1 | நீ உன் பகைவருக்கு எதிராகப் போருக்குப் போகையில், உன்னிடம் உள்ளதைவிட மிகுதியான குதிரைகளையும், தேர்களையும், பெரும் படையையும் நீ கண்டால், அவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஏனெனில், எகிப்திலிருந்து உன்னை வெளியே கூட்டிவந்த உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னோடு உள்ளார். |
2 | நீ போரிடத் தொடங்குமுன், குருக்கள் முன்வந்து வீரர்களிடம் கூற வேண்டியது: |
3 | “இஸ்ரயேலே கேள்! இன்று நீங்கள்உங்கள் பகைவர்களுக்கு எதிராகப் போர்புரிய முன்வந்துள்ளீர்கள்.உங்கள் இதயம் சோர்ந்து போக வேண்டாம்: அஞ்ச வேண்டாம்: கலங்க வேண்டாம்: அவர்களைப் பார்த்துத் தத்தளிக்கவும் வேண்டாம். |
4 | ஏனெனில், உங்களுக்காக உங்கள் பகைவருக்கு எதிராகப் போர்புரியவும், உங்களைக் காப்பாற்றவும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரே உங்களோடு செல்கிறார். |
5 | அதன்பின், படைத்தலைவர்கள் வீரர்களிடம் கூறவேண்டியது:”புது வீட்டைக் கட்டி, அதை அர்ப்பணம் செய்யாதவன் தன் வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும்.அவன் போரில் இறக்க நேரிட்டால், வேறு ஒருவன் அதை அர்ப்பணம் செய்ய வேண்டியிருக்கும். |
6 | திராட்சைத் தோட்டம் அமைத்து அதன் பயனை அனுபவிக்காதவன் தன் வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும்.அவன் போரில் இறக்க நேரிட்டால், வேறு ஒருவன் அதன் பயனை அனுபவிக்க வேண்டியிருக்கும். |
7 | ஒரு பெண்ணை மண உறுதிப்பாடு செய்தும் அவளோடு கூடி வாழாதவன் தன் வீட்டிற்குத் திரும்பிப் போகட்டும்.அவன் போரில் இறக்க நேரிட்டால் வேறு ஒருவன் அவளை மணக்க வேண்டியிருக்கும்.” |
8 | மீண்டும் படைத்தலைவர்கள் வீரர்களிடம் கூறவேண்டியது: உங்களில் அச்சமுற்று உள்ளம் சோர்ந்திருப்பவன் தன் வீட்டிற்குத் திரும்பிப் போகட்டும்.இல்லையெனில், அவன் தோழனும் அவனைப்போல் ஊக்கம் இழந்து விடுவான்.” |
9 | இவ்வாறு படைத்தலைவர்கள் வீரர்களிடம் பேசி முடித்தபின், அவர்களை நடத்திச் செல்லும் படைத்தளபதிகளை நியமிக்கட்டும். |
10 | ஒரு நகரோடு போரிட நீ அதை நெருங்கும் போது, அது சரணடையுமாறு முயற்சி செய். |
11 | அது சரணடைந்து, தன் வாயில்களை உனக்குத் திறந்தால், அதிலுள்ள மக்கள் எல்லாரும் உனக்கு அடிமைகளாகி உனக்குப் பணிவிடை செய்வர். |
12 | அது உன்னிடம் சரணடையாது உனக்கு எதிராகப் போர் தொடுத்தால், நீ அதை முற்றுகையிடு. |
13 | கடவுளாகிய ஆண்டவர் அதை உன்கையில் ஒப்படைக்கும்போது, அதிலுள்ள எல்லா ஆண்களையும் வாளால் கொன்றுவிடு. |
14 | ஆனால், பெண்களையும் சிறுவர்களையும், ஆடு மாடுகளையும் நகரிலுள்ள அனைத்தையும் உன் கொள்ளைப் பொருளாகக் கொள்.உன் கடவுளாகிய ஆண்டவர் எதிரியிடமிருந்து உனக்குக் கொடுத்துள்ள கொள்ளைப் பொருள்களை நீ அனுபவிக்கலாம். |
15 | இந்த நாடுகளைச் சாராத தொலையிலுள்ள எல்லா நகர்களுக்கும் அவ்வாறே செய்வாய். |
16 | ஆனால், இந்த மக்களின் நகர்களை உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்துள்ளதால், அதில் உயிர் வாழும் எதையும் கொல்லாபமல் விடாதே. |
17 | இத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், இவ்வியர் மற்றும் எபூசியர் அனைவரையும் உன் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டபடி அழித்தொழிப்பாய். |
18 | அதனால், தங்கள் தெய்வங்களுக்காகச் செய்கின்ற அருவருக்கத்தக்கவற்றை உனக்குக் கற்றுக்கொடுத்து, உன் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்ய உன்னைத் தூண்டமாட்டார்கள். |
19 | ஒரு நகருக்கு எதிராகப் போர் தொடுத்து நீ அதை நெடுநாள் முற்றுகையிட்டுக் கைப்பற்றினால், அதிலுள்ள மரங்களைக் கோடரியால் வெட்டி அழிக்காதே.நீங்கள் அவற்றின் பழங்களை உண்ணலாம்.ஆனால் அவற்றை வெட்டலாகாது.வயல்வெளி மரங்கள் உன்னை முற்றுகையிட வரும் மனிதர் அல்லவே! |
20 | உணவுக்கு உதவாத மரங்கள் என்று உனக்குத் தெரிபவற்றை மட்டும் வெட்டி அழிக்கலாம்.உன்னோடு போர் புரியும் நகருக்கு எதிராக அதை வீழ்த்தும்வரை அவற்றைக் கொண்டு முற்றுகைக் கொத்தளங்களை எழுப்பலாம். |