1 | நூனின் மகனாகிய யோசுவா சித்திமிலிருந்து இரண்டு ஒற்றர்களை வேவு பார்க்க அனுப்பினார்.அவர்களிடம்,”நீங்கள் சென்று நிலப்பகுதியையும், குறிப்பாக எரிகோ நகரையும் பாருங்கள்” என்றார்.அவர்கள் சென்று இராகாபு என்ற பெயருள்ள விலைமாதின் வீட்டுக்கு வந்து, அங்குத் தங்கினர். |
2 | சில இஸ்ரயேலர், இரவில் நாட்டைப்பற்றிய உளவு அறிய வந்தனர் என்ற செய்தி எரிகோ மன்னனுக்கு எட்டியது. |
3 | உடனே அவன்,”உன் வீட்டுக்கு வந்து உன்னோடு தங்கியிருக்கும் ஆள்களை வெளியே கொண்டுவா.ஏனெனில் அவர்கள் நாடு முழுவதையும் உளவறிய வந்துள்ளனர்” என்று இராகாபிடம் சொல்லுமாறு ஆள் அனுப்பினான். |
4 | அப்பெண் அவ்விருவரையும் அழைத்து ஒளித்துவைத்தபின்,”சில மனிதர்கள் என்னிடம் வந்தனர்.அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்று எனக்குத் தெரியாது. |
5 | இருட்டியபின் வாயில் கதவு சாத்தப்படும்பொழுது அவர்கள் வெளியே சென்றார்கள். அவர்கள் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை.விரைவாக அவர்களைப் பின்தொடர்ந்து பிடியுங்கள்” என்றார். |
6 | அவர் அவர்களை மாடியில் ஏற்றி அங்கிருந்த சணல் தட்டைகளுக்குள் மறைத்து வைத்தார். |
7 | அந்த ஆள்கள் யோர்தானுக்குச் செல்லும் வழியில் ஆற்றந்துறைவரை அவர்களைத் தேடிச் சென்றனர்.தேடி வந்தவர்கள் வெளியேறியதும் வாயிற்கதவு மூடப்பட்டது. |
8 | அவரோ, மாடியில் இருந்த ஒற்றர்கள் உறங்குமுன் அவர்களிடம் சென்றார். |
9 | அவர்களிடம் அவர்,”இந்நாட்டை ஆண்டவர் உங்களுக்கு அளிப்பார் என்று நான் அறிவேன். ஏனெனில் உங்களைப் பற்றிய அச்சம் எங்களிடையே எழுந்துள்ளது.உலகில் வாழ்வோர் அனைவரும் உங்கள்முன் நடுங்குகின்றனர். |
10 | எகிப்தினின்று நீங்கள் வெளியேறும்பொழுது செங்கடலின் நீரை ஆண்டவர் வற்றச்செய்தது பற்றி அவர்கள் கேள்விப்பட்டுள்ளனர்.நீங்கள் கீழை யோர்தானில் இரண்டு எமோரிய அரசர்களான சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் அவர்களை அழித்ததையும் அவர்கள் அறிவார்கள். |
11 | அதைக் கேள்விப்பட்டவுடன் எங்கள் இதயம் கலக்கமுற்றது.உங்கள் முன்னிலையில் எங்கள் உள்ளம் தளர்ந்திருக்கிறது.ஏனெனில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர், மேலே விண்ணுலகம் முதல் கீழே மண்ணுலகம் அனைத்திற்கும் கடவுள். |
12 | நான் உங்களுக்கு இரக்கம் காட்டியதுபோல் நீங்களும் என் தந்தை வீட்டிற்கு இரக்கம் காட்டுவீர்கள் என்று இப்பொழுது எனக்கு ஆண்டவரின் பெயரால் வாக்குறுதி அளியுங்கள்.நம்பத் தகுந்த அடையாளம் ஒன்றினை எனக்குக் கொடுங்கள். |
