1 | யோசுவா ஆயியைக் கைப்பற்றி அழித்தார் என்றும், எரிகோவிற்கும் அதன் மன்னனுக்கும் செய்தது போல ஆயிக்கும் அதன் மன்னனுக்கும் செய்தார் என்றும் கிபயோன் குடிமக்கள் இஸ்ரயேலுடன் சமாதானம் செய்துகொண்டு அவர்களிடையே வாழ்கின்றார்கள் என்றும், எருசலேமின் மன்னன் அதோனிசெதக்கு கேள்விப்பட்டான். |
2 | அவன் மிகவும் அச்சமுற்றான்.ஏனெனில், பெருநகரான கிபயோன் அரச நகர்களில் ஒன்றாகவும் ஆயியைவிடப் பெரிய நகராகவும் அதன் மக்கள் அனைவரும் வலிமை மிக்கவர்களாகவும் இருந்தும் அது சமாதானம் செய்து கொண்டது. |
3 | எபிரோன் மன்னன் ஓகாம், யார்முத்து மன்னன் பிராம், இலாக்கிசு மன்னன் யாப்பியா, எக்லோன் மன்னன் தெபீர் ஆகியோருக்கு எருசலேம் மன்னன் அதோனிசெதக்கு |
4 | “எனக்கு உதவி செய்ய வாருங்கள்.நாம் கிபயோனைத் தாக்குவோம்.ஏனெனில் அது யோசுவாவுடனும் இஸ்ரயேல் மக்களுடனும் சமாதானம் செய்து கொண்டுள்ளது” என்று சொல்லியனுப்பினான். |
5 | அவ்வாறே எமோரிய இனத்தைச் சார்ந்த எருசலேம், ஏபிரோன், யார்முத்து, இலாக்கீசு, எக்லோன் ஆகியவற்றின் ஐந்து மன்னர்களும் ஒன்றுகூடி அவர்கள் படைகளுடன் சென்றார்கள்: கிபயோனுக்கு எதிரில் பாளையம் இறங்கி அதன்மீது போர்தொடுத்தார்கள். |
6 | கிபயோன் மக்கள் கில்காலில் பாளையம் இறங்கியிருந்த யோசுவாவுக்குச் சொல்லி அனுப்பியது:”உம் பணியாளர்களைக் கைவிடாதீர்.விரைந்து வந்து எங்களைக் காப்பாற்றும்.எங்களுக்கு உதவி செய்யும்.ஏனெனில் மலைப்பகுதியில் வாழும் எல்லா எமோரிய மன்னர்களும் எங்களை எதிர்க்க ஒன்று கூடியுள்ளனர்.” |
7 | எனவே, கில்காலிலிருந்து, யோசுவா தம் போர்வீரர்கள் அனைவருடனும் வலிமைமிக்க வீரர்களுடனும் புறப்பட்டுச் சென்றார். |
8 | ஆண்டவர் யோசுவாவிடம்,”அவர்கள் முன் அஞ்சாதே: ஏனெனில் அவர்களை உன்கையில் ஒப்படைத்துள்ளேன்.அவர்களில் ஒருவனும் உன்னை எதிர்த்து நிற்கமாட்டான்” என்றார். |
9 | யோசுவா கில்காலிலிருந்து இரவு முழுவதும் பயணம் செய்து, அவர்களை நோக்கித் திடீரென வந்தார். |
10 | ஆண்டவர் இஸ்ரயேல்முன் எமோரியரைத் துன்புறுத்தினார்: கிபயோனில் அவர்களை வன்மையாகத் தாக்கித் தோல்வியுறச் செய்தார்: அவர் அவர்களைப் பெத்கோரோனின் மேட்டு வழியே அசேக்கா, மக்கேதா வரை துரத்தித் தாக்கினார். |
11 | அவர்கள் இஸ்ரயேலரிடமிருந்து பெத்கோரோனுக்குத் தப்பி ஓடுகையில் ஆண்டவர் அவர்கள்மீது அசேக்காவரை பெரும் கற்களை வானத்திலிருந்து பொழிந்தார். இஸ்ரயேலரின் வாளால் கொல்லப்பட்டவர்களைவிடக் கல்மழையால் இறந்தவர்கள் அதிகம். |
12 | கடவுள் எமேரியரை இஸ்ரயேலர் கையில் ஒப்படைத்த அன்று யோசுவா ஆண்டவரிடம் பேசினார்.அவர் இஸ்ரயேலர் கண்முன்,”கதிரவனே! கிபயோனில் நில்! நிலவே! அய்யலோன் பள்ளத்தாக்கில் நில்” என்றார். |
13 | அவர்கள் தம் எதிரியின் மீது வஞ்சம் தீர்க்கும்வரை கதிரவனும் நிலவும் அசையாது நின்றன.இது யாசாரின் நூலில் எழுதப்படவில்லையா?”கதிரவன் நடுவானில் நின்றது.ஒரு நாள் முழுவதும் அது இறங்குவதற்கு விரையவில்லை”. |
