1 | யோசுவா அதிகாலையில் விழித்தெழுந்தார்.அவரும் இஸ்ரயேல் மக்களனைவரும் சித்திமிலிருந்து புறப்பட்டு யோர்தான் வந்தடைந்தனர்.அதைக் கடக்குமுன் அங்கே தங்கினர். |
2 | மூன்று நாள்கள் கழிந்தபின் மேற்பார்வையாளர் பாளையமெங்கும் போய், |
3 | மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது:”உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை லேவியக் குருக்கள் தூக்குவதை நீங்கள் பார்க்கும்போது, உங்கள் இடங்களிலிருந்து புறப்பட்டு அதன் பின்னால் செல்லவேண்டும். |
4 | ஆயினும் உங்களுக்கும் அதற்கும் இரண்டாயிரம் அடி இடைவெளி இருக்கட்டும்.யாரும் அதன் அருகில் செல்ல வேண்டாம்.நீங்கள் செல்லும் வழி உங்களுக்குத் தெரியவேண்டும்.ஏனெனில் நீங்கள் அவ்வழியில் இதுவரை சென்றதில்லை.” |
5 | யோசுவா மக்களிடம்,”உங்களைத் தூய்மையாக்கிக்கொள்ளுங்கள்.நாளை ஆண்டவர் உங்களிடையே வியத்தகு செயல்கள் புரிவார்” என்றார். |
6 | யோசுவா குருக்களிடம்,”உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிப் பிடியுங்கள்.மக்கள்முன் கடந்து செல்லுங்கள்” என்றார்.அவ்வாறே அவர்களும் உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொண்டு மக்கள்முன் சென்றனர். |
7 | ஆண்டவர் யோசுவாவிடம்,”இன்று இஸ்ரயேலர் அனைவரின் பார்வையில் உன்னை உயர்த்தத் தொடங்குகிறேன்.அதனால் நான் மோசேயுடன் இருந்ததுபோல் உன்னோடும் இருப்பேன் என்று அவர்கள் அறிந்து கொள்வார்கள். |
8 | உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிவரும் குருக்கள் யோர்தான் ஆற்றங்கரைக்கு வந்தவுடன் அங்கேயே நிற்குமாறு அவர்களுக்குக் கட்டளையிடு” என்றார். |
9 | யோசுவா இஸ்ரயேல் மக்களிடம்,”இங்கே வாருங்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் வார்த்தைகளைக் கேளுங்கள். |
10 | வாழும் இறைவன் உங்களிடையே இருக்கின்றார் என்று இதனால் அறிவீர்கள்.அவர் உங்கள் முன்னிருந்து கானானியர், இத்தியர், இவ்வியர், பெரிசியர், கிர்காசியர், எமோரியர், எபூசியர் ஆகியோரை விரட்டிவிடுவார். |
11 | இதோ, உலகனைத்தின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை உங்கள்முன் யோர்தானைக் கடக்கின்றது. |
12 | இப்போது இஸ்ரயேலின் பன்னிரு குலங்களிலிருந்தும் குலத்திற்கு ஒருவராக நீங்கள் தேர்ந்தெடுங்கள். |
13 | உலகனைத்தின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் செல்லும் குருக்களின் காலடிகள் யோர்தான் நீரில் பட்டவுடன் அத்தண்ணீர் பிரிந்து போகும்.மேற்பகுதியிலிருந்து ஓடிவரும் தண்ணீர் குவியலாக நிற்கும்” என்றார். |
14 | மக்கள் தங்கள் கூடாரஙகளிலிருந்து யோர்தானைக் கடக்கப் புறப்படும்போது குருக்கள் உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொண்டு மக்கள் முன்னே சென்றனர். |
15 | உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தானை அடைந்தனர்.அவர்கள் காலடிகள் யோர்தான் நீரின் விளிம்பில் நனைந்தவுடன், மேற்பகுதியிலிருந்து ஓடிவந்த யோர்தான் நீர் வெகுதொலையில் நின்றது.அறுவடை நாள்களில் இந்நதி கரைபுரண்டு ஓடும். |
16 | மேற்பகுதியிலிருந்து வந்த நீர், சாரத்தானின் அருகில் இருந்து ஆதாம் நகருக்கு எதிரில் வெகு தொலையில் மேலெழும்பி நின்றது.கீழே ஓடிய நீர் பாலைநிலக் கடலாகிய சாக்கடல் வரை ஓடிமறைந்தது.மக்களும் எரிகோவுக்கு நேர்எதிராகக் கடந்து சென்றனர். |
17 | இஸ்ரயேலர் அனைவரும் கடந்து முடிக்கும்வரை, ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தான் நடுவே வறண்ட தரையில் நின்றனர்.எல்லா இஸ்ரயேல் மக்களும் அவ்வறண்ட தரை வழியாக நடந்தனர். |