1 | சிம்சோன் காசாவுக்குச் சென்றார்.அவர் அங்கே ஒரு விலைமாதைக் கண்டு, அவளிடம் சென்றார். |
2 | “சிம்சோன் இங்கு வந்துள்ளார்” என்று காசா மக்களுக்குக் கூறப்பட்டது.அவர்கள் அவ்விடத்தைச் சூழ்ந்து கொண்டு இரவு முழுவதும் அவருக்காக நகர வாயிலில் காத்துக்கிடந்தனர். “பொழுது புலரும்வரை காத்திருப்போம்: பின்னர் அவனைக்கொல்வோம்” என்று கூறி இரவு முழுவதும் அமைதியாக இருந்தனர். |
3 | சிம்சோன் நடுச்சாமம் வரை படுத்துக்கிடந்தார்.நள்ளிரவில் அவர் எழுந்து, நகர் வாயிலின் கதவுகளையும் இரண்டு கதவு நிலைகளையும் பிடித்து, அவைகளைக் குறுக்குச் சட்டங்களுடன் பிடுங்கினார்.அவற்றைத் தம் தோள்களின்மீது வைத்துக் கொண்டு எபிரோனுக்கு எதிரில் இருந்த மலைக்குத் தூக்கிச் சென்றார். |
4 | அதன்பின் சோரேக்குப் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பெண்ணைக் காதலித்தார்.அவள் பெயர் தெலீலா. |
5 | பெலிஸ்தியச் சிற்றரசர் அவளிடம், சென்று, “நீ அவனை மயக்கி, எதில் அவனுடைய பெரும் வலிமை உள்ளது: எப்படி நாங்கள் அவனை வென்று கட்டி வதைத்து அடக்கமுடியும் என்று கண்டுபிடி.நாங்கள் ஒவ்வொருவரும் உனக்கு ஆயிரத்து நூறு வெள்ளிக் காசு தருவோம்” என்றனர். |
6 | தெலீலா சிம்சோனிடம், “எதில் உமது பெரும் வலிமை உள்ளது என்றும், எப்படி உம்மைக் கட்டி அடக்கமுடியும் என்றும் என்னிடம் சொல்லும்” என்றாள். |
7 | சிம்சோன் அவளிடம், “ஏழு புதிய, உலராத நரம்புக் கயிறுகளால் என்னை அவர்கள் கட்டினால் நான் வலிமையிழந்து மற்ற மனிதரைப் போல் ஆகிவிடுவேன்” என்றார். |
8 | பெலிஸ்தியச் சிற்றரசர் அவளிடம் ஏழு புதிய, உலராத நரம்புக் கயிறுகளைக் கொண்டு வந்தனர்.அதைக் கொண்டு அவள் அவரைக் கட்டினாள். |
9 | ஆள்கள் அறையில் ஒளிந்துகொண்டிருக்க, அவள் அவரிடம், “சிம்சோன்! பெலிஸ்தியர் உம்மீது பாய்கின்றனர்” என்று கத்தினாள்.நெருப்புப்பட்டதும் கணல்கயிறு அறுவது போன்று அவர் நரம்புக் கயிறுகளை அறுத்தெறிந்தார்.அவரது ஆற்றலின் இரகசியம் புலப்படவில்லை. |
10 | தெலீலா சிம்சோனிடம், “இதோ! நீர் என்னை அற்பமாக நினைத்து என்னிடம் பொய்கள் சொல்லிவீட்டீர்.எதனால் உம்மைக் கட்டவேண்டும் என்று இப்பொழுது தயவு செய்து எனக்குச் சொல்லும்” என்றாள். |
11 | அவர் அவர்களிடம், “இதுவரை உபயோகிக்கப்படாத புதிய கயிறுகளால் என்னை அவர்கள் கட்டினால் நான் வலிமையிலந்து மற்ற மனிதர்ரைப் போல் ஆகிவிடுவேன்” என்றார். |
