1 | ஆமோனின் மகன் யோசியா யதாவின் அரசனாய் இருந்தபொழுது செப்பனியாவுக்கு ஆண்வரின் வாக்கு அருளப்பட்டது. இவர் எசேக்கியாவின் கொள்ளுப் பேரனும் அமரியாவின் பேரனும் கெதலியாவின் மகனுமான கூசியாவின் மைந்தர் ஆவார். |
2 | “மண்ணுலகில் எதுவும் இராதவாறு |
3 | அனைத்தையும் அழித்துவிடுவேன், “ என்கிறார் ஆண்டவர். “மனிதரையும் விலங்குகளையும் அழிப்பேன்: வானத்துப் பறவைகளையும் கடல் மீன்களையும் ஒழிப்பேன்: கொடியவர்களை இடறிவிழச் செய்வேன்: மனித இனம் மண்ணுலகில் இல்லாதவாறு அற்றுப் போகச் செய்வேன்,” என்கிறார் ஆண்டவர். |
4 | யூதாவுக்கும் எருசலேமில் வாழும் அனைவர்க்கும் எதிராக நான் கையை ஓங்குவேன். பாகால் வழிபாட்டில் எஞ்சியிருப்பதையும் அந்தச் சிலை வழிபாட்டு அர்ச்சகர்களின் பெயரையும் அழித்து விடுவேன். |
5 | வீட்டின் மேல்தளத்திலிருந்து வான் படைகளை வணங்குவோரையும், ஆண்டவரை வணங்கி அவர் பெயராலும் மில்க்கோம் தெய்வத்தின் பெயராலும் ஆணையிடுவோரையும் ஒழித்து விடுவேன். |
6 | ஆண்டவரைவிட்டு விலகிச் செல்வோரையும் ஆண்டவரைத் தேடாது, அவரை அறிய முயலாது இருப்போரையும் அழித்துவிடுவேன். |
7 | தலைவராகிய ஆண்டவர் திருமுன் மௌனமாயிருங்கள்: ஏனெனில் ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது: பலி ஒன்றை ஆண்டவர் ஏற்பாடு செய்துள்ளார்: தாம் அழைத்தவர்களை அவர் புனிதப்படுத்தியுள்ளார் |
8 | ஆண்டவரது பலியின் நாளில் தலைவர்களையும் வெளிநாட்டு ஆடை அணிந்துள்ள அனைவரையும் தண்டிப்பேன். |
9 | வாயிற்படியை மிதிக்காமல் தாண்டி வந்து, தங்கள் தலைவனின் வீட்டை வன்செயலாலும் வஞ்சனையாலும் நிரப்புகிறவர்களை அந்நாளில் தண்டிப்பேன். |
10 | ஆண்டவர் கூறுகின்றார்: “அந்நாளில் எருசலேமின் மீன் வாயிலிருந்து கூக்குரலும், புதிய நகர்ப் பகுதியிலிருந்து புலம்பலும், குன்றுகளிலிருந்து இடிந்துவிழும் பேரொலியும் கேட்கும். |
11 | நகரின் கீழ்ப்பகுதியில் குடியிருப்போரே! கதறி அழுங்கள்: ஏனெனில், வணிகர் அனைவர்க்கும் அழிவு வருகின்றது: பணம் படைத்தவர் அனைவரும் வெட்டி வீழ்த்தப்படுகின்றனர்: |
12 | அக்காலத்தில், நான் கையில் விளக்கேந்திக் கொண்டு எருசலேமைச் சோதித்துப் பார்ப்பேன்: 'ஆண்டவர் நன்மையும் செய்யார்: தீமையும் செய்யார்' என்று தங்கள் உள்ளங்களில் சொல்லிக் கொண்டு பஞ்சணையில் சாய்ந்து கொழுத்திருப்போரைத் தண்டிப்பேன். |
13 | அவர்களுடைய உடைமைகள் கொள்ளையடிக்கப்படும்: வீடுகள் பாழாக்கப்படும்: அவர்கள் வீடுகள் கட்டிக்கொள்வார்கள்: ஆனால் அவற்றில் குடியிருக்கப்போவதில்லை: திராட்சைத் தோட்டங்களைப் பயிர் செய்தாலும், அவற்றின் இரசத்தைக் குடிக்கப் போவதில்லை.” |
14 | ஆண்டவரின் மாபெரும் நாள் அண்மையில் உள்ளது: அது விரைந்து நெருங்கிக் கொண்டிருக்கிறது: ஆண்டவரது நாளின் பேரொலி கசப்பை உண்டாக்கும்: மாவீரனையும் கலங்கி அலறும்படி செய்யும். |
15 | அந்த நாள் கடும் சினத்தின் நாள்: துன்பமும் துயரமும் நிறைந்த நாள்: பேரழிவும் பேரிழப்பும் கொண்டு வரும் நாள்: இருட்டும் காரிருளும் கவிந்த நாள்: |
16 | அரண்சூழ் நகர்களுக்கும் உயரமான கொத்தளங்களுக்கும் எதிராக எக்காளமும் போர் முழக்கமும் கேட்கும் நாள். |
17 | மானிடர்மேல் துன்பம் வரச்செய்வேன்: பார்வையற்றோர்போல் அவர்கள் தடுமாறுவர்: ஏனெனில் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தனர்: அவர்களது இரத்தம் புழுதி போல் கொட்டப்படும்: சதைப்பிண்டம் சாணம்போல் எறியப்படும். |
18 | ஆண்டவரது சினத்தின் நாளில், அவர்களது வெள்ளியும் பொன்னும் அவர்களைக் காப்பாற்றா. உலகம் முழுவதும் அவரது வெஞ்சினத் தீக்கு இரையாகும். உலகில் வாழும் அனைவரையும் அவர் நொடிப்பொழுதில் முற்றிலும் அழித்துவிடுவார். |