13 | என் தாய், தந்தை, என் சகோதர சகோதரிகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான குடும்பங்கள் அனைத்தையும் வாழவிடுங்கள். |
14 | அதற்கு அந்த ஒற்றர்கள்,”எங்கள் உயிர் உம்கையில் உள்ளது.எங்களைப் பற்றி வெளியில் சொல்லாமல் இருந்தால் ஆண்டவர் எங்களுக்கு நாட்டை அளிக்கும்போது நாங்கள் உங்களுக்கு இரக்கம் காட்டுவோம்.நம்பிக்கையுடன் நடந்துகொள்வோம்” என்றனர். |
15 | அவர் ஒரு கயிற்றின்மூலம் அவர்களைச் சாளரம் வழியாக இறக்கிவிட்டார்.ஏனெனில், அவரது வீடு கோட்டைச் சுவரோடு இணைந்திருந்தது.அங்கே அவர் வாழ்ந்து வந்தார். |
16 | அவர் அவர்களிடம்,”உங்களைத் துரத்துபவர்கள் கண்டுபிடிக்காதபடி நீங்கள் மலையை நோக்கிப் போங்கள்.துரத்துபவர்கள் திரும்பும்வரை அங்கே மூன்று நாள்கள் ஒளிந்து கொள்ளுங்கள்.பின்னர், உங்கள் வழியே செல்லுங்கள்” என்றார். |
17 | அப்பொழுது ஒற்றர்கள்,”நீர் எங்களிடமிருந்து பெற்ற வாக்குறுதியிலிருந்து நாங்கள் தவற மாட்டோம். |
18 | நாங்கள் இந்நாட்டுக்குத் திரும்பி வரும்பொழுது நீர் இந்தச் சிவப்புக் கயிற்றை எங்களை இறக்கிவிட்ட சாளரத்தில் கட்டிவையும்.உம் தாய், தந்தை, உம் சகோதரர்கள், மற்றும் உம் தந்தை வீட்டில் உள்ள அனைத்தையும் உம் வீட்டில் சேர்த்து வைத்திரும். |
19 | உம் வீட்டடிலிருந்து கதவுக்கு வெளியே எவராவது வந்தால் அவரது சாவுக்கு அவரே பொறுப்பாவார். நாங்கள் குற்றமற்றவர்கள். ஆனால் உம்மோடு வீட்டிலிருப்பவர் மீது எவராவது கை வைத்ததால் அந்த இரத்தப்பழி எங்கள் தலைமீது விழும். |
20 | நமக்குள் நடந்த இந்தப் பேச்சு வார்த்தையை நீர் வெளிப்படுத்தினால், எங்களிடமிருந்து நீர் பெற்ற வாக்குறுதிக்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல” என்றனர். |
21 | அவர்,”உங்கள் வார்த்தைப்படியே ஆகட்டும்” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.அவர்கள் வெளியே சென்றபின் அவர் ஒரு கருஞ்சிவப்புக் கயிற்றைச் சாளரத்தில் கட்டி வைத்தார். |
22 | அவர்கள் மலைக்குச் சென்று, துரத்தி வந்தவர்கள் திரும்பிச் செல்லும் வரை மூன்று நாள்கள் அங்கே தங்கினார்கள்.துரத்தியவர்கள் வழிநெடுகத்தேடியும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. |
23 | அங்கே தங்கியிருந்த இரண்டு ஒற்றர்களும் மலையிலிருந்து கீழே இறங்கிப் பயணம் செய்து நூனின் மகன் யோசுவாவிடம் வந்து தங்களுக்கு நடந்த அனைத்தையும் எடுத்துரைத்தனர். |
24 | மேலும், அவர்கள் யோசுவாவிடம்,”நாடு அனைத்தையும் கடவுள் நம் கையில் ஒப்படைத்துள்ளார்.நாட்டில் வாழ்பவர் அனைவரும் நம்மைக் கண்டு நடுங்குகின்றனர்” என்றார்கள். |