1 | பின்னர், நாட்டுமக்கள் யோசியாவின் மகனான யோவகாசை அவருக்குப் பதிலாக எருசலேமில் அரசனாக்கினர். |
2 | யோவகாசு அரசனானபோது அவனுக்கு வயது இருபத்து மூன்று: அவன் எருசலேமில் மூன்றே மாதங்கள் ஆட்சி செய்தான். |
3 | எகிப்திய மன்னன் அவனை எருசலேமில் பதவியிலிருந்து நீக்கியபின், நாலாயிரம் கிலோகிராம் வெள்ளியும், நாற்பது கிலோகிராம் பொன்னும் கப்பமாகச் செலுத்துமாறு மக்களுக்கு ஆணையிட்டான். |
4 | எகிப்திய மன்னன் யோவகாசின் சகோதரன் எலியாக்கிமிற்கு, யோயாக்கிம் என்று பெயர்மாற்றம் செய்து, அவனை யூதாவுக்கும் எருசலேமுக்கும் அரசனாக்கினான்: பின்பு நெக்கோ, யோவகாசை எகிப்துக்கு இட்டுச் சென்றான். |
5 | யோயாக்கிம் அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் எருசலேமில் பதினோர் ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவன் கடவுளாம் ஆண்டவரின் பார்வையில் தீயனவே செய்தான். |
6 | பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் அவனுக்கு எதிராகப் படையெடுத்து வந்து, அவனை வெண்கலச் சங்கிலிகளால் கட்டி, பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் சென்றான். |
7 | அத்துடன், ஆண்டவரின் இல்லத்துப் பாத்திரங்கள் சிலவற்றை நெபுகத்னேசர் பாபிலோனுக்கு எடுத்துச் சென்று, அங்கேயுள்ள தனது அரண்மனையில் வைத்துக் கொண்டான். |
8 | யோயாக்கீமின் பிற செயல்களும், அவன் செய்த அருவருப்பானவையும், அவனுக்கு எதிராய்க் காணப்பட்டவை யாவும் இஸ்ரயேல், யூதா அரசர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன. அவனுக்குப்பின் அவன் மகன் யோயாக்கின் அரசனானான். |
9 | யோயாக்கின் அரசனானபோது அவனுக்கு வயது எட்டு: எருசலேமில் அவன் மூன்று மாதம் பத்து நாள்களே ஆட்சி செய்து, ஆண்டவரின் பார்வையில் தீயனவே செய்தான். |
10 | ஆதலால், அவ்வாண்டின் இறுதியில் மன்னன் நெபுகத்னேசர் தனதுபடையை அனுப்பி, கைதியான அவனையும் அவனுடன் ஆண்டவரின் இல்லத்தில் இருந்த விலையுயர்ந்த பாத்திரங்களையும் கொண்டுவரச் செய்தான்: பின்பு அவன் சிற்றப்பன் செதேக்கியாவை அவனுக்குப்பதில் யூதா, எருசலேமுக்கு அரசனாக்கினான். |
11 | செதேக்கியா அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தொன்று. அவன் எருசலேமில் பதினோர் ஆண்டுகள் ஆட்சி செய்தான். |
12 | அவன் கடவுளாம் ஆண்டவரின் பார்வையில் தீயனவே செய்தான்: ஆண்டவர் பெயரால் பேசிய இறைவாக்கினர் எரேமியா முன் தன்னையே தாழ்த்திக் கொள்ளவில்லை. |
13 | கட்டுப்பட்டிருப்பதாகக் கடவுளின் பெயரால் தன்னை ஆணையிடச் செய்த மக்கள் நெபுகத்னேசருக்கு எதிராக இவன் கலகம் செய்து. இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவரைப் பின்பற்றாமல் இறுமாப்புற்று, தனது இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். |
