1 | லேவிய குருக்களுக்கும் அனைத்து லேவிய குலத்தாருக்கும் இஸ்ரயேல் மக்களிடையே பங்கும் சொத்துரிமையும் இல்லை.ஆண்டவருக்கெனச் செலுத்தப்படும் எரிபலிகளையும் அவருக்கே உரியவைகளையும் அவர்கள் உண்பார்கள். |
2 | அவர்கள் சகோதரர்கள் நடுவே அவர்களுக்கு உரிமைச்சொத்து இல்லாதிருக்கட்டும்.ஆண்டவர் அவர்களுக்கு வாக்களித்தபடி அவரே அவர்களின் உரிமைச் சொத்து. |
3 | மக்களிடமிருந்து குருக்களுக்குச் சேரவேண்டிய உரிமம் ஆவது: பலியிட வருவோர் பலியிடப்படும் ஆடு, மாடு இவற்றின் முன்னந்தொடை, தாடைகள், இரைப்பை ஆகியவற்றைக் குருவுக்குக் கொடுக்க வேண்டும். |
4 | தானியம், திராட்சை இரசம், எண்ணெய் இவற்றின் முதற்பலனையும், கத்தரித்த ஆட்டு மயிரின் முதற்பங்கையும் அவனுக்குக் கொடுக்க வேண்டும். |
5 | ஏனெனில், அவனும் அவன் புதல்வர்களும் உன் கடவுளாகிய ஆண்டவர் பெயரால் அவர் முன்னிலையில் என்றென்றும் ஊழியம் செய்யும்படி அவர் அவனை உங்களது குலங்கள் அனைத்திலிருந்தும் தேர்ந்து கொண்டார். |
6 | இஸ்ரயேலில் பரவியுள்ள யாதொரு நகரில் வாழும் ஒரு லேவியன் அங்கிருந்து புறப்பட்டு ஆண்டவர் தேர்ந்துகொள்ளும் இடத்திற்கு விரும்பி வந்தால், |
7 | அங்கே ஆண்டவரின் முன்னிலையில் ஊழியம் செய்யும் லேவியராகிய தன் சகோதரரைப் போல, அவனும் கடவுளாகிய ஆண்டவர் பெயரால் ஊழியம் செய்வான். |
8 | அவன் தன் தந்தைவழிச் சொத்தில் வரவேண்டியதை அனுபவிப்பதுமின்றி, தன் ஊழியத்திற்கான பங்கையும் உணவுக்காகப் பெற்றுக்கொள்ளட்டும். |
9 | கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டுக்குள் போனபின், அந்த வேற்றினத்தாரின் அருவருப்பான செயல்களைக் கற்றுக் கொள்ளாதே. |
10 | தன் புதல்வனை அல்லது புதல்வியைத் தீ மிதிக்கச் செய்கிறவனும், குறி சொல்கிறவனும், நாள் பார்க்கிறவனும், சகுனங்களை நம்புகிறவனும், சூனியக்காரனும், |
11 | மந்திரவாதியும், ஏவிவிடுகிறவனும், மாயவித்தைக்காரனும், இறந்தவர்களிடம் குறிகேட்கிறவனும் உங்களிடையே இருத்தலாகாது. |
12 | ஏனெனில், இவற்றையெல்லாம் செய்கிறவன் ஆண்டவருக்கு அருவருப்பானவன்.இப்படிப்பட்ட அருவருப்பான செயல்களின் நிமித்தம், உன் கடவுளாகிய ஆண்டவர் உன் முன்னிலையினின்று அவனைத் துரத்திவிடுவார். |
13 | கடவுளாகிய ஆண்டவருக்கு நீ முற்றிலும் உண்மையாய் இரு. |
14 | ஏனெனில், நீ துரத்திவிடவிருக்கும் இந்த வேற்றினத்தார் குறிசொல்லுகிறவர்களுக்கும், நாள் பார்க்கிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்.அவ்வாறு செயல்பட உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை அனுமதிக்கவில்லை. |
15 | கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப்போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார்.நீ அவருக்குச் செவிகொடு. |
16 | ஓரேபில் திருப்பேரவை கூடிய நாளில், நீ உன் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடி, “நான் இறந்து போகாதபடி, என் கடவுளாகிய ஆண்டவரின் குரலொலியை இனி நான் கேட்காமலும் இப்பெரும் நெருப்பை இனி நான் காணாமலும் இருப்பேனாக” என்று விண்ணப்பித்தபோது, |
17 | ஆண்டவர் என்னைநோக்கி, “அவர்கள் சொன்னதெல்லாம் சரி” என்றார். |
18 | உன்னைப்போல் ஓர் இறைவாக்கினனை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன்.என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன்.நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான். |
19 | என்பெயரால் அவன் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவனை நான் வேரறுப்பான். |
20 | ஆனால், ஓர் இறைவாக்கினன் எனது பெயரால் பேசுவதாக எண்ணிக்கொண்டு, நான் அவனுக்குக் கட்டளையிடாதவற்றைப் பேசினால், அல்லது வேற்றுத் தெய்வங்களின் பெயரால் பேசினால், அந்த இறைவாக்கினன் சாவான். |
21 | ”ஆண்டவர் சொல்லாத வார்த்தை இன்னதென்று எப்படி நான் அறிவது?” என்று நீ உன் மனத்தில் எண்ணலாம். |
22 | ஓர் இறைவாக்கினன் ஆண்டவரின் பெயரால் உரைப்பது நடைபெறாமலும் நிறைவேறாமலும் போனால், அந்த இறைவாக்கினன் தன் எண்ணப்படியே பேசுபவன்.அவனுக்கு நீ அஞ்ச வேண்டியதில்லை. |