14 | ஆண்டவர் மனிதக் குரலைக் கேட்டு, இஸ்ரயேலுக்காகப் போரிட்ட அந்நாளைப்போன்று அதற்கு முன்னும் பின்னும் இருந்ததில்லை. |
15 | யோசுவாவும் அவருடன் இருந்த எல்லா இஸ்ரயேல் மக்களும் கில்காலில் இருந்த பாளையத்திற்குத் திரும்பினர். |
16 | அந்த ஐந்து எமோரிய மன்னர்களும் தப்பி ஓடி, மக்கேதாவில் ஒரு குகையில் ஒளிந்து கொண்டார்கள். |
17 | அவர்கள் மக்கேதாக் குகையில் ஒளிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பற்றி யோசுவாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. |
18 | யோசுவா,”குகையின் வாயிலில் பெருங்கற்களை வையுங்கள்.அவர்களைக் காவல் காக்க அதற்கருகில் ஆள்களை நிறுத்துங்கள். |
19 | நீங்கள் நிற்காதீர்கள்.உங்கள் பகைவர்களைத் துரத்திச் செல்லுங்கள்.அவர்களைப் பின்புறத்திலிருந்து தாக்குங்கள்.அவர்களைத் தங்கள் நகருக்குள் செல்ல அனுமதிக்காதீர்கள்.ஏனெனில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உங்கள் கையில் ஒப்படைத்துள்ளார்” என்றார். |
20 | யோசுவாவும் இஸ்ரயேல் மக்களும் அவர்களை வன்மையாகத் தாக்கி அவர்கள் முற்றிலும் அழியும்வரை அவர்களைக் கொன்று முடித்தனர்.அவர்களிடமிருந்து தப்பி ஓடியவர்கள் பாதுகாக்கப்பட்ட நகர்களுக்குள் நுழைந்தார்கள். |
21 | மக்கேதாவில் பாளையம் இறங்கியிருந்த யோசுவாவிடம் மக்கள் அனைவரும் நலமே திரும்பினர்.இஸ்ரயேலுக்கு எதிராக எவரும் வாய்திறக்கக்கூட இல்லை. |
22 | யோசுவா,”குகையின் வாயிலைத் திறந்து, அந்த ஐந்து மன்னர்களையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்றார். |
23 | அவர்கள் அவ்வாறே செய்தனர்: எருசலேம், எபிரோன், யார்முத்து, இலாக்கிசு, எக்லோன் ஆகிய நகர்களின் ஐந்து மன்னர்களையும் குகையிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்கள். |
24 | அவர்கள் அந்த மன்னர்களை யோசுவாவிடம் கொண்டு வந்தபொழுது, யோசுவா இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் ஒருங்கே அழைத்து, அவருடன் சென்ற போர்த் தலைவர்களிடம்,”அருகில் சென்று உங்கள் பாதங்களை இம்மன்னர்களின் கழுத்தின்மீது வையுங்கள்” என்றார்.அவர்கள் நெருங்கி வந்து தங்கள் பாதங்களை அவர்கள் கழுத்தின்மீது வைத்தனர். |
25 | யோசுவா அவர்களிடம்,”அஞ்சாதீர்கள்: கலங்காதீர்கள்: திடமும் துணிவும் கொண்டிருங்கள்.ஏனெனில் ஆண்டவர் நீங்கள் போரிடும் எதிரிகள் அனைவருக்கும் இவ்வாறே செய்வார்” என்றார். |
26 | அதற்குப்பின் யோசுவா அந்த ஐந்து மன்னர்களை வாளால் வெட்டிக் கொன்றார்.அவர்களின் சடலங்களை ஐந்து மரங்களில் மாலைவரை தொங்கவிட்டார். |
27 | கதிரவன் மறையும் நேரத்தில் யோசுவா அச்சடலங்களை இறக்கிவிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்.அவற்றை அவர்கள் முன்பு ஒளிந்திருந்த குகைக்குள் எறிந்தார்கள்.குகையின் வாயிலில் பெருங்கற்களை வைத்தார்கள்.அவை இந்நாள்வரை உள்ளன. |
28 | யோசுவா அன்று மக்கேதாவைப் கைப்பற்றினார்.அதையும் அதன் மன்னனையும் வாள்முனையில் கொன்றார்.அவர்களைக் கொன்று அழித்தார்.அதனுள் இருந்த ஒருவரையும் தப்பவிடவில்லை.எரிகோ மன்னனுக்குச் செய்ததுபோல், மக்கேதா மன்னனுக்கும் செய்தார். |
