1 | சில நாள்களுக்குப் பிறகு, கோதுமை அறுவடைக் காலத்தில் சிம்சோன் ஓர் ஆட்டுக்குட்டியுடன் தம் மனைவியைச் சந்திக்கச் சென்றார். |
2 | அவள் தந்தை,”நீர் அவளை உண்மையாக வெறுப்பதாக நினைத்து அவளை உம் தோழனுக்குக் கொடுத்துவிட்டேன்.அவளுடைய இளைய சகோதரி அவளைவிட அழகாக இல்லையா? அவளுக்குப் பதிலாக இவள் உமக்கு மனைவியாக இருக்கட்டும்” என்றார். |
3 | சிம்சோன்”இம்முறை நான் பெலிஸ்தியருக்குத் தீமை செய்யும் பொழுது அவர்களின் முன் குற்றமற்றவன்” என்றார். |
4 | சிம்சோன் சென்று முந்நூறு நரிகளைப் பிடித்தார்.அவர் தீப்பந்தங்களை எடுத்து, வாலோடு வால் சேர்த்து, இரு வால்களுக்கு இடையே ஒரு தீப்பந்தமாக வைத்தார். |
5 | பந்தங்களில் தீ மூட்டி பெலிஸ்தியரின் முற்றிய பயிர்களிடையே நரிகளை அனுப்பினார்.அவை தானியங்களையும், முற்றிய பயிர்களையும், திராட்சை, ஒலிவத் தோட்டங்களையும் எரித்தன. |
6 | பெலிஸ்தியர்”இதைச் செய்தது திமினாவின் மருமகன் சிம்சோன்.ஏனெனில் திமினா அவர் மனைவியை எடுத்து அவருடைய தோழனுக்குக் கொடுத்துவிட்டான்” என்றனர். எனவே பெலிஸ்தியர் சென்று அவளையும் அவள் தந்தையையும் நெருப்பில் எரித்தனர். |
7 | சிம்சோன்,”நீங்கள் இப்படிச் செய்ததற்கு நான் உங்களைப் பழிவாங்கும் வரை ஓயமாட்டேன்” என்றார். |
8 | அவர் அவர்களைக் கடுமையாகத் தாக்கி, அவர்களுள் பலரை வெட்டி வீழ்த்தினார்.அங்கிருந்து புறப்பட்டு ஏற்றாமின் பாறைப்பிளவில் தங்கியிருந்தார். |
9 | பெலிஸ்தியர் யூதாவில் பாளையம் இறங்கி, இலேகியைத் தாக்கினர். |
10 | யூதா மக்கள் அவர்களிடம்,”ஏன் எங்களுக்கு எதிராக வந்துள்ளீர்கள்?” என்றனர்.அதற்குப் பெலிஸ்தியர்”சிம்சோனைப் பிடித்து, அவன் எங்களுக்குச் செய்ததுபோல், நாங்களும் அவனுக்குச் செய்ய வந்துள்ளோம்” என்றனர். |
11 | யூதாவிலிருந்து மூவாயிரம் பேர் ஏற்றாமின் பாறைப்பிளவுக்குச் சென்று சிம்சோனிடம்,”பெலிஸ்தியருக்குக் கீழ் நாம் இருக்கின்றோம் என்பது உனக்குத் தெரியாதா? ஏன் எங்களுக்கு இவ்வாறு செய்தாய்?” என்றனர்.அவர் அவர்களிடம்,”அவர்கள் எனக்குச் செய்தது போல், நானும் அவர்களுக்குச் செய்தேன்” என்றார். |
12 | அவர்கள் அவரிடம், உன்னைப் பிடித்துக் கட்டிப் பெலிஸ்தியர் கையில் ஒப்படைக்க நாங்கள் வந்துள்ளோம்” என்றனர்.சிம்சோன் அவர்களிடம்,”என்னைத் தாக்கமாட்டீர்கள் என்று எனக்கு உறுதி கூறுங்கள்” என்றார். |
13 | அவர்கள் அவரிடம்,”இல்லை: நாங்கள் உன்னைப் பிடித்துக் கட்டி அவர்கள் கையில் ஒப்படைப்போம்.நாங்கள் உன்னைக் கொல்லமாட்டோம்” என்றனர்.அவர்கள் அவரை இரண்டு புதிய கயிறுகளால் கட்டிப் பாறைப் பிளவிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தனர். |
14 | அவர் இலேகியை நெருங்கி வருகையில், பெலிஸ்தியர் கூச்சலிட்டுக்கொண்டு அவரைக் காண வந்தனர்.ஆண்டவரின் ஆவி அவர் மீது ஆற்றலுடன் இறங்கியது.அவர் கையில் இருந்த கயிறுகள் நெருப்பில் எரிந்த சணலைப் போல் ஆக, அவர் கையிலிருந்த கட்டுகள் தளர்ந்து வீழ்ந்தன. |
15 | அவர் ஒரு கழுதையின் பச்சைத் தாடை எலும்பைக் கண்டு, கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டு ஆயிரம் பேரைக் கொன்றார். |
16 | சிம்சோன்,”கழுதைத் தாடையால் குவியல் குவியல்கள்! கழுதையின் தாடையால் கொன்றேன் ஆயிரம் பேரை” என்றார். |
17 | அவர் இதைச் சொல்லி முடித்ததும், தாடை எலும்பைத் தம் கையிலிருந்து வீசி எறிந்தார்.அவ்விடத்தை”இராமேத்து இலேகி” என அழைத்தார். |
18 | அவர் மிகவும் தாகமுற்று, ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பி,”நீர் உம் ஊழியன்மூலம் இம் மாபெரும் விடுதலையைத் தந்தீர்.ஆனால் இப்பொழுது நான் தாகத்தால் செத்து, விருத்தசேதனம் செய்யப்படாதவரின் கையில் வீழ்வேனோ?” என்று மன்றாடினார். |
19 | கடவுள் இலேகியில் ஒரு நிலப்பிளவைத் தோற்றுவிக்க, அதிலிருந்து தண்ணீர் வெளிவந்தது.சிம்சோன் அதைக் குடித்ததும் அவருக்கு உயிர் திரும்ப, அவர் புத்துயிர் பெற்றார்.அவ்விடத்தை”ஏன்ககோரே” என அழைத்தார். |
20 | பெலிஸ்தியரின் காலத்தில் அவர் இருபது ஆண்டுகள் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார். |