1 | பண்புகெட்ட இனமே! பகுத்தறிவோடு நடந்துகொள். |
2 | பதரைப்போல் நீங்கள் தூற்றப்படுமுன்னே, ஆண்டவரது கடும் சினம் உங்கள் மேல் விழுமுன்னே, ஆண்டவரது சினத்தின் நாள் உங்கள்மேல் விழுமுன்னே, |
3 | நாட்டிலிருக்கும் எளியோரே! ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடிப்போரே! அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள்: நேர்மையை நாடுங்கள்: மனத்தாழ்மையைத் தேடுங்கள்: ஆண்டவரது சினத்தின் நாளில் ஒரு வேளை உங்களுக்குப் புகலிடம் கிடைக்கும். |
4 | காசா குடியற்றுப்போகும்: அஸ்கலோன் பாழடைந்துபோகும்: அஸ்தோது நண்பகலில் விரட்டியடிக்கப்படும்: எக்ரோன் வேரொடு பிடுங்கியெறியப்படும். |
5 | கடற்கரையில் வாழும் இனத்தாராகிய கெரேத்தியரே! உங்களுக்கு ஐயோ கேடு! ஆண்டவரின் வாக்கு உங்களுக்கு எதிராய் உள்ளது: பெலிஸ்தியரின் நாடே! கானானே! எவனும் குடியிராதபடி நான் உன்னை அழித்து விடுவேன். |
6 | இவ்வாறு அந்தக் கடற்கரை நாடு இடையரின் குடில்களுக்கும் ஆடுகளின் பட்டிகளுக்குமே ஏற்றதாகும். |
7 | அந்தக் கடற்கரை யூதாவின் குடும்பத்தவருள் எஞ்சியிருப்போர்க்கு உடைமையாகும்: அங்கே அவர்கள் தங்கள் ஆடுகளை மேய்த்து, மாலையில் அஸ்கலோன் வீடுகளில் படுத்திருப்பார்கள்: ஏனெனில் அவாகளுடைய கடவுளாகிய ஆண்டவர் அவர்கள்மீது அக்கறை கொண்டு, முன்னைய நன்னிலைக்கு அவர்களை உயர்த்துவார். |
8 | மோவாபின் பழிப்புரைகளையும் அம்மோனியரின் வசைமொழிகளையும் நான் கேட்டேன்: அவர்கள் என் மக்களை இழித்துரைத்து, அவர்களின் நாட்டு எல்லைகளைக் குறித்து வீம்பு பேசியதையும் நான் கேட்டேன். |
9 | ஆதலால், படைகளின் ஆண்டவரும், இஸ்ரயேலின் வாழும் கடவுளுமாகிய நான் ஆணையிட்டுக் கூறுகின்றேன்: மோவாபு சோதோமைப்போல் ஆகும்: அம்மோனியர் கொமோராவைப்போல் ஆவர்: இது உறுதி. இந்நாடுகள் காஞ்சொறி படரும் காடாகவும், உப்புப் பள்ளம் நிறைந்த பாழ்நிலமாகவும் என்றும் இருக்கும். என் மக்களில் எஞ்சியோர் அவர்களைக் கொள்ளையடிப்பர்: என் மக்களுள் தப்பியோர் அவர்களை அடிமைகளாக்கிக் கொள்வர். |
10 | அவர்களுடைய இறுமாப்புக்குக் கிடைக்கும் பயன் இதுவே: ஏனெனில், படைகளின் ஆண்டவருடைய மக்களுக்கு எதிராக அவர்கள் பழித்துரைத்தார்கள்: வீம்பு பேசினார்கள். |
11 | ஆண்டவர் அவர்களை அச்சமுறச் செய்வார்: நாட்டின் தெய்வங்களை எல்லாம் ஆற்றல் குன்றிப்போகச் செய்வார். வேற்றினத்தார் அனைவரும் அவரவர்தம் தீவுகளில் இருந்து கொண்டு அவரையே வணங்குவர். |
12 | எத்தியோப்பியரே! நீங்களும் எனது வாளால் வெட்டி வீழ்த்தப்படுவீர்கள். |
13 | வடதிசைக்கு எதிராகத் தம் கையை ஓங்கி, ஆண்டவர் அசீரியாவை அழித்திடுவார்: நினிவே நகரைப் பாழடையச் செய்து, வறண்ட பாலைநிலமாக்குவார். |
14 | அங்கே மந்தைகளும் எல்லாவகை விலங்குகளும் படுத்துக் கிடக்கும்: தூண்களின் உச்சியில் கூகையும் சாக்குருவியும் தங்கியிருக்கும்: பலகணியில் அமர்ந்தவாறு ஆந்தை அலறும்: நிலைக்கதவின்மேல் இருந்தவாறு காகம் கரையும்: கேதுரு மர வேலைப்பாடுகள் அழிக்கப்படும். |
15 | “நான் ஒப்புயர்வு அற்றவன்” என்ற கவலையின்றிக் களிப்புற்றிருந்த நகர் இதுதானோ? இப்பொழுது அது காட்டு விலங்குகளின் குகையாகி எவ்வளவு பாழாய்ப் போயிற்று! அதைக் கடந்துகோகும் ஒவ்வொருவனும் சீழ்க்கையடித்துக் கையசைக்கிறான். |