1 | உன் இனத்தவன் ஒருவனின் ஆடோ மாடோ வழிதவறித் திரிவதைக் கண்டும், அதைக் காணாதவன்போல் இருந்துவிடாதே.அதை உன் இனத்தானிடம் திருப்பிக் கொண்டு போ: |
2 | உனக்கு அடுத்திருப்பவன் உன்னிடமிருந்து வெகு தொலையில் இருந்தால், அல்லது அவன் யாரென்று நீ அறியாதிருந்தால், அதை உன் வீட்டுக்குள் கொண்டுபோய் உன்னோடு வைத்துக்கொள்.உனக்கு அடுத்திருப்பவன் அதைத் தேடி வரும்பொழுது அதை அவனிடம் திரும்பக் கொடு. |
3 | உனக்கு அடுத்திருப்பவனிடமிருந்து காணாமல் போன கழுதைக்கோ, ஆடைக்கோ வேறு எந்தப் பொருளுக்கோ அவ்விதமே செய்.நீ அவற்றைக் கண்டும் காணாதவன் போல் இருந்துவிடாதே. |
4 | உனக்கு அடுத்திருப்பவனின் கழுதையோ மாடோ வழியில் விழுந்து கிடப்பதைக் கண்டும் காணாதவன்போல் இருந்துவிடாதே.அதைத் தூக்கிவிட அவனுக்கு உதவிசெய். |
5 | ஆண்களின் ஆடைகளைப் பெண்கள் அணியலாகாது.பெண்களின் உடைகளை ஆண்கள் உடுத்தலாகாது.ஏனெனில் அப்படிச் செய்பவர்கள் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அருவருப்பானவர்கள். |
6 | வழியோரமாய், மரத்திலோ தரையிலோ, குஞ்சுகள் அல்லது முட்டைகள் உள்ள பறவைக்கூட்டையும், அந்தக் குஞ்சுகள் அல்லது முட்டைகள்மேல் தாய் உட்கார்ந்து கொண்டிருப்பதையும் கண்டால், குஞ்சுகளோடு தாயைப் பிடிக்காதே. |
7 | தாயைப் போகவிடு.குஞ்சுகளை உனக்கென எடுத்துக்கொள்.அப்போது உனக்கு நலமாகும்.நீ நெடுநாள் வாழ்வாய். |
8 | நீ புது வீட்டைக் கட்டும்போது உன் வீட்டு மாடியைச் சுற்றிக் கைப்பிடிச் சுவரைக் கட்டு.இல்லையெனில், ஒருவன் மாடியிலிருந்து விழுந்தால், விழுந்தவனின் இரத்தப்பழி உன் வீட்டின்மீது வரும். |
9 | திராட்சைத் தோட்டத்தில் வேறு விதைகளை விதைக்காதே.அப்படிச் செய்தால், நீ விதைத்தவற்றின் பயிரையும் திராட்சைத் தோட்டத்தின் பலனையும் தீட்டுப்படுத்துவாய். |
10 | மாட்டையும் கழுதையையும் பிணைத்து உழலாகாது. |
11 | ஆட்டுமயிரும் நூலும் கலந்து நெய்யப்பட்ட ஆடையை உடுத்தாதே. |
12 | உன்னை நீ மூடிக்கொள்ளும் மேற்போர்வையின் நான்கு மூலைகளிலும் தொங்கல்களை அமைத்துக்கொள். |
13 | ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவளோடு கூடியபின், அவளை வெறுத்து, |
14 | அவள் மீது அவதூறுசொல்லி, அவளது பெயரைக் கெடுத்து,”நான் இந்தப்பெண்ணை மணம் முடித்தேன்: ஆனால் அவளோடு உறவுகொண்டபோது, அவள் கன்னியல்ல என்று கண்டுகொண்டேன்” என்று கூறினால், |
15 | அப்பெண்ணின் தந்தையும் தாயும் அவளது கன்னிமையின் அடையாளத்தை எடுத்துக்கொண்டு, அவளை நகர் வாயிலுள்ள தலைவர்களிடம் கூட்டி வருவார்கள். |
16 | அப்போது, அப்பெண்ணின் தந்தை தலைவர்களிடம்,”என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன்: அவனோ அவளை வெறுக்கிறாள். |