12 | தெலீலா புதிய கயிறுகளை எடுத்து அவற்றால் அவரைக் கட்டிய பின்,” சிம்சோன்! பெலிஸ்தியர் உம்மீது பாய்கின்றனர்” என்று கத்தினாள். ஆள்கள் அறையில் ஒளிந்துகொண்டிருந்தனர். நுல்கயிற்றைப்போல் அவர் தம் கைகளிலிருந்து அவற்றை அறுத்தெறிந்தார். |
13 | தெலீலா சிம்சோனிடம், “இதோ நீர் என்னை அற்பமாக நினைத்து , என்னிடம் பொய்கள் சொல்லிவிட்டீர். எதனால் உம்மைக் கட்டவேண்டும் என்று எனக்குச்சொல்லும்” என்றாள்.அவர், “என்னுடைய ஏழு மயிர்க் கற்றைகளையும் பாவுநூலால் பின்னினால் போதும்” என்றார். |
14 | ஆகவே, அவர் தூங்கும்பொழுது தெலீலா அப்படியே செய்து, முளை அடித்து மாட்டி, “சிம்சோன்! பெலிஸ்தியர் உம்மீது பாய்கின்றனர்” என்று கத்தினாள்.அவர் தம் தூக்கத்திலிருந்து எழுந்து, முளையோடு பாவுநூலைப் பிடுங்கி எறிந்தார். |
15 | அவள் அவரிடம்,”மனம் திறந்து பேசாமல் நீர் எம்மீது அன்பு செலுத்துவதாய் எப்படிக் கூறலாம்? மும்முறை நீர் என்னை அற்பமாய் நடத்திவிட்டீர்.உமது பேராற்றல் எதில் உள்ளது என்று நீர் எனக்கு இன்னும் சொல்லவில்லை” என்றாள். |
16 | அவள் தன் வார்த்தைகளால் ஒவ்வொரு நாளும் அவரை நச்சரித்துத் தொந்தரவு செய்தாள்.அவர் உயிர் போகுமளவிற்கு வருத்தமுற்றார். |
17 | எனவே எதையும் மறைக்காமல் அவர் அவளிடம் கூறியது:”சவரக் கத்தி என் தலைமீது பட்டதேயில்லை.ஏனெனில் பிறப்பிலிருந்தே நான் கடவுளின் நாசீராக இருக்கின்றேன்.என் தலை மழிக்கப்பட்டால் எனது ஆற்றல் என்னிடமிருந்து அகன்று விடும்.நான் வலிமையிழந்து மற்ற மனிதரைப்போல் ஆகிவிடுவேன்” என்றார். |
18 | அவர் தன்னிடம் மனம் திறந்து எல்லாவற்றையும் கூறிவிட்டார் என்பதை தெலீலா உணர்ந்தாள்.எனவே அவள் பெலிஸ்தியச் சிற்றரசருக்கு,”உடனே வாருங்கள்: அவர் என்னிடம் மனம் திறந்து அனைத்தையும் கூறிவிட்டார் என்ற ஆளனுப்பினாள்.பெலிஸ்தியச் சிற்றரசர் வெள்ளிக்காசுகளைத் தம் கையில் எடுத்துக்கொண்டு அவளிடம் சென்றனர். |
19 | அவள் அவரைத் தன் மடியில் தூங்க வைத்தாள்.ஓர் ஆளைக் கூப்பிட, அவன் அவர் தலையின் ஏழு மயிர்க்கற்றைகளையும் மழித்தான்.அவரது ஆற்றல் அவரிடமிருந்து அகன்றது.எனவே அவள் அவரைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள். |
20 | அவள்,”சிம்சோன்! பெலிஸ்தியர் உம்மீது பாய்கின்றனர்!” என்று கத்தினாள்.அவர் தம் தூக்கத்திலிருந்து விழித்து”முன்பு போல் இப்பொழுதும் என்னை விடுவித்துக்கொண்டு வெளியே செல்வேன்” என்று சொன்னார்.ஏனெனில் ஆண்டவர் அவரிடமிருந்து அகன்றுவிட்டார்என்பதை அவர் உணரவில்லை. |
