வேதாகமத்தை வாசி

2நாளாகமம் 16

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆசா ஆட்சியேற்ற முப்பத்தாறாம் ஆண்டில் இஸ்ரயேலின் அரசன் பாசா யூதா நாட்டை எதிர்த்து வந்தான். யூதா அரசன் ஆசாவிடம் போவதையும் வருவதையும் தடைசெய்யுமாறு பாசா இராமாவைச் கட்டி எழுப்பலானான்.
2அதனால் ஆண்டவரின் இல்லம், அரச அரண்மனை ஆகியவற்றின் கருவூலங்களிலிருந்து பொன்னையும் வெள்ளியையும் எடுத்துத் தமஸ்குவில் வாழ்ந்த சிரியா மன்னன் பெனதாதுக்கு அனுப்பி வைத்தான்.
3‘என் தந்தையும் உம் தந்தையும் செய்ததுபோல், நானும் நீரும் உடன்படிக்கை செய்துகொள்வோம். இதோ! வெள்ளியும் பொன்னும் அனுப்பி வைக்கிறேன்: இஸ்ரயேலின் அரசனான பாசாவோடு உமக்கிருக்கும் உடன்படிக்கையை முறித்துவிடும். அப்போது அவன் என்னைவிட்டு அகன்று போவான் ‘ என்று சொல்லி அனுப்பினான்.
4அரசன் ஆசாவுக்கு பெனதாது இணங்கி, தன் படைத்தலைவர்களை இஸ்ரயேலின் நகர்களுக்கு எதிராக அனுப்பினான். அவர்கள் ஈயோன், தாண், ஆபேல்-மயீம் ஆகியவற்றையும் நப்தலிநகர்களின் அனைத்துப் பண்டசாலைகளையும் கைப்பற்றினர்.
5இதைக் கேள்வியுற்ற பாசா இராமாவைக் கட்டுவதைக் கைவிட்டுவிட்டான்.
6அரசன் ஆசா, யூதா மக்கள் யாவரையும் ஒன்றுதிரட்டி இராமாவைக் கட்டுவதற்காகப் பாசா தயாரித்து வைத்திருந்த கற்களையும் மரங்களையும் எடுத்துவந்து கேபாவையும் மிஸ்பாவையும் கட்டி எழுப்பினான்.
7அக்காலத்தில் திருக்காட்சியாளர் அனானி, யூதா அரசனான ஆசாவிடம் வந்து அவனிடம்,‘உன் கடவுளாகிய ஆண்டவரை நீ நம்பாமல் சிரியா மன்னனை நம்பியதால், அவனது படை உனது கையினின்று நழுவிப்போயிற்று.
8எத்தியோப்பிருக்கும் லிபியருக்கும் மிகுதியான தேர்களும் குதிரை வீரர்களும் கொண்ட பெரும் படை இருக்கவில்லையா? அப்படியிருந்தும், நீ ஆண்டவர்மேல் நம்பிக்கை கொண்டிருந்ததால், அவர் அவர்களை உனது கையில் ஒப்படைத்தார்.
9உலகம் அனைத்தையும் ஆண்டவரின் கண்கள் சுழன்று பார்க்கின்றன. அவர் தம்மை முழு மனத்துடன் நம்பும் அனைவர்க்கும் ஆற்றல் அளிக்கிறார். நீயோ இதன் மட்டில் மதியீனமாய் நடந்துகொண்டாய்: எனவே இன்றுமுதல் நீ போர்களைச் சந்திக்க வேண்டும் ‘ என்றார்.
10இதைக் கேட்ட ஆசா, திருக்காட்சியாளர்மேல் கடும் சினமுற்றான். அவன் எவ்வளவு எரிச்சலுற்றான் எனில், அவரைச் சிறையிலிட்டதோடு, மக்களுள் சிலரையும் கொடுமைப்படுத்தினான்.
11ஆசாவின் செயல்கள், தொடக்க முதல் இறுதிவரை, யூதா இஸ்ரயேல் அரசர்களின் ஆட்சிக் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன.
12தன் ஆட்சியின் முப்பத்தொன்பதாம் ஆண்டில் ஆசாவுக்குப் பாதங்களில் ஒரு கொடிய நோய் ஏற்பட்டது. ஆனாலும், அவன் ஆண்டவரை நாடாது, மருத்துவர்களையே நம்பினான்.
13அவன் தன் ஆட்சியின் நாற்பத்தோராம் ஆண்டில் இறந்து, தன் மூதாதையரோடு துயில் கொண்டான்.
14திறன்மிக்கோர் தயாரித்த நறுமணப் பொருள்கள், மூலிகைகள், தைலங்கள், செறிந்த பாடையின்மேல் அவனது சடலத்தைக் கிடத்தி, தாவீதின் நகரில் ஆசா தனக்கென வெட்டிய கல்லறையில் அடக்கம் செய்தனர். மேலும் அவனுக்கு அஞ்சலியாக மாபெரும் நெருப்பு வளர்த்தனர்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.