1 | கடவுளின் ஆவி ஓதேதின் மகன் அசரியாவின்மேல் இறங்கியது. |
2 | உடனே அவர் ஆசாவிடம் சென்று அவனை நோக்கிக் கூறியது:‘ஆசாவே! யூதா, பென்யமின் எல்லா மக்களே! கேளுங்கள். நீங்கள் ஆண்டவரை நாடினால், கண்டடைவீர்கள்: நீங்கள் அவரைப் புறக்கணித்தால், அவரால் நீங்கள் புறக்கணிக்கப்படுவீர்கள். |
3 | இஸ்ரயேல் நெடுங்காலமாக உண்மைக் கடவுளைப் போதிக்கும் குருக்களையும் திருச்சட்டத்தையும் கொண்டிருக்கவில்லை. |
4 | எனினும், இஸ்ரயேலர் தங்கள் துன்பத்தில் தங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பினர்: அவ்வாறு அவர்கள் தேடியபொழுது அவரைக் கண்டு கொண்டனர். |
5 | அந்நாள்களில் ஒருவரும் அமைதியாகப் போகவோ வரவோ இயலவில்லை: ஏனெனில் நாடுகளில் குடியிருந்தோர் அனைவரிடையிலும் ஒரே குழப்பமாய் இருந்தது. |
6 | நாடு நாட்டையும், நகர் நகரையும் எதிர்த்து, ஒன்றை ஒன்று நசுக்கின.ஏனெனில், கடவுள் அவர்களைப் பற்பல இடுக்கண்களால் துன்புறுத்தினர். |
7 | நீங்களோ மனத்திடன் கொள்ளுங்கள்: தளர்ந்துபோக வேண்டாம், ஏனெனில், உங்கள் செயல்களுக்கேற்ற கைம்மாறு கிடைக்கும். ‘ |
8 | ஓதேத்தின் மகன் இறைவாக்கினர் அசரியா உரைத்த இந்த இறைவாக்கைக் கேட்டபோது, ஆசா வீறுகொண்டெழுந்தான்: யூதா, பென்யமின் நாடுகளிலும், எப்ராயிம் மலைநாட்டில் தான் கைப்பற்றிருந்த நகர்களிலும் காணப்பட்ட அருவருப்புகளை அகற்றினான்: ஆண்டவரது மண்டபத்தின்முன் இருந்த அவரது பலிபீடத்தைப் புதுப்பித்தான். |
9 | பிறகு, யூதா, பென்யமின் மக்களையும், எப்ராயிம், மனாசே, சிமியோனிலிருந்து வந்து தங்களோடிருந்த அன்னியர் அனைவரையும் ஒன்று கூட்டினான். ஆசாவின் கடவுளாகிய ஆண்டவர் அவனோடிருந்ததைக் கண்டு, அவர்கள் இஸ்ரயேலைவிட்டு அவனிடம் தஞ்சம் புகுந்திருந்தனர். |
10 | ஆசா ஆட்சியேற்ற பதினைந்தாம் ஆண்டின் மூன்றாம் மாதத்தில், அவர்கள் எருசலேமில் கூடினர். |
11 | தாங்கள் கொள்ளையிட்டுக் கொண்டு வந்த எழுநூறு மாடுகளையும், ஏழாயிரம் ஆடுகளையும் அன்று ஆண்டவருக்குப் பலியிட்டனர். |
12 | அவர்கள் தங்கள் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும் தங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரை நாடுவோம் என்றும், |
13 | இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரை யார் யார் நாடாமல் இருக்கிறார்களோ அவர்கள், சிறியோர் பெரியோர், ஆண் பெண் யாராயினும், சாவுக்கு உட்பட வேண்டும் என்றும் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார்கள். |
14 | எக்காளங்களும் கொம்புகளும் முழங்க, மிகுந்த ஆரவார ஆர்ப்பரிப்புடன் ஆண்டவரிடம் ஆணையிட்டார்கள். |
15 | இதன் பொருட்டு யூதா மக்கள் அனைவரும் மகிழ்ந்தனர்: ஏனெனில், அவர்கள் தங்கள் முழு இதயத்தோடு ஆணையிட்டனர், ஆர்வத்துடன் அவரை நாடிக் கண்டடைந்தனர்: ஆண்டவரும் அவர்களுக்கு எத்திக்கிலும் அமைதி அளித்தார். |
16 | அருவருப்பான அசேராக், கம்பம் ஒன்றை ஆசாவின் தாய் மாக்கா செய்திருந்தாள். அதனால், ஆசா அவளை 'அரச அன்னை' நிலையிலிருந்து நீக்கி விட்டான். மேலும் அவன் அக்கம்பத்தை உடைத்துத் தூள் தூளாக்கிக் கிதரோன் பள்ளத்தாக்கில் சுட்டெரித்தான். |
17 | ஆனால், தொழுகை மேடுகள் இஸ்ரயேலினின்று அகற்றப்படவில்லை: இருப்பினும் ஆசாவின் இதயம் அவன் வாழ்நாள் முழுவதும் நிறைவுள்ளதாய் இருந்தது. |
18 | தன் தந்தையும் தானும் நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் மற்றும் ஏனைய பொருள்களையும் கடவுளின் இல்லத்தில் அவன் ஒப்படைத்தான். |
19 | ஆசா ஆட்சியின் முப்பத்தைந்தாம் ஆண்டுவரை மீண்டும் போர் எழவில்லை. |