வேதாகமத்தை வாசி

நியாயாதிபதிகள் 1

                   
புத்தகங்களைக் காட்டு
1யோசுவா இறந்த பின் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம், “யார் கானானியருக்கு எதிராகச் சென்று எங்கள் சார்பாக முதலில் அவர்களுடன் போரிடுவர்?” என்று கேட்டனர்.
2ஆண்டவர், “யூதா செல்வான்.இதோ! அவன் கையில் நிலத்தைக் கொடுத்துள்ளேன்” என்றார்.
3யூதாவின் மக்கள் தம் சகோதரராகிய சிமியோனின் மக்களிடம், “எங்களுடன் எங்கள் நிலப்பகுதிக்குள் வாருங்கள்.கானானியருக்கு எதிராக நாம் போரிடுவோம்.நாங்களும் உங்கள் நிலப்பகுதிக்குள் உங்களுடன் வருவோம்” என்றனர்.சிமியோனின் மக்கள் அவர்களுடன் சென்றனர்.
4அவ்வாறே யூதா போரிடச் சென்றபொழுது ஆண்டவர் கானானியரையும் பெரிசியரையும் அவர்களிடம் ஒப்படைத்தார்.அவர்கள் பெசக்கில் பத்தாயிரம் பேரைக் கொன்றனர்.
5அதோனிபெசக்கைப் பெசக்கில் கண்டுபிடித்து, அவனை எதிர்த்துப் போரிட்டுக் கானானியரையும் பெரிசியரையும் அவர்கள் வீழ்த்தினர்.
6தப்பி ஓடிய அதோனிபெசக்கை அவர்கள் துரத்திச் சென்று பிடித்து, அவனுடைய கை, கால்களின் பெருவிரல்களைத் துண்டித்தனர்.
7அப்பொழுது, அதோனிபெசக்கு, “கை, கால்களின் பெருவிரல்கள் துண்டிக்கப்பட்ட எழுபது அரசர்கள் என் உணவு மேசையிலிருந்து சிதறியவற்றைப் பொறுக்கினார்கள்.நான் செய்தவாறே, கடவுள் எனக்குச் செய்துள்ளார்” என்றான்.அவனை எருசலேமுக்குக் கொண்டு வந்தனர்.அவன் அங்கே இறந்தான்.
8யூதாவின் மக்கள் எருசலேமுக்கு எதிராகப் போரிட்டு அதைக் கைப்பற்றினர்.வாள்முனையால் மக்களை வெட்டிவீழ்த்தி, நகரை நெருப்புக்கு இரையாக்கினர்.
9பின்னர் யூதாவின் மக்கள் மலைநாட்டிலும், நெகேபிலும், மலை அடிவாரங்களிலும் வாழும் கானானியருக்கு எதிராகப் போர்புரியச் சென்றனர்.
10யூதாவின் மக்கள் ‘கிரியத்து அர்பா’ என்று முன்னர் அழைக்கப்பட்ட எபிரோனில் வாழ்ந்த கானானியருக்கு எதிராகச் சென்றனர் என்பதாகும்.அவர்கள் சேசாய், அகிமான், தல்மாய் இனங்களைத் தோற்கடித்தனர்.
11அங்கிருந்து தெபீர்வாழ் மக்களுக்கு எதிராகச் சென்றனர்.தெபீரின் முன்னாள் பெயர் கிரியத்து சேபேர் என்பதாகும்.
12காலேபு, கிரியத்து சேபேரைத் தாக்கிக் கைப்பற்றுபவருக்குஎன் மகள் அக்சாவை மனைவியாக அளிப்பேன்” என்றார்.
13காலேபின் இளைய சகோதரனும், கெனாசின் மகனுமாகிய ஒத்னியேல் அதைக் கைப்பற்றினார்.எனவே காலேபு அவருக்குத் தம்மகள் அக்சாவை மனைவியாக அளித்தார்.
14அவள் வந்தபோது, அவளுடைய தந்தையிடமிருந்து ஒரு நிலம் கேட்குமாறு அவர் அவளைத் தூண்டினார்.எனவே அவள் கழுதையைவிட்டு இறங்கியபோது காலேபு அவளிடம், “உனக்கு என்ன வேண்டும்?” என்று அவளைக் கேட்டார்.
15அவள் அவரிடம், “எனக்கு நீர் ஓர் அன்பளிப்புத் தரவேண்டும்.எனக்கு வறண்ட நிலத்தைத்தான் கொடுத்துள்ளீர்.எனக்கு நீரூற்றுகளையும் தாரும்” என்றாள்.எனவே காலேபு அவளுக்கு மேல் ஊற்றுகளையும் கீழ் ஊற்றுகளையும் கொடுத்தார்.
16மோசேயின் மாமனாரின் மக்களாகிய கேனியர், பேரீச்ச நகரிலிருந்து யூதா மக்களுடன், யூதா பாலைநிலத்திற்குச் சென்றனர்.அது ஆராத்துக்குத் தெற்கே உள்ளது.அவர்கள் அங்குச் சென்று அங்கிருந்த மக்களுடன் வாழ்ந்தனர்.
17யூதாவின் மக்கள் தம் சகோதரர் சிமியோனின் மக்களுடன் சென்றனர்.அவர்கள் செப்பாத்தில் வாழும் கானானியரைக் கொன்று அந்நகரை முற்றிலும் அழித்தனர், நகரின் பெயரை ஒர்மா என்று அழைத்தனர்.