29 | யோசுவாவும் அவருடன் இருந்த இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் மக்கேதாவிலிருந்து லிப்னாவுக்குச் சென்று அதனுடன் போர் தொடுத்தனர். |
30 | ஆண்டவர் லிப்னா மக்களையும் மன்னனையும் இஸ்ரயேல் மக்கள் கையில் ஒப்படைத்தார்.அதை அவர் வாள்முனையில் அழித்தார்.அதனுள் இருந்த ஒருவரையும் தப்பவிடவில்லை.எரிகோ மன்னனுக்குச் செய்ததுபோல், அதன் மன்னனுக்கும் செய்தார். |
31 | யோசுவாவும் அவருடன் இருந்த இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் லிப்னாவிலிருந்து இலாக்கிசுக்குச் சென்று அதை முற்றுகையிட்டுத் தாக்கினார்கள். |
32 | ஆண்டவர் இலாக்கிசை இஸ்ரயேலின் கையில் ஒப்படைத்தார்.அதை இரண்டாம் நாளில் யோசுவா கைப்பற்றினார்.வாள்முனையில் அதை அழித்தார்: அதனுள் இருந்த அனைவருக்கும் லிப்னாவுக்குச் செய்தது போல் செய்தார். |
33 | கெசேரின் மன்னன் ஓராம் இலாக்கிசுக்கு உதவி செய்யச் சென்றான்.யோசுவா அவனையும் அவன் மக்களையும் எவரும் தப்பாதபடி கொன்றார். |
34 | யோசுவாவும் அவருடன் இஸ்ரயேலர் எல்லாரும் இலாக்கிசிலிருந்து எக்லோனுக்குச் சென்று, அதை முற்றுகையிட்டுத் தாக்கினர். |
35 | அவர்கள் அதை அன்றே கைப்பற்றி, இலாக்கிசுக்குச் செய்ததுபோல், அன்றே அதையும் அதில் வாழ்ந்த அனைவரையும் கொன்று அழித்தனர். |
36 | யோசுவாவும் அவர் மக்களாகிய இஸ்ரயேலர் எல்லாரும் எக்லோனிலிருந்து எபிரோனுக்குச் சென்று அதைத் தாக்கினர். |
37 | அதைத் தாக்கி, அதன் மன்னனையும், அதன் நகர்களையும், அதனுள் இருந்த அனைத்து உயிர்களையும் வாள்முனையில் கொன்றனர்.எவரையும் உயிருடன் தப்பவிடவில்லை.எக்லோனுக்கு செய்த அனைத்தையும் அதற்கும் அவர் செய்தார்: அதையும் அதனுள் இருந்த அனைவரையும் அழித்தார். |
38 | யோசுவாவும் அவருடன் இருந்த இஸ்ரயேல் மக்களும் தெபீருக்குத் திரும்பி அதனைத் தாக்கினார். |
39 | அதன் மன்னனையும் எல்லா நகர்களையும் கைப்பற்றினர்.அவர்களை வாள்முனையில் தாக்கினர்.அதனுள் இருந்த அனைவரையும் அழித்தனர்.எவரையும் உயிருடன் தப்பவிடவில்லை.லிப்னாவுக்கும்அதன் மன்னனுக்கும் செய்ததுபோல், தெபீருக்கும் அதன் மன்னனுக்கும் அவர் செய்தார். |
40 | யோசுவா எல்லா மலைநாட்டையும் தாக்கினார்.நெகேபு சமவெளியையும், பள்ளத்தாக்கையும் அதன் மன்னர்களையும் கைப்பற்றினார்: எவரையும் உயிருடன் தப்பவிடவில்லை.இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டது போல் அவர்களை அழித்தார். |
41 | யோசுவா காதேசு பர்னேயாவிலிருந்து காசா வரை கோசேன் நாடு முழுவதையும் கிபயோன்வரை தோற்கடித்தார். |
42 | யோசுவா எல்லா மன்னர்களையும் நாடுகளையும் ஒரே படையெடுப்பில் கைப்பற்றினார்.ஏனெனில் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இஸ்ரயேலுக்காகப் போரிட்டார். |
43 | யோசுவாவும் அவருடன் இருந்த எல்லா இஸ்ரயேல் மக்களும் கில்காலில் இருந்த பாளையத்திற்குத் திரும்பினர். |