடுக்கப்பட்ட இந்நூலில் எழுதியுள்ளவாறு, நீங்கள் சென்று எனக்காகவும் இஸ்ரயேல் யூதாவில் எஞ்சியுள்ளோருக்காகவும் ஆண்டவரை மன்றாடுங்கள்: ஏனெனில் இந்நூலில் எழுதியுள்ளவாறு நம் மூதாதையர் ஆண்டவரின் வாக்கிற்கிணங்க நடக்காததனால் நம்மேல் ஆண்டவர் கடும்சினம்கொண்டுள்ளார் ‘ என்று கூறினார். |
22 | இல்க்கியாவும், அரசரைச் சார்ந்த மற்றவர்களும், அசுராவின் பேரனும் தோக்காத்தின் மகனும் ஆடையக மேற்பார்வையாளனுமான சல்லூம் என்பவனின் மனைவி குல்தா என்ற இறைவாக்கினரிடம் சென்றனர்: எருசலேமின் இரண்டாம் தொகுதியில் குடியிருந்த அவரிடம் இதுபற்றிப் பேசினர். |
23 | அவர் அவர்களை நோக்கி,‘இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என்னிடம் உங்களை அனுப்பியவரிடம் நீங்கள் சொல்லுங்கள்: |
24 | ஆண்டவர் கூறுவது இதுவே: இந்த இடத்தின்மீதும், இதில் வாழ்வோர்மீதும் தீங்குகளை யூதாவின் அரசர் முன் படிக்கப்பட்ட நூலின் வார்த்தைகளில் கண்ட அனைத்துச் சாபங்களையும் வரச் செய்வேன். |
25 | ஏனெனில், அவர்கள் என்னைப் புறக்கணித்துவிட்டு, தங்கள் கைவினையான அனைத்துச் சிலைகளாலும் எனக்குச் சினமூட்டினார்: வேற்றுத் தெய்வங்களுக்குக் தூபம் காட்டினர். எனவே இவ்விடத்தின்மேல் நான் கொண்ட சினம் கனன்று எரியும்: அதைக் தணிக்க இயலாது. |
26 | ஆண்டவரின் திருவுளம் தெரிந்து வருமாறு உங்களை அனுப்பிய யூதாவின் அரசனிடம் நீங்கள் இவ்வாறு கூறுங்கள்: நீ கேட்ட வார்த்தைகளைப் பற்றி இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: |
27 | இந்த இடத்திற்கும் இதில் வாழ்வோருக்கும் எதிரான அவர்தம் வார்த்தைகளை நீ கேட்டு, மனம்நைந்து, கடவுளுக்குமுன் உன்னைத் தாழ்த்திக் கொண்டாய்: தாழ்ந்து நின்ற நீ உன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு என் திருமுன் அழுததனால், உன் வேண்டுதலுக்கு நான் செவிகொடுத்துள்ளேன். |
28 | ஆதலால், இவ்விடத்தின் மீதும் இதில் வாழ்வோர் மீதும் நான் வரச் செய்யவிருக்கும் அனைத்துத் தீமைகளையும் உன் கண்கள் காணாதபடி உன்னை உன் மூதாதையர் இருக்கும் இடத்தில் கொண்டு சேர்ப்பேன்: நீயும் மன அமைதியுடன் உன் கல்லறைக்குச் செவ்வாய் ‘ என்றாள். அவர்கள் திரும்பிச் சென்று அரசருக்கு இச்செய்தியைத் தெரிவித்தனர். |
29 | யூதா, எருசலேம் வாழ் பெரியோர்கள் எல்லாரையும் அரசர் ஒன்று திரட்டினார். |
30 | பின்னர், அரசர் ஆண்டவரின் இல்லத்திற்குச் சென்றார், அவருடன் யூதா, எருசலேம் மக்கள் யாவரும், அனைத்து குருக்களும் லேவியரும், பெரியோர்முதல் சிறியோர்வரை எல்லா மக்களும் சென்றனர். அரசரும், ஆண்டவரின் இல்லத்தில் கண்டெடுத்த உடன்படிக்கை நூல் முழுவதையும் அவர்கள் எல்லாரும் கேட்கும்படி வாசித்தார். |
31 | பின்பு, அரசர் தம் இடத்தில் நின்றுகொண்டு, ஆண்டவரின் கட்டளையையும் சான்றுகளையும் ஒழுங்குமுளைகளையும் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் கடைப்பிடிப்பதாகவும், அந்நூலில் எழுதப்பட்டிருந்த உடன்படிக்கையின் சொற்களை நிறைவேற்றுவதாகவும் ஆண்டவர் திருமுன் உடன்படிக்கை செய்துகொண்டார். |
32 | அவர் எருசலேமிலும் பென்யமினிலும் வாழ்ந்த மக்கள் அனைவரும் அவ்வாறே செய்யுமாறு பணித்தார்: எருசலேம் வாழ் மக்கள் யாவரும் தங்கள் மூதாதையரின் கடவுளாம் இந்தக் கடவுளின் உடன்படிக்கையின்படியே வாழ்ந்தனர். |
33 | பின்னர், யோசியா இஸ்ரயேலரின் எல்லா அருவருப்புகளையும் அவர்களுக்குரிய நாடு முழுவதிலுமிருந்தும் அகற்றினார்: இஸ்ரயேலின் இருந்தவர் அனைவரும் அவர்களின் கடவுளாகிய ஆண்டவரை மட்டுமே வழிபடச் செய்தார். அவரது வாழ்நாள் முழுவதும் அவர்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவரைப் பின்பற்றி நடக்கத் தவறவேயில்லை. |