14 | அதுபோல், குருக்களின் தலைவர்களும், மக்களும் வேற்றினத்தாரின் அனைத்து அருவருப்புகளையும் தொடர்ந்து செய்து, உண்மையற்றவர்களாய், ஆண்டவர் தமக்காக எருசலேமில் தூய்மையாக்கியிருந்த திருக்கோவிலை மேலும் தீட்டுப்படுத்தினர். |
15 | அவர்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவர் தம் மக்களின் மீதும், தம் உறைவிடத்தின் மீதும் இரக்கம் கொண்டு, தம் தூதர்களை மீண்டும் மீண்டும் அவர்களிடம் அனுப்பினார். |
16 | ஆனால் அவர்கள் கடவுளின் தூதர்களை ஏளனம் செய்து, அவர்தம் வார்த்தைகளைப் புறக்கணித்து, அவர்தம் இறைவாக்கினர்களை இழித்துரைத்தனர். ஆதலால், அவர்கள் தப்பமுடியாத அளவுக்கு ஆண்டவரது சினம் அவர்கள்மேல் கனன்றெழுந்தது. |
17 | ஆதலால், அவர் அவர்களுக்கு எதிராக கல்தேயரின் மன்னனைப் படையெடுத்து வரச் செய்தார். அவன் அவர்களின் திருஉறைவிடமாகிய ஆண்டவரின் இல்லத்தில் அவர்களின் இளம் வீரர்களை வாளால் வெட்டி வீழ்த்தினான்: இளைஞர் கன்னியர் என்றோ, முதியோர் இளைஞர் என்றோ, எவர்மேலும் இரக்கம் காட்டாமல், எல்லாரையும் அவன் கையில் ஆண்டவர் ஒப்புவித்தார். |
18 | கடவுளின் இல்லத்து எல்லாச் சிறிய, பெரிய பாத்திரங்களையும், அதன் கருவூலங்களையும் அரசனிடமும் அவன் அதிகாரிகளிடமும் இருந்த செல்வங்கள் அனைத்தையும் பாபிலோனுக்குக் கொண்டு சென்றான். |
19 | கடவுளின் இல்லத்தை அவர்கள் எரித்து, எருசலேமின் மதில்களைத் தகர்த்தனர்: அங்கிருந்த அனைத்து அரண்மனைகளையும் தீக்கிரையாக்கி, விலையுயர்ந்த பொருள்கள் அனைத்தையும் அழித்தனர். |
20 | மேலும் அவன் வாளுக்குத் தப்பியவர்களைப் பாபிலோனுக்கு நாடு கடத்தினான்: பாரசீக அரசு எழும்பும்வரை அங்கே, அவர்கள் அவனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் அடிமைகளாக இருந்தனர். |
21 | ‘நாடு ஓய்வு நாள்களைக் கடைப்பிடிக்காததால், எழுபது ஆண்டுகள் பாழாய்க் கிடக்கும் ‘ என்று எரேமியா உரைத்த ஆண்டவரின் வாய்மொழிகள் இவ்வாறு நிறைவேறின. |
22 | பாரசீக மன்னன் சைரசு ஆட்சியின்முதல் ஆண்டில், எரேமியா உரைத்த ஆண்டவரின் வாய்மொழிகள் நிறைவேறும் வண்ணம், ஆண்டவர் அவனது மனத்தைத் தூண்டி எழுப்பினார். எனவே அவன் தனது நாடு முழுவதற்கும் மடல் வரைந்து அறிவித்தது யாதெனில்: |
23 | ‘பாரசீக மன்னராகிய சைரசு என்னும் யாம் கூறுவது இதுவே: விண்ணகக் கடவுளாம் ஆண்டவர் மண்ணக அரசுகள் எல்லாவற்றையும் எனக்கு அளித்துள்ளார். மேலும் யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்குத் திருக்கோவில் எழுப்புமாறு எனக்குப் பணித்துள்ளார். எனவே, அவருடைய மக்களாக இருப்பவர் அங்கு செல்லட்டும்! கடவுளாம் ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!” |