1 | எப்ராயிம் மலைநாட்டைச் சார்ந்த ஒரு மனிதர் இருந்தார்.அவர் பெயர் மீக்கா. |
2 | அவர் தம் தாயிடம், “உம்மிடமிருந்து ஆயிரத்து நூறு வெள்ளிக் காசுகள் திருடப்பட்டதைப் பற்றி என் காதுபடச் சபித்துக் கூறினீரா? இதோ! அந்த வெள்ளிக்காசுகள் என்னிடமே உள்ளன.அவற்றை எடுத்தவன் நான்தான்” என்றார்.அப்பொழுது அவர் தாய், “என் மகனே, ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக!” என்றார். |
3 | அவர் ஆயிரத்து நூறு வெள்ளிக்காசுகளைத் தம் தாயிடம் திருப்பிக் கொடுக்க, அவர் தாய், “என் மகன் உனக்காக என் கையிலிருந்து இந்த வெள்ளிக் காசுகளை ஆண்டவருக்கு நேர்ச்சையாக அர்ப்பணிக்கின்றேன்.அவற்றைக் கொண்டு செதுக்கிய உருவத்தையும் வார்ப்புச் சிலையையும் செய்துகொள்.எனவே அவற்றை இப்பொழுதே உன்னிடம் திருப்பித் தருகின்றேன்” என்றார். |
4 | அவர் தம் தாயிடம் திருப்பிக் கொடுத்த வெள்ளிக் காசுகளிலிருந்து அவர் தாய் இருநூறு வெள்ளிக் காசுகளை எடுத்து, அதைத் தட்டானிடம் கொடுத்தார்.அவர் அதை செதுக்கிய உருவமாகவும், வார்ப்புச் சிலையாகவும் செய்தார்.அது மீக்காவின் வீட்டில் இருந்தது. |
5 | இந்தத் தெய்வங்களுக்கான கோவில் ஒன்று மீக்காவிற்குச் சொந்தமாக இருந்தது.அவர் ஏபோதையும் தெராபிமையும் செய்தார்: தம் புதல்வருள் ஒருவரைக் குரவாக நியமித்தார். |
6 | அந்நாள்களில் இஸ்ரயேலில் அரசன் கிடையாது.ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் நேர்மையெனப் பட்டதைச் செய்து கொண்டிருந்தனர். |
7 | யூதாநாட்டுப் பெத்லகேமில், யூதா குலத்தைச் சார்ந்த லேவியரான ஓர் இளைஞர் தங்கியிருந்தார். |
8 | அவர் யூதாநாட்டுப் பெத்லகேம் நகரிலிருந்து தாம் தங்கி வாழ, வேறோர் இடத்தைத் தேடிப் புறப்பட்டுச் சென்றார்.செல்லும் வழியில் எப்ராயிம் மலைப்பகுதியில் இருந்த மீக்காவின் வீட்டை நெருங்கினார். |
9 | மீக்கா அவரிடம், “எங்கிருந்து வருகின்றீர்?” என்று கேட்டார்.அவர் அவரிடம்,”நான் யூதா நாட்டுப் பெத்லகேமிலிருந்து வரும் ஒரு லேவியன்.நான் தங்கி வாழ்வதற்கு ஓர் இடத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்” என்றார். |
10 | மீக்கா அவரிடம், “என்னுடன் தங்கும்: எனக்குத் தந்தையாகவும் குருவாகவும் இருப்பீர்.நான் உமக்கு ஆண்டொன்றுக்குப் பத்து வெள்ளிக் காசுகளும் உடையும் உணவும் தருவேன்” என்றார். |
11 | லேவியர் அவருடன் சென்றார். லேவியர் அவரோடு விருப்பமுடன் தங்கினார்.அவ்விளைஞர் அவருடைய புதல்வருள் ஒருவரைப் போல் இருந்தார். |
12 | மீக்கா, இளைஞரான அந்த லேவியரைக் குரவாக நியமித்தார்.அவர் மீக்காவின் வீட்டில் வாழ்ந்து வந்தார். |
13 | மீக்கா, “இப்பொழுது ஆண்டவர் எனக்கு நல்லது செய்வார் என அறிவேன்.ஏனெனில் ஒரு லேவியரே எனக்குக் குருவாக இருக்கின்றார்” என்றார். |