21 | பெலிஸ்தியர் அவரைப் பிடித்து அவர் கண்களைத் தோண்டி எடுத்து அவரைக் காசாவுக்குக் கொண்டு சென்றார்கள்.அவரை வெண்கலச் சங்கிலிகளால் கட்டினர்.சிறையில், அரைக்கும் வேலைக்கு அவரை உட்படுத்திர். |
22 | மழிக்கப்பட்ட அவரது தலைமுடி வளரத் தொடங்கியது. |
23 | பெலிஸ்தியச் சிற்றரசர்,”நம் கடவுள் நம் எதிரி சிம்சோனை நம் கையில் ஒப்புவித்தார்” என்று சொல்லித் தம் தெய்வமான தாகோனுக்கு மாபெரும் பலி செலுத்தி விழா எடுக்க ஒன்று கூடினர். |
24 | மக்கள் அவரைப் பார்த்ததும் தங்கள் தெய்வத்தைப் புகழ்ந்தனர். “நம் கடவுள் நம் எதிரி சிம்சோனை நம் கையில் ஒப்புவித்தார்.அவன் நம் விளைநிலங்களை அழித்தவன்: நம்மில் பலரைக் கொன்றவன்: என்றனர். |
25 | அவர்கள் அகமகிழ்ந்திருக்க,”சிம்சோனைக் கூப்பிடுங்கள்.அவன் நமக்கு வேடிக்கை காட்டட்டும்” என்றனர்.சிறையிலிருந்து சிம்சோனைக் கொண்டுவர, அவர் அவர்கள் முன்னிலையில் வேடிக்கை காட்டினார்.அவர்கள் அவரைத் தூண்களுக்கு இடையே நிற்கும்படி செய்தனர். |
26 | சிம்சோன் கையால் தம்மைப் பிடித்திருந்த இளைஞனிடம்”இவ்வீட்டைத் தாங்கி நிற்கும் தூண்களை நான் தொடுமாறு அங்கு என்னை இட்டுச்செல்: நான் அவற்றின்மீது சாய்ந்து நிற்பேன்” என்றார். |
27 | ஆண்களாலும் பெண்களாலும் வீடு நிரம்பியிருந்தது.பெலிஸ்தியச் சிற்றரசர் அனைவரும் அங்கே வந்திருந்தனர்.ஏறக்குறைய மூவாயிரம் ஆண்களும் பெண்களும் மேல்தளத்திலிருந்து சிம்சோன் காட்டிய வேடிக்கையைப் பார்த்துக்கொண்டிருந்தனர். |
28 | சிம்சோன் ஆண்டவரை நோக்கி,”என் தலைவராகிய ஆண்டவரே! இந்த முறை மட்டும் என்னை நினைவுகூரும்.எனக்கு ஆற்றல் அளியும்.என் கடவுளே! என் இரு கண்களுக்கு ஈடாக பெலிஸ்தியர் மீது ஒரே தாக்குதலால் வஞ்சம் தீர்க்கச் செய்யும்” என்று மன்றாடினார். |
29 | சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நின்ற இரண்டு நடுத்தூண்களில் ஒன்றின்மீது வலக்கையும் மற்றொன்றின்மீது இடக்கையும் வைத்துச் சாய்ந்தார். |
30 | சிம்சோன்,”என் உயிர் பெலிஸ்தியருடன் மடியட்டும்” என்று சொல்லிக்கொண்டு முழு வலிமையுடன் சாய்ந்தார்.வீடு சிற்றரசர் மீதும், அதனுள் இருந்த அனைத்து மக்கள் மீதும் சரிந்து விழுந்தது.இவ்வாறு, அவர் உயிரோடு இருந்தபோது கொன்றதைவிட, மிகுதியான பேரை அவர் சாகும்போது கொன்றார். |
31 | அவருடைய சகோதரர்களும் அவர் தந்தை வீட்டார் அனைவரும் வந்து அவரைத் தூக்கிக் கொண்டு சென்றனர்.காசாவுக்கும் எசுத்தாவோலுக்கும் இடையில் அவருடைய தந்தை மனோவாகின் கல்லறையில் அவரை அடக்கம் செய்தனர்.அவர் இருபது ஆண்டுகள் இஸ்ரயேலின் நீதித் தலைவராக விளங்கினார். |