வேதாகமத்தை வாசி

யோசுவா 14

                   
புத்தகங்களைக் காட்டு
1கானான் நாட்டில் இஸ்ரயேலர் பெற்ற உடைமைகள் இவையே.இவற்றைக் குரு எலயாசர், நூனின் மகன் யோசுவா, குலங்களின் தந்தையர்களின் தலைவர்கள் ஆகியோர் இஸ்ரயேல் மக்களுக்கு உடைமையாக அளித்தனர்.
2மோசேயின் மூலம் ஆண்டவர் கட்டளையிட்டபடி ஒன்பது குலங்களுக்கும், அரைக் குலத்திற்கும் திருவுளச்சீட்டு மூலம் உடைமை அளிக்கப்பட்டது.
3மோசே இரண்டு குலங்களுக்கும், அரைக் குலத்திற்கும் யோர்தானுக்கு அப்பால் உடைமை அளித்தார்.லேவியர்களுக்கும் அவர்கள் நடுவில் உடைமை அளிக்கவில்லை.
4யோசேப்பின் புதல்வர் மனாசே, எப்ராயிம் என்று இரண்டு குலங்களாக இருந்தனர்.லேவியருக்கு நிலத்தில் பங்கு தரப்படவில்லை.ஆனால் அவர்கள் தங்குவதற்கு நகர்களும் அவர்களின் கால்நடைகளுக்கும் மற்ற உடைமைகளுக்கும் மேய்ச்சல் நிலங்களும் தரப்பட்டன.
5ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேலர் செய்து நிலத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
6யூதாவின் மக்கள் கில்காலில் யோசுவாவிடம் வந்தனர்.கெனிசியனும் எபுன்னேயின் மகனுமான காலேபு அவரிடம்,”ஆண்டவர் கடவுளின் மனிதரான மோசேயிடம் காதேசு பர்னேயாவில் என்னைப்பற்றியும் உன்னைப்பற்றியும் கூறிய வார்த்தை என்ன என்று உனக்குத் தெரியும்.
7நான் நாற்பது வயதாக இருக்கும்போது ஆண்டவரின் ஊழியராகிய மோசே என்னைக் காதேசு பர்னேயாவிலிருந்து நாட்டை உளவறிய அனுப்பினார்.திரும்பி வந்து என் மனத்திற்குப்பட்டதை அவருக்குத் தெரிவித்தேன்.
8என்னுடன் வந்த என் சகோதரர் மக்களின் இதயத்தை அச்சத்தால் நடுங்கச் செய்தனர்.நான் முற்றிலும் என் கடவுளாகிய ஆண்டவரைப் பின்பற்றினேன்.
9மோசே அந்நாளில்,”நீ என் கடவுளாகிய ஆண்டவரை முற்றிலும் பின்பற்றியதால், உன் காலடி பட்ட நிலத்தை எல்லாம் உறுதியாகவே உனக்கும் உன் மக்களுக்கும் என்றும் உடைமையாக அளிப்பேன்” என்று எனக்கு ஆணையிட்டுக் கூறினார்.
10இதோ! அவர் கூறியது போல் நாற்பது ஆண்டுகளாக இதுவரை ஆண்டவர் என்னை உயிருடன் வைத்துள்ளார்.இதை ஆண்டவர் மோசேயிடம் கூறியபொழுது இஸ்ரயேலர் பாலைநிலத்தில் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
11மோசே என்னை அனுப்பிய நாளன்று வலிமையுடன் இருந்ததுபோல் மீண்டும் போர் புரிவதற்கும் போவதற்கும் வருவதற்கும் வலிமையுடன் இருக்கின்றேன்.
12ஆண்டவர் அந்நாளில் கூறியதுபோல் இப்பொழுது எனக்கு இந்த மலைநாட்டைக் கொடு. ஏனெனில் அங்கே ஆனாக்கியர் இருக்கின்றனர்.அவர்கள் அரண்சூழ்ந்த மாநகர்களில் வாழ்கின்றனர் என்று நீ கேள்விப்பட்டிருக்கின்றாய்.ஆண்டவர் என்னோடு இருக்கக்கூடும்.ஆண்டவர் கூறியபடி அவர்களைத் துரத்தியடிப்பேன்” என்றார்.
13யோசுவா எபுன்னேயின் மகன் காலேபுக்கு ஆசி வழங்கி எபிரோனை உடைமையாக அளித்தார்.
14இந்நாள்வரை எபிரோன் கெனிசியனான எபுன்னேயின் மகன் காலேபின் உடைமையாக உள்ளது.ஏனெனில் அவர் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரை முற்றிலும் பின்பற்றினார்.
15முன்னாளில் எபிரோனுக்குக் கிர்யத்து அர்பா என்ற பெயர் வழங்கியது.அர்பா ஆனாக்கியருள் பெருமைமிக்க மனிதன் ஆவான்.நாட்டில் போரின்றி அமைதி நிலவிற்று.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.