வேதாகமத்தை வாசி

மீகா 7

                   
புத்தகங்களைக் காட்டு
1ஐயோ! நான் கோடைக்காலக் கனிகளைக் கொய்வதற்குச் சென்றவனைப் போலானேன்: திராட்சை பறித்து முடிந்தபின் பழம் பறிக்கச் சென்றவனைப் போலானேன்: அப்பொழுது தின்பதற்கு ஒரு திராட்சைக் குலையும் இல்லை: என் உள்ளம் விரும்பும் முதலில் பழுத்த அத்திப் பழம்கூட இல்லை:
2நாட்டில் இறைப்பற்றுள்ளோர் அற்றுப்போனார்: மனிதருள் நேர்மையானவர் எவருமே இல்லை. அவர்கள் அனைவரும் இரத்தப் பழிவாங்கப் பதுங்கிக் காத்திருக்கின்றனர்: ஒருவர் ஒருவரைப் பிடிக்கக் கண்ணி வைத்து வேட்டையாடுகின்றனர்.
3தீமை செய்வதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள்: தலைவனும் நீதிபதியும் கையூட்டுக் கேட்கின்றனர்: பெரிய மனிதர் தாம் விரும்பியதை வாய்விட்டுக் கூறுகின்றனர்: இவ்வாறு நெறிதவறி நடக்கின்றனர்.
4அவர்களுள் சிறந்தவர் முட்செடி போன்றவர்! அவர்களுள் நேர்மையாளர் வேலிமுள் போன்றவர்! அவர்களுடைய காவலர்கள் அறிவித்த தீர்ப்பின் நாள் வந்துவிட்டு: இப்பொழுதே அவர்களுக்குத் திகில்.
5அடுத்திருப்பவன்மீது நம்பிக்கை கொள்ளவேண்டாம்: தோழனிடத்திலும் நம்பிக்கை வைக்க வேண்டாம். உம் மார்பில் சாய்ந்திருக்கிற மனைவி முன்பும் உன் வாய்க்குப் பூட்டுப்போடு!
6ஏனெனில், மகன் தன் தந்தையை அவமதிக்கின்றான்: மகள் தன் தாய்க்கு எதிராக எழும்புகின்றாள், மருமகள், தன் மாமியாரை எதிர்க்கின்றாள்: ஒருவரின் பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர்.
7நானோ, ஆண்டவரை விழிப்புடன் நோக்கியிருப்பேன்: என்னை மீட்கும் என் கடவுளுக்காகக் காத்திருப்பேன். என் கடவுள் எனக்குச் செவிசாய்த்தருள்வார்.
8என் பகைவனே, என்னைக் குறித்துக் களிப்படையாதே: ஏனெனில், நான் வீழ்ச்சியுற்றாலும் எழுச்சிபெறுவேன். நான் இருளில் குடியிருந்தாலும் ஆண்டவர் எனக்கு ஒளியாய் இருப்பார்.
9நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தேன்: ஆதலால், அவரது கடும் சினத்தை, அவர் எனக்காக வழக்காடி எனக்கு நீதி வழங்கும்வரை, தாங்கிக்கொள்வேன்: அவர் என்னை ஒளிக்குள் கொண்டு வருவார்: அவரது நீதியை நான் காண்பேன்.
10அப்போது, என்னோடு பகைமைகொண்டவர்கள் அதைக் காண்பார்கள்: “உன் கடவுளாகிய ஆண்டவர் எங்கே?” என்று என்னிடம் கேட்டவள் வெட்கம் அடைவாள்: என் கண்கள் அவளைக் கண்டு களிகூரும். அப்பொழுது, தெருச் சேற்றைப்போல அவள் மிதிபடுவாள்.
11உன் மதில்களைத் திரும்பக் கட்டும் நாள் வருகின்றது: அந்நாளில், நாட்டின் எல்லை வெகு தொலைவிற்கு விரிந்து பரவும்.
12அந்நாளில், அசீரியாவிலிருந்து எகிப்திலுள்ள நகர்கள் வரை, எகிப்திலிருந்து பேராறு வரை, ஒரு கடல்முதல் மறுகடல் வரை, ஒரு மலைமுதல் மறு மலைவரை உள்ள மக்கள் அனைவரும் உன்னிடம் திரும்புவார்கள்.
13நிலவுலகம் அங்குக் குடியிருப்போரின் செயல்களின் விளைவால் பாழடைந்து போகும்.
14ஆண்டவரே, உமது உரிமைச் சொத்தாய் இருக்கும் மந்தையாகிய உம்முடைய மக்களை உமது கோலினால் மேய்த்தருளும்! அவர்கள் கர்மேலின் நடுவே காட்டில் தனித்து வாழ்கின்றார்களே! முற்காலத்தில் நடந்ததுபோல அவர்கள் பாசானிலும் கிலயாதிலும் மேயட்டும்!
15எகிப்து நாட்டிலிருந்து நீங்கள் புறப்பட்டுவந்து நாளில் நடந்ததுபோல நான் அவர்களுக்கு வியத்தகு செயல்களைக் காண்பிப்பேன்.
16வேற்றினத்தார் இதைப் பார்த்துத் தங்கள் ஆற்றல் அனைத்தையும் குறித்து நாணமடைவர்: அவர்கள் தங்கள் வாயைக் கையால் மூடிக்கொள்வார்கள்: அவர்களுடைய காதுகள் செவிடாய்ப் போகும்.
17அவர்கள் பாம்பைப் போலவும் நிலத்தில் ஊர்வன போலவும் மண்ணை நக்குவார்கள்: தங்கள் எல்லைக் காப்புகளில் இருந்து நடுநடுங்கி வெளியே வருவார்கள்: நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அஞ்சி நடுங்குவார்கள். உமக்கே அவர்கள் அஞ்சுவார்கள்.
18உமக்கு நிகரான இறைவன் யார்? எஞ்சியிருப்போரின் குற்றத்தைப் பொறுத்து நீர் உமது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரின் தீச்செயலை மன்னிக்கின்றீர்: உமக்கு நிகரானவர் யார்? அவர் தம் சினத்தில் என்றென்றும் நிலைத்திரார்: ஏனெனில், அவர் பேரன்புகூர்வதில் விருப்பமுடையவர்:
19அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்: நம் தீச்செயல்களை மிதித்துப்போடுவார்: நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார்.
20பண்டைய நாளில் எங்கள் மூதாதையருக்கு நீர் ஆணையிட்டுக் கூறியதுபோல யாக்கோபுக்கு வாக்குப் பிறழாமையையும் ஆபிரகாமுக்குப் பேரன்மையும் காட்டியருள்வீர்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.