1 | ஆட்சோர் மன்னன் யாபின் இதைக் கேள்வியுற்று மாதோன் மன்னன் யோபாபுக்கும், சிம்ரோன் மன்னனுக்கும், அக்சாபு மன்னனுக்கும் ஆளனுப்பினான். |
2 | மலைப்பகுதியின் வடபுறத்திலும், கினரேத்திற்குத் தெற்கில் அராபாவிலும், சமவெளிப்பகுதிகளிலும் மேற்கே நாபோத்தோரில் இருந்த மன்னர்களுக்கும் |
3 | கிழக்கிலும் மேற்கிலும் இருந்த கானானியர், எமோரியர், இத்தியர், பெரிசியர், மலைவாழ் எபூசியர், மிஸ்பா நாட்டில் எர்மோனின் அடிவாரத்தில் இருந்த இவ்வியர் ஆகியோருக்கும் ஆளனுப்பினான். |
4 | அவர்களும் அவர்களுடைய படைகளும் கடற்கரையில் உள்ள மணலைப் போல் எண்ணிறந்த மக்களும் குதிரைகளும் தேர்களும் சென்றனர். |
5 | அந்த மன்னர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்தார்கள்.அவர்கள் அனைவரும் ஒன்றாக மேரோம் நீரோடைக் கரையில் இஸ்ரயேலருடன் போரிடப் பாளையம் இறங்கினார்கள். |
6 | ஆண்டவர் யோசுவாவிடம்,”அவர்கள் முன் அஞ்சாதே, ஏனெனில் நாளை இந்நேரம் நான் அவர்கள் அனைவரையும் கொலையுண்டவர்களாய் இஸ்ரயேல்முன் ஒப்படைப்பேன்.அவர்கள் குதிரைகளின் குதிகால் நரம்புகளை நீ வெட்டுவாய்.அவர்களின் தேர்களைத் தீக்கிரையாக்குவாய் என்றார். |
7 | யோசுவாவும் அவருடன் இருந்த எல்லாப் போர்வீரர்களும் திடீரென அவர்களுக்கெதிராக மேரோம் நீரோடைக்கருகில் வந்து அவர்களைத் தாக்கினர். |
8 | ஆண்டவர் அவர்களை இஸ்ரயேலர் கையில் ஒப்படைத்தார்.அவர்களை இஸ்ரயேலர் கொன்றனர்.அவர்களைப் புகழ்மிக்க சீதோன் வரையிலும், மிஸ்ரபோத்துமயிம் வரையிலும், கிழக்கே மிஸ்பே பள்ளத்தாக்கு வரையிலும் எவரும் தப்பி விடாதவாறு தாக்கினர். |
9 | ஆண்டவர் சொன்னபடியே யோசுவா அவர்களுக்குச் செய்தார்.குதிரைகளின் குதிகால் நரம்புகளை வெட்டினார்.அவர்களின் தேர்களைத் தீக்கிரையாக்கினார். |
10 | இச்சமயம் யோசுவா திரும்பி வந்து ஆட்சோரைக் கைப்பற்றினார்.அதன் மன்னனை வாளால் தாக்கினார்.ஏனெனில், ஆட்சோர் அந்த அரசுகள் அனைத்திற்கும் தலைமை தாங்கி வந்தது. |
11 | இஸ்ரயேலர் அந்நகரில் இருந்த உயிர்கள் அனைத்தையும் வாள் முனையில் கொன்று அடியோடு அழித்தனர்: ஓர் உயிரையும் விட்டு வைக்கவில்லை: ஆட்சோரைத் தீக்கிரையாக்கினர். |
12 | யோசுவா, அந்த எல்லா நகர்களையும் அவற்றின் மன்னர்களையும் கைப்பற்றினார்.ஆண்டவரின் ஊழியர் மோசே கட்டளையிட்டிருந்தபடி அவர்களை வாள்முனையில் கொன்று அடியோடு அழித்தார். |
13 | மேட்டுப் பகுதியில் நிறுவப்பட்ட நகர்களை இஸ்ரயேல் மக்கள் எரிக்கவில்லை.யோசுவா ஆட்சோரை மட்டும் எரித்தார். |
14 | அந்நகர்களில் கைப்பற்றிய பொருள்களையும் கால்நடைகளையும் இஸ்ரயேலர் கொள்ளைப் பொருளாகக் கொண்டனர்.மனிதர்களை மட்டும், எவரும் தப்பாமல் அடியோடு அழியும்வரை, வாள்முனையில் கொன்றனர்: ஓர் உயிரையும் விட்டு வைக்கவில்லை. |
15 | தம் ஊழியர் மோசேக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி, மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தார்.யோசுவா அதன்படியே செய்தார்.ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டவை அனைத்திலும் யோசுவா ஒன்றையும் விட்டுவிடவில்லை. |
16 | யோசுவா இந்த எல்லா நாடுகளையும், மலைகளையும், நெகேபு அனைத்தையும், கோசேன் நாடு முழுவதையும், சமவெளிப் பகுதிகளையும், அராபாவையும், இஸ்ரயேல் மலைகளையும் அதன் சமவெளிப் பகுதிகளையும் கைப்பற்றினார். |
17 | ஆலாக்கு மலையிலிருந்து சேயிர் வரை உயர்ந்து செல்லும் எர்மோன் மலைக்குக்கீழ் லெபனோன் பள்ளத்தாக்கில் உள்ள பாகால்காது வரை இருந்த பகுதிகளைக் கைப்பற்றி, அவற்றின் அரசர்களைப் பிடித்து, வெட்டிக் கொன்றார். |
18 | யோசுவா அந்த அரசர்களுடன் நீண்டநாள் போர் புரிந்தார். |
19 | கிபயோன் குடிமக்களான இவ்வியரைத்தவிர வேறெந்த நகரினரும் இஸ்ரயேலருடன் நல்லுறவு கொள்ளவில்லை.எல்லோரையும் போரில் இஸ்ரயேலர் தோற்கடித்தனர். |
20 | இஸ்ரயேலருடன் போர் புரியுமாறு அவர்கள் இதயங்களை ஆண்டவர் கடினப்படுத்தினார்.அதனால் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டதுபோல் அவர்கள் இரக்கமின்றி அழிக்கப்பட்டனர். |
21 | இச்சமயம் யோசுவா சென்று, மலைநாடு, எபிரோன், தெபீர், அனாபு, யூதாவின் அனைத்து மலைப்பகுதிகள், இஸ்ரயேலின் அனைத்து மலைப்பகுதிகள் ஆகியவற்றிலிருந்த அனாக்கியரை அழித்தார்.அவர்களை அவர்களின் நகர்களுடன் யோசுவா முற்றிலும் அழித்தார். |
22 | இஸ்ரயேல் நாட்டில் அனாக்கியர் பெருமளவில் எஞ்சி இருக்கவில்லை.காசா, காத்து, அஸ்தோது ஆகிய இடங்களில் மட்டும் எஞ்சி இருந்தனர். |
23 | ஆண்டவர் மோசேக்குக் கூறிய அனைத்தின்படி, யோசுவா எல்லா நிலத்தையும் கைப்பற்றினார்.யோசுவா அதை அவர்கள் குலப் பிரிவுகளின்படி இஸ்ரயேலுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்.நாடு முழுவதும் போரின்றி அமைதிகண்டது. |