வேதாகமத்தை வாசி

யோசுவா 20

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆண்டவர் யோசுவாவை நோக்கிப் பின்வருமாறு கூறினார்:
2“இஸ்ரயேல் மக்களிடம் அவர்களுக்கு மோசே வழியாகக் கூறியபடி,”அடைக்கல நகர்களை உங்களுக்கெனத் தேர்ந்துகொள்ளுங்கள்” என்று கூறுவாய்.
3அறியாமல் தவறுதலாக ஒருவரைக் கொன்றவர் இரத்தப்பழி வாங்குபவரிடமிருந்து தப்பி ஓடித் தஞ்சம்புக இந்நகர்கள் உங்களுக்கு அடைக்கலமாக அமையும்.
4கொலையாளி இந்நகர்களில் ஒன்றனுள் ஓடி, நுழைவாயிலில் நின்று, அந்நகர்ப் பெரியவர்களின் காதில்படும்படியாக தம் நிலையை எடுத்துரைப்பார்.அவர்கள் அவரைத் தங்கள் நகருக்குள் அழைத்துச்சென்று தங்களுடன் தங்கியிருப்பதற்கு ஓர் இடம் கொடுப்பர்.
5இரத்தப்பழி வாங்குபவர் துரத்திவந்தால், கொலையாளியை அவர் கையில் ஒப்படைக்க மாட்டார்கள்.ஏனெனில் அவர் அறியாமல்தான் மற்றவரைக் கொன்றுவிட்டார்.இதற்கு முன் கொலையாளி அவரை வெறுத்ததில்லை.
6கொலையாளி தீர்ப்புக்காக அவையின் முன் நிற்கும்வரை, அந்நாள் தலைமைக் குரு சாகும்வரை அவர் அந்நகரில் தங்குவார்.
7அதன்பின் கொலையாளி தம் நகருக்கு எந்த நகரிலிருந்து ஓடி வந்திருந்தாரோ, அந்த நகருக்கு தம் வீட்டுக்குச் செல்வார்.” தேர்ந்து கொள்ளப்பட்ட அடைக்கல நகர்கள்: நப்தலி மலைநாட்டில் கலிலேயாவில் கெதேசு எப்ராயிம்: மலைநாட்டில் செக்கேம்: யூதா மலை நாட்டில் எபிரோன் எனப்படும் கிரியத்து அர்பா:
8யோர்தானுக்கு அப்பால் எரிகோவுக்குக் கிழக்காக ரூபனின் குலத்திற்குரிய பாலைநிலச் சமவெளியில் பெட்சேர்: காத்துக் குலத்திற்குரிய கிலயாதில் இராமோத்து: மனாசேயின் குலத்திற்குரிய பாசானில் கோலான்:
9இஸ்ரயேலர் அனைவருக்கும் அவர்கள் நடுவில் வாழும் வேற்றினத்தாருக்கும் மேற்குறிப்பிட்டவை அடைக்கல நகர்களாக விளங்கின.அறியாமல் பிறரைக் கொன்ற எவரும் இரத்தப்பழி வாங்குபவரிடமிருந்து தப்புவதற்கு இவற்றில் அடைக்கலம் புகுவார்.மக்களவை அவருக்குத் தீர்ப்பு வழங்கும் வரை அவர் கொல்லப்படுவதில்லை.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.