1 | ஊனமோ வேறு எந்தக் குறையோ உள்ள மாட்டையாவது ஆட்டையாவது உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலி செலுத்த வேண்டாம்.ஏனெனில், அதை உன் கடவுளாகிய ஆண்டவர் வெறுக்கிறார். |
2 | கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கிற நகர்கள் ஒன்றில், ஓர் ஆண் அல்லது பெண், உன் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கையை மீறி, அவருக்கு எதிராகக் குற்றம் செய்வதாக உனக்குத் தெரிந்தால், |
3 | நான் கட்டளையிட்டதற்கு எதிராக, வேற்றுத் தெய்வங்கள் அல்லது நிலா, கதிரவன் அல்லது வேறு யாதொரு வான் கோளங்களைப் பின்சென்று, பணிந்து வணங்கினால் |
4 | அது பற்றி உனக்குச் சொல்லப்படும் போது அல்லது நீ கேள்விப்படும் போது அதை நீ நன்கு விசாரி.அது உண்மை எனவும் அத்தகைய அருவருப்பான செயல் இஸ்ரயேலில் நடந்தது உறுதி எனவும் நீ கண்டால், |
5 | அக்குற்றத்தைச் செய்த ஆணையோ பெண்ணையோ உன் நகர வாயிலுக்குக் கூட்டிச் சென்று அவனை அல்லது அவளைக் கல்லால் எறிந்து கொல். |
6 | இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தை முன்னிட்டே, குற்றவாளி கொலை செய்யப்பட வேண்டும்.ஒரே சாட்சியின் வாக்குமூலத்தை முன்னிட்டு எவரும் கொலை செய்யப்படலாகாது. |
7 | முதலில் சாட்சிகளின் கைகளும் பின்னர் எல்லா மக்களின் கைகளும் கொல்லப்பட வேண்டியவனுக்கு எதிராக ஓங்கட்டும்.இவ்வாறு உன்நடுவிலிருந்து தீமையை அகற்றுவாய். |
8 | இரத்தப் பழிகளைக் குறித்தோ, உரிமை வழக்குகளைக் குறித்தோ, தடியடியைக் குறித்தோ தீர்ப்புக் கூறுவது கடினமாய் இருந்தால் அல்லது உன் நகரிலுள்ள வேறு எந்த வழக்கும் சிக்கலானதாக இருந்தால், நீ எழுந்து உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொள்ளும் இடத்திற்குச் செல். |
9 | அங்கு, லேவியரான குருக்களிடத்திலும் அன்றைய நாளின் நீதிபதிகளிடமும் அறிவுரை கேள்.நியாயத் தீர்ப்பை அவர்கள் உனக்குத் தெரிவிப்பார்கள். |
10 | ஆண்டவர் தேர்ந்துகொள்ளும் இடத்திலிருந்து அவர்கள் உனக்குத் தெரிவிப்பதன்படி நட.அவர்கள் கற்பித்தபடி எல்லாம் செயல்படுவதில் கருத்தாயிரு. |
11 | அவர்கள் உனக்குக் கற்பித்த சட்டங்களின்படியும், அவர்கள் உனக்குத் தெரிவித்த தீர்ப்பின்படியும் செயல்படு.அவர்கள் உனக்குத் தெரிவித்த தீர்ப்பினின்று இடமோ வலமோ பிறழாதே. |
12 | கடவுளாகிய ஆண்டவருக்கு ஊழியம் புரிய அங்கே நிற்கும் குருக்களுக்கோ நீதிபதிகளுக்கோ செவிகொடாமல் செருக்குடன் செயல்படுகிறவன் சாகவேண்டும்.இவ்வாறு இஸ்ரயேலிலிருந்து தீமையை அகற்றுவாய். |
13 | எல்லா மக்களும் அதைக் கேட்டு, அஞ்சுவர்: எவரும் செருக்குடன் செயல்படார். |
14 | கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கப்போகும் நாட்டுக்குள் சென்று அதை உடைமையாக்கி அதில் குடியேறியபின், என்னைச் சுற்றிலுமுள்ள எல்லா வேற்றினத்தாரையும் போல, நானும் எனக்கு ஓர் அரசனை ஏற்படுத்துவேன்” என்று நீ சொல்வாய். |
15 | அப்போது உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் ஒருவனையே உன் அரசனாக ஏற்படுத்துவாய்.உன் இனத்தான் ஒருவனையே உன் அரசனாக்குவாய்.உன் இனத்தான் அல்லாத அன்னியன் ஒருவனை உனக்கு அரசனாக நியமிக்காதே. |
16 | அவன் தனக்கெனக் குதிரைகளை மிகுதியாக்கிக் கொள்ளாமலும், குதிரைகளை மிகுதியாக்கிக்கொள்ளும் பொருட்டு மக்களை மீண்டும் எகிப்துக்குப் போகச் சொல்லாமலும் இருக்கட்டும்.ஏனெனில், இனி அந்த வழியாகத் திரும்பவும் செல்லக்கூடாதென ஆண்டவர் உங்களுக்குச் சொல்லியுள்ளார். |
17 | அவன் இதயம் ஆண்டவரைவிட்டு விலகாதிருக்க வேண்டுமானால், பல மனைவியரைக் கொள்ளலாகாது: வெள்ளியும் பொன்னும் அளவுமீறிச் சேர்க்கலாகாது. |
18 | அவன் தன் அரசுக் கட்டிலில் அமர்ந்தபின், லேவியராகிய குருக்கள் பொறுப்பிலுள்ள இச்சட்ட நூலின் நகல் ஒன்றைத் தனக்கென ஓர் ஏட்டில் எழுதிக் கொள்ளட்டும். |
19 | அதைத் தன்னோடு வைத்துக்கொள்ளட்டும்.அதை நாள்தோறும் அவன் வாழ்நாள் முழுவதும் வாசிக்கட்டும்.அதனால், அந்தச் சட்டத்தின் எல்லா வார்த்தைகளையும், அதன் நீதிமுறைகளையும் நிறைவேற்றுதவன் மூலம் அவன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நடக்கக் கற்றுக் கொள்வான். |
20 | அதனால், அவன் இதயத்தில் இறுமாப்புக்கொண்டு, தன் சகோதரருக்கு மேல் தன்னை உயர்த்திக் கொள்ளாமலும், கட்டளைகளிலிருந்து வலமோ இடமோ பிறழாமலும் இருப்பான்.அப்போது அவனும் அவன் புதல்வர்களும் இஸ்ரயேலில் நெடுநாள் ஆட்சி புரிவர். |