வேதாகமத்தை வாசி

மீகா 6

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்: நீ எழுந்து, மலைகளுக்கு முன்னிலையில் உன் வழக்கைச் சொல்: குன்றுகள் உன் குரல் ஒலியைக் கேட்கட்டும்.
2மலைகளே, மண்ணுலகின் நிலையான அடித்தளங்களே, ஆண்டவரின் வழக்கைக் கேளுங்கள்: ஆண்டவருக்குத் தம் மக்களோடு வழக்கு ஒன்று உண்டு: இஸ்ரயேலோடு அவர் வாதாடப் போகின்றார்.
3என் மக்களே, நான் உங்களுக்கு என்ன செய்தேன்? எதில் நான் உங்களைத் துயரடையச் செய்தேன்? எனக்கு மறுமொழி கூறுங்கள்.
4நான் உங்களை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்தேன்: அடிமைத்தன வீட்டிலிருந்து மீட்டு வந்தேன்: உங்களுக்கு முன்பாக மோசேயையும், ஆரோனையும், மிரியாமையும் அனுப்பிவைத்தேன்.
5என் மக்களே, மோவாபு அரசன் பாலாக்கு வகுத்த திட்டத்தை நினைத்துப் பாருங்கள்: பெயோரின் மகன் பிலயாம் அவனுக்குக் கூறிய மறுமொழியையும், சித்திமுக்கும் கில்காலுக்கும் இடையே நடந்தவற்றையும் எண்ணிப்பாருங்கள்: அப்போது ஆண்டவரின் மீட்புச் செயல்களை அறிந்து கொள்வீர்கள்.
6ஆண்டவரின் திருமுன் வரும்போது உன்னதரான கடவுளாகிய அவருக்கு எதைக் கொண்டுவந்து பணிந்து நிற்பேன்? எரிபலிகளோடும் ஒரு வயதுக் கன்றுகளோடும் அவர் முன்னிலையில் வரவேண்டுமா?
7ஆயிரக்கணக்கான ஆட்டுக்கிடாய்கள் மேலும் பல்லாயிரக்கணக்கான ஆறுகளாய்ப் பெருக்கெடுத்தோடும் எண்ணெய் மேலும் ஆண்டவர் விருப்பம் கொள்வாரோ? என் குற்றத்தை அகற்ற என் தலைப்பிள்ளையையும், என் பாவத்தைப் போக்க நான் பெற்ற குழந்தையையும் பலி கொடுக்க வேண்டுமா?
8ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?
9ஆண்டவரின் குரல் நகரை நோக்கிக் கூக்குரலிடுகின்றது: உம் பெயருக்கு அஞ்சி நடப்பதே உண்மையான ஞானம். நகரில் கூடியிருப்போரே! நான் கூறுவதைக் கேளுங்கள்:
10“கொடியோரின் வீட்டில் தீய வழியால் சேர்க்கப்பட்ட களஞ்சியங்களையும் சபிக்கப்பட்ட மரக்காலையும் நான் மறப்பேனோ?
11கள்ளத் தராசையும் கள்ள எடைக் கற்களையும் கொண்ட பையை வைத்திருப்போரை நேர்மையாளர் எனக் கொள்வேனோ?
12உங்களிடையே உள்ள செல்வர்கள் கொடுமை நிறைந்தவர்கள்: அங்கே குடியிருப்பவர்கள் பொய்யர்கள்: அவர்கள் வாயிலிருந்து வஞ்சனையான பேச்சே வெளிப்படுத்துகின்றது.
13ஆதலால், நான் உங்களை உங்கள் பாவங்களுக்காகத் தண்டிக்கத் தொடங்கியுள்ளேன்: நீங்கள் பாழாய்ப் போவீர்கள்.
14நீங்கள் உணவருந்தினாலும் நிறைவடைய மாட்டீர்கள்: பசி உங்கள் வயிற்றைக் கிள்ளிக்கொண்டிருக்கும்: நீங்கள் எதையும் பாதுகாப்பாக வைத்திருக்கமாட்டீர்கள், இழப்பீர்கள்: அப்படியே நீங்கள் எதையாவது பாதுகாப்பாக வைத்தாலும் அதை நான் வாளுக்கு இரையாக்குவேன்.
15நீங்கள் விதைப்பீர்கள்: ஆனால், அறுவடை செய்யமாட்டீர்கள்: ஒலிவக் கொட்டைகளை ஆலைக்குள் இட்டு ஆட்டுவீர்கள், ஆனால், உங்களுக்கு எண்ணெய் தடவிக்கொள்ளமாட்டீர்கள்: திராட்சைப் பழம் பிழிவீர்கள்: ஆனால், திராட்சை இரசத்தைச் சுவைக்கமாட்டீர்கள்.
16ஏனெனில், நீங்கள் ஒம்ரியின் கட்டளைகளைக் கடைப்பிடித்தீர்கள்: ஆகாசு குடும்பத்தாரின் செயல்கள் அனைத்தையும் பின்பற்றினீர்கள், அவர்களின் திட்டங்களைப் பின்பற்றி நடந்தீர்கள்: ஆதலால், நான் உங்களை அழிவுக்குக் கையளிப்பேன்: உங்களிடையே குடியிருப்போர் இகழ்ச்சிக்கு உள்ளாவர்: மக்களினங்களின் நிந்தைக்கு ஆளாவீர்கள்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.