17 | அத்தோடு,”உன் மகளிடம் கன்னிமையைக் காணவில்லை” என்று கூறி அவளைப் பற்றி அவதூறு சொல்லுகிறான்:”இதோ என் மகளின் கன்னிமைக்கான சான்று” என்று சொல்லுவான்.பின்பு அவர்கள் நகர்த் தலைவர்களின் முன்னர் அந்தத் துணியை விரிப்பார்கள். |
18 | அப்போது அந்நகர்த் தலைவர்கள் அம்மனிதனைப் பிடித்துத் தண்டிப்பார்கள். |
19 | பின்னர், அவனுக்கு நூறு வெள்ளிக் காசுகள் தண்டம் விதித்து, அதைப் பெண்ணின் தந்தையிடம் கொடுப்பார்கள்.ஏனெனில், இஸ்ரயேலின் கன்னி ஒருத்தியின் மேல் அவன் அவதூறு கூறியுள்ளான்.அவளே இவனுக்கு மனைவியாக இருப்பாள்.அவன் வாழ்நாள் முழுவதும் அவளைத் தள்ளிவிட முடியாது. |
20 | ஆனால், அப்பெண்ணிடம் கன்னிமை காணப்படவில்லை என்பது உண்மையானால், |
21 | அந்தப் பெண்ணை அவள் தந்தையின் வீட்டு வாயிலுக்கு வெளியே கொண்டுவந்து அவளது நகரின் மனிதர் அவளைக் கல்லால் எறிவர்.அவளும் சாவாள்.ஏனெனில், அவள் தன் தந்தையின் வீட்டிலிருக்கும்போதே வேசித்தனம் பண்ணி இஸ்ரயேலுக்கு இழுக்கானதைச் செய்தாள்.இவ்வாறு தீமையை உன்னிடமிருந்து அகற்று. |
22 | ஒரு மனிதன் மற்றொருவனுடைய மனைவியோடு படுத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால், அப்பெண்ணும் அப்பெண்ணோடு படுத்தவனும், இருவரும் சாவர்.இவ்வாறு இஸ்ரயேலிலிருந்து தீமையை அகற்று. |
23 | மணமாகியும் கன்னிமை கழியாத ஒருத்தியை நகரில் ஒருவன் சந்தித்து அவளோடு உறவுகொண்டால், |
24 | அவர்கள் இருவரையும் நகர் வாயிலுக்குக் கொண்டு போய்க் கல்லால் எறிவர்: அவர்களும் சாவர்.அவள் நகரில் இருந்தும் உதவிக்காகக் கூக்குரலிடாததாலும், அவன் மற்றொருவனின் மனைவியைக் கெடுத்ததாலும் அவர்கள் சாவர்.இவ்வாறு உன்னிடமிருந்து தீமையை அகற்று. |
25 | ஆனால், மணமாகியும் கன்னிமை கழியாத ஒருத்தியை வயல்வெளியில் ஒருவன் கண்டு அவளைப் பலவந்தமாகப் பிடித்து அவளோடு உறவுகொண்டால், அவளோடு உறவுகொண்ட அம்மனிதன் மட்டுமே சாகட்டும். |
26 | அந்தப் பெண்ணுக்கு ஒரு தீங்கும் செய்ய வேண்டாம்.சாவுக்கு ஏதுவான பாவம் எதுவும் அவள் செய்யவில்லை.தனக்கு அடுத்திருப்பவனை ஒருவன் தாக்கி அவனைக் கொல்வது போலத்தான் இதுவும். |
27 | ஏனெனில், அவன் அவளை வயல்வெளியில் மேற்கொண்டான்.மணமாகியும் கன்னிமை கழியாத அவள் கூக்குரலிட்டும் அவளைக் காப்பாற்ற எவரும் இல்லை. |
28 | மணமாகாத ஒரு கன்னிப் பெண்ணை ஒருவன் கண்டு, அவளைப் பலவந்தப்படுத்தி, அவளோடு உறவுகொண்டது கண்டுபிடிக்கப்பட்டால், |
29 | அப்பெண்ணின் தந்தைக்கு அவளோடு உறவு கொண்டவன் ஐம்பது வெள்ளிக்காசுகள் தரவேண்டும்.அவன் அவளைக் கெடுத்துவிட்டதால் அவளை மனைவியாக்கிக்கொள்ள வேண்டும்.அவன் வாழ்நாள் முழுவதும் அவளை மணமுறிவு செய்யமுடியாது. |
30 | எவனும் தன் தந்தையின் மனைவியோடு கூடலாகாது: தன் தந்தையின் படுக்கையை இழிபுபடுத்தலாகாது. |