18யூதாவின் மக்கள் காசாவையும் அதன் எல்லைக்குட்பட்டவற்றையும் அஸ்கலோனையும் அதன் எல்லைக்குட்பட்டவற்றையும் எக்ரோனையும் அதன் எல்லைக்குட்பட்டவற்றையும் கைப்பற்றினர்.
19ஆண்டவர் யூதாவின் மக்களுடன் இருந்தார்.அவர்கள் மலைப்பகுதியை உரிமையாக்கிக் கொண்டனர்.ஆனால் சமவெளியில் வாழ்ந்தவர்களை அவர்களால் விரட்ட முடியவில்லை.ஏனெனில் அவர்களிடம் இரும்புத் தேர்கள் இருந்தன.
20ஆனாக்கின் மூன்று புதல்வர்களை விரட்டியடித்த காலேபுக்கு மோசே கூறியிருந்தவாறு, எபிரோன் கொடுக்கப்பட்டது.
21எருசலேமில் வாழ்ந்த எபூசியரைப் பென்யமின் மக்கள் விரட்டவில்லை.இந்நாள்வரை எபூசியர் பென்யமின் மக்களுடன் எருசலேமில் வாழ்கின்றனர்.
22யோசேப்பின் வீட்டார் பெத்தேலுக்கு எதிராகச் சென்றனர்.ஆண்டவர் அவர்களுடன் இருந்தார்.
23யோசேப்பின் வீட்டார் பெத்தேலை உளவு பார்த்தனர்.இந்நகரின் முன்னாள் பெயர் ‘லூசு’ என்பதாகும்.
24ஒற்றர்கள், ஓர் ஆள் நகரிலிருந்து வெளியே வருவதைக் கண்டனர்.அவர்கள் அவனிடம், “தயவு செய்து நகரின் நுழைவாயிலைக் காட்டு.நாங்கள் உனக்குக் கருணை காட்டுவோம்” என்றனர்.
25அவனும் அவர்களுக்கு நகரின் நுழைவாயிலைக் காட்டினான்.அவர்கள் நகரை வாள்முனையில் தாக்கினர்.ஆனால் அவர்கள் அந்த ஆளையும் அவன் குடம்பம் முழுவதையும் தப்பிச்செல்ல விட்டுவிட்டனர்.
26அந்த ஆள் இத்தியரின் நாட்டுக்குச் சென்று ஒரு நகரைக் கட்டி எழுப்பினான்.அதற்கு ‘லூசு’ என்று பெயரிட்டான்.அப்பெயர் இந்நாள்வரை நிலவி வருகின்றது.
27பெத்சானையும், அதன் சிற்றூர்களையும், தனாக்கையும், அதன் சிற்றூர்களையும், தோர்வாழ் மக்களையும், அவர்களின் சிற்றூர்களையும், இபிலயாம்வாழ் மக்களையும், அவர்களின் சிற்றூர்களையும், மெகிதோ வாழ் மக்களையும், அவர்களின் சிற்றூர்களையும் மனாசேயின் மக்கள் முறியடிக்கவில்லை.கானானியர் அந்நிலத்தில் தொடர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்தனர்.
28இஸ்ரயேலர் வலிமை பெற்றதும், கானானியரை அடிமை வேலைக்கு அமர்த்தினர்.ஆனால் அவர்களை முற்றிலும் விரட்டவில்லை.
29எப்ராயிமின் மக்கள் கெசேரில் வாழ்ந்த கானானியரை விரட்டவில்லை.கானானியர் கெசேரில் அவர்களிடையே வாழ்ந்தனர்.
30கிற்றரோன்வாழ் மக்களையோ, நகலோல் வாழ் மக்களையோ செபுலோனின் மக்கள் விரட்டவில்லை.கானானியர் அவர்களிடையே வாழ்ந்தனர்.அவர்கள் அடிமைகள் ஆயினர்.
31அக்கோ வாழ் மக்களையும், சீதோன், அக்லாபு, அக்சீபு, எல்பா, அப்பீகு, இரகோபு வாழ் மக்களையும் ஆசேரின் மக்கள் விரட்டவில்லை.
32ஆசேரின் மக்கள் அந்நாட்டில் வாழும் கானானியரிடையே வாழ்கின்றனர்.ஏனெனில் அவர்கள் அவர்களை விரட்டவில்லை.
33நப்தலியின் மக்கள் பெத்சமேசுவாழ் மக்களையும், பெத்தனாத்து வாழ் மக்களையும் விரட்டவில்லை.அந்நாட்டில் வாழும் கானானியர், பெத்சமேசுவாழ் மக்கள், பெத்தனாத்துவாழ் மக்கள் ஆகியோரிடையே வாழ்கின்றனர்.
34எமோரியர், தாண் மக்களைச் சமவெளிக்கு இறங்கவிடாமல் தடுத்து, மலைநோக்கிச் செல்லுமாறு நெருக்கினார்கள்.
35எமோரியர் கர்கரேசிலும், அய்யலோனிலிருந்த சாலபிமிலும் தொடர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்தனர்.யோசேப்பு வீட்டாரின் கை ஓங்கியது.எமோரியர் அடிமைகள் ஆயினர்.
36எமோரியரின் எல்லை அக்ரபிம் ஏற்றத்திலிருந்து, சேலாவுக்கு வடக்கே மேல் நோக்கிச் சென்றது.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.