1 | ஆசாவின் மகன் யோசபாத்து அவனுக்குப்பின் ஆட்சியேற்று, இஸ்ரயேலுக்கு எதிராகத் தம்மை வலுப்படுத்திக் கொண்டார். |
2 | யூதாவின் அனைத்து அரண்சூழ் நகர்களில் போர்ப்படைகளையும், பிற பகுதிகளிலும் தம் தந்தை ஆசா கைப்பற்றியிருந்த எப்ராயிம் நகர்களிலும் காவற்படைகளையும் நிறத்தி வைத்தார். |
3 | ஆண்டவர் யோசபாத்தோடு இருந்தார். ஏனெனில், அவர் பாகால்களை நம்பாமல் தம் மூதாதை தாவீதின் வழியில் நடந்தார். |
4 | மேலும், அவர் இஸ்ரயேலின் செயல்களைப் பின்பற்றாமல், தம் மூதாதையின் கடவுளையே நாடி, அவர் கட்டளைகளின் படியே நடந்து வந்தார். |
5 | ஆதலால் ஆண்டவர் அவரது ஆட்சியை நிலைநிறுத்தினார். யூதா மக்கள் அனைவரும் யோசபாத்துக்குக் காணிக்கைகள் கொண்டு வந்தனர்: அவர் செல்வமும் புகழும் பெருகியது. |
6 | மேலும் ஆண்டவரது வழியில் அவர் உள்ளம் உறுதியடைந்து, யூதாவிலிருந்த தொழுகை மேடுகளையும் அசேராக் கம்பங்களையும் அகற்றினார். |
7 | அவர் தமது ஆட்சியின் மூன்றாம் ஆண்டில், யூதா நகர்களில் போதிக்கும் பொருட்டு தலைவர்களான பென்கயில், ஒபதியா, செக்கரியா, நெத்தினியேல், மீக்காயா, ஆகியோரையும், |
8 | லேவியரான செமாயா, நெத்தனியா, செபதியா, அசாவேல், செமிராமோத், யோனத்தான், அதோனியா, தோபியா, தோபு-அதோனியா ஆகியோரையும் குருக்கள் எலிசாமா, யோராம் ஆகியோரையும் அனுப்பி வைத்தார். |
9 | இவர்கள், ஆண்டவரின் திருச்சட்ட நூலுடன் சென்று யூதாவில் போதித்தனர்: யூதாவின் எல்லா நகர்களிலும் சுற்றி அலைந்து மக்களுக்குப் போதித்தனர். |
10 | யூதாவைச் சூழ்ந்த நாடுகள் எல்லாம், ஆண்டவர்மீது அச்சம் கொண்டதால், அவை யோசபாத்தை எதிர்த்துப் போரிடவில்லை. |
11 | பெலிஸ்தியர் யோசபாத்துக்கு அன்பளிப்பும் கப்பமுமாக வெள்ளிப் பணமும் கொடுத்தனர். அரேபியரும் அவருக்கு ஏழாயிரத்து எழுநூறு ஆட்டுக்கிடாய்களையும் ஏழாயிரத்து எழுநூறு வெள்ளாட்டுக் கிடாய்களையும் அளித்தனர். |
12 | யோசபாத்து மென்மேலும் வலிமையடைந்து வந்தார்: யூதாவில் கோட்டைகளையும் சேமிப்பு நர்களையும் கட்டினார். |
13 | யூதாவின் நகர்களில் சேமிப்பு மிகுதியாய் இருந்தது. வலிமைமிகு போர்வீரர் எருசலேமில் இருந்தனர். |
14 | தங்கள் மூதாதையரின் குடும்பத்தின்படி அவர்களது எண்ணிக்கை: யூதாவில் இருந்த ஆயிரத்தவர் தலைவர்கள், வலிமைமிகு போர்வீரர் மூன்று இலட்சம் பேருக்குத் தலைவன் அத்னா: |
15 | அவனை அடுத்து, வலிமைமிகு போர்வீரர் இரண்டு இலட்சத்து எண்பதினாயிரம் பேருக்குத் தலைவன் யோகனான். |
16 | அவனை அடுத்து, ஆண்டவருக்குத் தன்னையே அர்ப்பணித்திருந்தவனும் சிக்ரியின் மகனுமான அமசியா: இவனுக்குக்கீழ் வலிமைமிகு போர்வீரர் இரண்டு இலட்சம் பேர் இருந்தனர். |
17 | பென்யமினிலிருந்து வலிமைமிகு போர் வீரர் எலியாதா. இவனுக்குக்கீழ் வில்லும் பரிசையும் தாங்கிய வீரர் இரண்டு இலட்சம் பேர் இருந்தனர். |
18 | அவனை அடுத்து, யோசபாத்து, இவனுக்குக்கீழ் போர்க்கோலம் பூண்ட இலட்சத்து எண்பதினாயிரம் பேர் இருந்தனர். |
19 | இவர்கள் அரசருக்குப் பாதுகாப்புப் பணி புரிந்து வந்தனர். மேலும் யூதாவின் அரண்சூழ் நகர்களில் அரசரால் நியமிக்கப்பட்ட காவலர்கள் இருந்தனர். |