1 | நீ உடைமையாக்கிக் கொள்ளும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் கொடுத்த மண்ணில் திறந்த வெளியில் ஒருவன் கொலையுண்டு கிடக்க, அவனைக் கொலைசெய்தவன் யாரென்று தெரியாதிருந்தால், |
2 | தலைவர்களும் நீதிபதிகளும் புறப்பட்டுப்போய், கொலையுண்டு கிடப்பவனைச் சுற்றிலுமுள்ள நகர்களுக்கு உள்ள தொலைவு எவ்வளவு என்று அளப்பார்களாக. |
3 | கொலையுண்டு கிடப்பவனுக்கு மிக அருகிலுள்ள நகர்த் தலைவர்கள், வேலையில் பழக்கப்படாததும் நுகத்தடியில் பிணைக்கப்படாததுமான ஓர் இளம் பசுவை மந்தையிலிருந்து பிடிப்பர். |
4 | பின்னர், உழப்படாததும் விதைக்கப்படாததும் நீரோடுவதுமான பள்ளத்தாக்கிற்கு அந்தக் கிடாரியை அந்நகர்த்தலைவர்கள் கொண்டுபோய், அந்தப் பள்ளத்தாக்கில் அதன் கழுத்தை முறிப்பர். |
5 | அப்பொழுது, தனக்கு ஊழியம் செய்யவும், ஆண்டவர் பெயரால் ஆசி வழங்கவும், உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்ட லேவியின் புதல்வர்களாகிய குருக்கள் முன்வர வேண்டும்.ஏனெனில், அவர்களது வாக்கின்படியே எல்லா வழக்குகளும் எல்லாத் தடியடிகளும் தீர்க்கப்படவேண்டும். |
6 | அப்போது கொலையுண்டவனுக்கு மிக அருகில் உள்ள நகர்த் தலைவர்கள் எல்லோரும் பள்ளத்தாக்கில் கழுத்து முறிக்கப்பட்ட கிடாரியின் மீது அவர்கள் கைகளைக் கழுவி, |
7 | உரத்துச் சொல்ல வேண்டியது:”எங்கள் கைகள் அந்த இரத்தத்தைச் சிந்தியதுமில்லை, எங்கள் கண்கள் அதைக் கண்டதுமில்லை. |
8 | ஆண்டவரே, நீர் மீட்ட உம் மக்களாகிய இஸ்ரயேலை மன்னித்தருளும்.குற்றமற்றவனின் இரத்தத்தைச் சிந்தினபழியை உம்மக்கள் இஸ்ரயேல்மேல் சுமத்தாதேயும்.இரத்தப் பழியிலிருந்து அவர்களை விடுவித்தருளும்.” |
9 | இவ்வாறு குற்றமற்றவனின் இரத்தத்தைச் சிந்தின பழியை உன்னிடமிருந்து நீக்கி விடுவாய்.ஏனெனில் ஆண்டவரின் முன்னிலையில் நேரியதைச் செய்துள்ளாய். |
10 | உன் பகைவர்களுக்கு எதிராகப் போர் புரியப்போகையில், உன் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உன் கையில் ஒப்படைப்பார்.நீ அவர்களைச் சிறைப்பிடிப்பாய். |
11 | அப்போது, சிறைப்பட்டவர்களில் அழகிய தோற்றமுடைய ஒரு பெண்ணைக் கண்டு, அவள்மேல் காதல்கொண்டு, அவளை உன் மனைவியாக்கிக்கொள்ள விரும்பினால், |
12 | அவளை உன் வீட்டுக்குள் அழைத்துக்கொண்டு போ.அவள் தன் தலையை மழித்து, நகங்களை வெட்டிக்கொள்வாள். |
13 | அவள் சிறைக் கைதியின் ஆடையைக் கழற்றிவிட்டு, உன்வீட்டில் தங்கி, ஒரு மாதகாலம் தன் தந்தையையும் தாயையும் நினைத்துத் துக்கம் கொண்டாடுவாள்.அதன்பின் நீ அவளோடு கூடி அவள் கணவனாவாய்: அவள் உனக்கு மனைவியாவாள். |
14 | அவள்மேல் உனக்கு விருப்பமில்லாமற் போனால், அவள் விருப்பம் போல் அவளைப் போகவிடு. நீ அவளைக் கெடுத்துவிட்டதால் பணத்துக்கு விற்கவோ அடிமைபோல் நடத்தவோ வேண்டாம். |
15 | இரண்டு மனைவியரைக் கொண்ட ஒருவன் ஒருத்தியின்மேல் விருப்பாகவும், மற்றவள்மேல் வெறுப்பாகவும் இருக்கும்போது, இருவருமே அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றிருக்கையில், வெறுக்கப்பட்ட பெண்ணின் புதல்வன் தலைப்பேறாக இருப்பானாயின், |
16 | அவன் தனக்குண்டான சொத்தைத் தன் புதல்வர்களுக்குப் பங்கிடும் நாளில், தலைச்சனுக்குரிய உரிமையைத் தலைச்சனாகிய வெறுக்கப்பட்ட பெண்ணின் புதல்வனுக்கன்றி, விரும்ப்பட்ட பெண்ணின் புதல்வனுக்குக் கொடுக்கக்கூடாது. |
17 | வெறுக்கப்பட்ட பெண்ணின் புதல்வனையே தலைச்சனாக ஏற்றுக் கொண்டு, தன்னிடம் உள்ள சொத்துக்களில் அவனுக்கு இரண்டு பங்கு கொடுக்க வேண்டும்.ஏனெனில் அவனே தன் தந்தையின் ஆற்றலது முதற் கனி.தலைச்சனுக்குரிய உரிமை அவனையே சாரும். |
18 | ஒருவனுடைய புதல்வன் பிடிவாதமும் முரட்டுத்தனமும் கொண்டவனாய், தந்தை சொல்லையோ தாய் சொல்லையோ கேளாமல், அவர்களால் தண்டிக்கப்பட்ட பின்பும் அடங்காமல் போனால், |
19 | தந்தையும் தாயும் அவனைப் பிடித்து, அவனது நகர் வாயிலுள்ள தலைவர்களிடம் கொண்டு போவர். |
20 | ”எங்கள் மகனாகிய இவன் பிடிவாதமும் முரட்டுத்தனமும் கொண்டவனாய் இருக்கிறான்: எங்கள் சொல் கேட்பதில்லை: பெருந்தீனிக்காரனும் குடிவெறியனுமாய் இருக்கிறான்” என்று நகர்த் தலைவர்களிடம் அவர்கள் சொல்ல வேண்டும். |
21 | உடனே, அந்நகரத்து மனிதர் எல்லோரும் அவனைக் கல்லால் எறிவர்: அவனும் செத்தொழிவான்.இவ்வாறு, உன்னிடமிருந்து தீமையை அகற்று.அதைக் கேட்டு இஸ்ரயேலர் எல்லோரும் அஞ்சுவர். |
22 | சாவுக்கு ஏதுவான பாவம் செய்த மனிதன் சாகடிக்கப்பட்டபின் அவனது பிணத்தை ஒரு மரத்திலே தொங்கவிடு, |
23 | ஆனால் அவன் பிணம் இரவில் மரத்தில் தொங்கக்கூடாது.அவனை நீ அன்றே அடக்கம் செய்ய வேண்டும்.ஏனெனில் தொங்கவிடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன்.நீயோ உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்கும் நாட்டைத் தீட்டுப் படுத்தாதே. |