1 | உன்னைச் சிதறடிப்பவன் உனக்கு எதிராய் வருகின்றான்: கோட்டை மதில்களில் வீரர்களை நிறுத்து: வழிகளில் காவலர்களை அமர்த்து: உம் இடையே வரிந்து கட்டிக்கொள்: உன் படை வலிமையை மிகுதிப்படுத்து. |
2 | இஸ்ரயேலின் மேன்மை போலவே யாக்கோபின் மேன்மையை ஆண்டவர் மீண்டும் நிலைநாட்டுகின்றார்: கொள்ளைக்காரர்கள் அவர்களைக் கொள்யையடித்தனர்: அவர்களின் திராட்சைக் கொடிகளையும் அழித்துப்போட்டனர். |
3 | எதிரியுடைய வீரர்களின் கேடயங்கள் சிவப்பானவை: அவனுடைய போர்வீரர் செந்நிற ஆடை உடுத்தியுள்ளனர்: போர் அணியில் இயங்கும் தேர்ப்படையிலிருந்து தீப்பொறி பறக்கின்றது: குதிரைகள் போருக்குத் துடிக்கின்றன. |
4 | வெறிபிடித்தவனைப்போல் தேர்கள் தெருக்களில் ஓடுகின்றன: திறந்த வெளியில் அவை அங்குமிங்குமாய் விரைகின்றன: தீப்பந்தங்களைப்போலச் சடர்விடுகின்றன: மின்னலைப்போலப் பாய்கின்றன. |
5 | படைத்தலைவர்கள் அழைக்கப்படுகின்றார்கள்: அவர்கள் செல்லும்போது இடறுகின்றார்கள்: கோட்டை மதில் நோக்கி விரைந்தோடுகின்றார்கள்: காப்புக் கருவி அமைத்தாயிற்று. |
6 | ஆறுகளின் மதகுகள் திறந்துவிடப்பட்டன. அரண்மனை இடிந்து கரைந்தது. |
7 | அரசி அணிகள் களையப்பெற்று நாடு கடத்தப்படுகின்றாள்: அவளுடைய பணிப்பெண்கள் புறாக்களைப்போலப் பெருமூச்செறிந்து, மாரடித்துப் புலம்பகின்றார்கள். |
8 | உடைத்துக்கொண்ட குளம்போல ஆனது நினிவே நகர்: “நில்லுங்கள், நில்லுங்கள்!” என அவர்கள் அலறுகிறார்கள்: ஆனால் எவனும் திரும்பிப் பார்க்கிறதில்லை. |
9 | வெள்ளியைக் கொள்ளையடியுங்கள்: பொன்னைக் கவர்ந்து கொள்ளுங்கள்: கருவூலங்கள் மிகப்பெரியவை: அங்குள்ள விலையுயர்ந்த பொருள்களுக்கு அளவே இல்லை. |
10 | வெறுமை! பாழ்! அழிவு! உள்ளம் சோர்ந்துவிட்டது: கால்கள் தள்ளாடுகின்றன: திகில் அனைவரையும் முற்றிலும் ஆட்கொள்கிறது: முகங்ளெல்லாம் வெளிறிப் போகின்றன. |
11 | சிங்கங்களின் குகை எங்கே? சிங்கக் குட்டிகள் உலாவும் உறைவிடம் எங்கே? அச்சமின்றி இருந்த தன் குட்டிகளுக்கு அது இரை தேடிக்கொணர்ந்து போட்ட இடம் இதுவன்றோ? |
12 | சிங்கம் தன் குட்டிகளுக்கும் பெண் சிங்கத்திற்கும் தேவையான அளவு இரையைப் பீறிக் கிழித்து, இரையினால் தன் உறைவிடங்களையும், கிழித்த சதையால் தன் குகைகளையும் நிரப்பிற்று. |
13 | இதோ! படைகளின் ஆண்டவர் கூறுகிறார்: உனக்கு எதிராக நான் எழும்புவேன்: உன் தேர்களைச் சுட்டுச் சாம்பலாக்குவேன்: உன் இளம் சிங்கங்கள் வாளுக்கு இரையாகும்: நாட்டில் உனக்கு இரை இல்லாதபடி செய்வேன்: உன் தூதர்களின் குரலை இனி யாரும் கேட்கமாட்டார்கள். |