1 | ஆண்டவர் யோசுவாவை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: |
2 | “இஸ்ரயேல் மக்களிடம் அவர்களுக்கு மோசே வழியாகக் கூறியபடி,”அடைக்கல நகர்களை உங்களுக்கெனத் தேர்ந்துகொள்ளுங்கள்” என்று கூறுவாய். |
3 | அறியாமல் தவறுதலாக ஒருவரைக் கொன்றவர் இரத்தப்பழி வாங்குபவரிடமிருந்து தப்பி ஓடித் தஞ்சம்புக இந்நகர்கள் உங்களுக்கு அடைக்கலமாக அமையும். |
4 | கொலையாளி இந்நகர்களில் ஒன்றனுள் ஓடி, நுழைவாயிலில் நின்று, அந்நகர்ப் பெரியவர்களின் காதில்படும்படியாக தம் நிலையை எடுத்துரைப்பார்.அவர்கள் அவரைத் தங்கள் நகருக்குள் அழைத்துச்சென்று தங்களுடன் தங்கியிருப்பதற்கு ஓர் இடம் கொடுப்பர். |
5 | இரத்தப்பழி வாங்குபவர் துரத்திவந்தால், கொலையாளியை அவர் கையில் ஒப்படைக்க மாட்டார்கள்.ஏனெனில் அவர் அறியாமல்தான் மற்றவரைக் கொன்றுவிட்டார்.இதற்கு முன் கொலையாளி அவரை வெறுத்ததில்லை. |
6 | கொலையாளி தீர்ப்புக்காக அவையின் முன் நிற்கும்வரை, அந்நாள் தலைமைக் குரு சாகும்வரை அவர் அந்நகரில் தங்குவார். |
7 | அதன்பின் கொலையாளி தம் நகருக்கு எந்த நகரிலிருந்து ஓடி வந்திருந்தாரோ, அந்த நகருக்கு தம் வீட்டுக்குச் செல்வார்.” தேர்ந்து கொள்ளப்பட்ட அடைக்கல நகர்கள்: நப்தலி மலைநாட்டில் கலிலேயாவில் கெதேசு எப்ராயிம்: மலைநாட்டில் செக்கேம்: யூதா மலை நாட்டில் எபிரோன் எனப்படும் கிரியத்து அர்பா: |
8 | யோர்தானுக்கு அப்பால் எரிகோவுக்குக் கிழக்காக ரூபனின் குலத்திற்குரிய பாலைநிலச் சமவெளியில் பெட்சேர்: காத்துக் குலத்திற்குரிய கிலயாதில் இராமோத்து: மனாசேயின் குலத்திற்குரிய பாசானில் கோலான்: |
9 | இஸ்ரயேலர் அனைவருக்கும் அவர்கள் நடுவில் வாழும் வேற்றினத்தாருக்கும் மேற்குறிப்பிட்டவை அடைக்கல நகர்களாக விளங்கின.அறியாமல் பிறரைக் கொன்ற எவரும் இரத்தப்பழி வாங்குபவரிடமிருந்து தப்புவதற்கு இவற்றில் அடைக்கலம் புகுவார்.மக்களவை அவருக்குத் தீர்ப்பு வழங்கும் வரை அவர் கொல்லப்படுவதில்லை. |