1 | ஆண்டவர் மோசேயிடம் கூறியது: |
2 | “நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: தூயோராய் இருங்கள்.ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்! |
3 | நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தாய் தந்தைக்கு அஞ்சுங்கள்.என் ஓய்வு நாளைக் கடைப்பிடியுங்கள்.நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்! |
4 | சிலைகள் பக்கம் திரும்ப வேண்டாம்.உங்களுக்கெனத் தெய்வப் படிமங்களை வார்த்துக் கொள்ள வேண்டாம்.நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்! |
5 | ஆண்டவருக்கு நல்லுறவுப்பலி செலுத்தினால் அதை மனமுவந்து செய்யுங்கள். |
6 | நீங்கள் பலி செலுத்தும் நாளன்றும், மறுநாளும் உண்டு, மூன்றாம் நாள் எஞ்சியதைச் சுட்டெரியுங்கள். |
7 | மூன்றாம் நாளில் எஞ்சியதை உண்டால், அது திகட்டும், விருப்பமாய் இராது. |
8 | அவ்வாறு உண்போர் தம்பழியைத் தாமே சுமப்பர்.ஏனெனில் அவர்கள் ஆண்டவரின் பார்வையில் தூய்மையானதை இழிவுக்குள்ளாக்கினர். அந்த மனிதர் அவர்கள் இனத்தில் இராதபடி அழிக்கப்படுவர். |
9 | உங்கள் நாட்டில் நீங்கள் பயிரிட்டதை அறுவடை செய்யும்போது, வரப்பு ஓரக் கதிரை அறுக்கவேண்டாம்.சிந்திக் கிடக்கும் கதிரையும் பொறுக்க வேண்டாம்: |
10 | திராட்சைத் தோட்டத்தில் பின்னறுப்பு வேண்டாம்: சிந்திக் கிடக்கும் பழங்களைப் பொறுக்க வேண்டாம்.அவற்றை எளியோருக்கும் அன்னியருக்கும் விட்டுவிட வேண்டும்.நானே உங்கள் ஆண்டவராகிய கடவுள்! |
11 | களவு செய்யாமலும், பொய் சொல்லாமலும் ஒருவரை ஒருவர் வஞ்சியாமலும், |
12 | பெயரால் பொய்யாணையிட்டு, உங்கள் கடவுளின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தாமலும் இருங்கள்.நான் ஆண்டவர்! |
13 | அடுத்திருப்பவரை ஒடுக்கவோ அவருக்குரியதைக் கொள்ளையிடவோ வேண்டாம்: வேலையாளின் கூலி விடியும்வரை உன்னிடம் இருத்தல் ஆகாது. |
14 | காது கேளாதோரைச் சபிக்காதே! பார்வையற்றோரை இடறச் செய்யாதே! உன் கடவுளுக்கு அஞ்சி நட.நான் ஆண்டவர்! |
15 | தீர்ப்பிடுகையில், அநீதி இழைக்காதே.சிறியோர் பெரியோர் என முகம் பாராது, உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு. |
16 | உன் இனத்தாருக்குள் புறங்கூறித் திரியாதே.உனக்கு அடுத்து வாழ்பவரின் குருதிப் பழிக்குக் காரணம் ஆகாதே! நான் ஆண்டவர்! |
17 | உன் சகோதரரை உன் உள்ளத்தில் பகைக்காதே! உனக்கடுத்தவர் பாவம் செய்யாதபடி அவரைக் கடிந்து கொள். |
18 | பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே.உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்! |
19 | என் கட்டளைகளைக் கடைப்பிடி.உன் கால்நடைகளை வேறுவகை விலங்குகளோடு பொலியவிடாதே.உன் வயலில் இருவகைத் தானியங்களை ஒரே நேரத்தில் விதைக்காதே! இருவகை நூலுள்ள உடை அணியாதே! |
20 | ஒருவனுக்கு மண ஒப்பந்தமான, ஆனால் பிணை கொடுத்து விடுவிக்கப்படாத அடிமைப் பெண்ணோடு வேறொருவன் உடலுறவு கொண்டால் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்: கொல்லப்பட வேண்டாம்: அவள் தன்னுரிமை பெற்றவளல்ல. |
21 | அவன் தன் குற்றப்பழி நீக்கும் பலியாக ஆட்டுக்கிடாய் ஒன்றை ஆண்டவருக்குச் சந்திப்புக் கூடார வாயிலுக்குள் கொண்டுவர வேண்டும். |
22 | அதனால் அவன் செய்த குற்றத்திற்காக, ஆண்டவர் திருமுன் குரு கறைநீக்கம் செய்வார்.அப்போது அவள் செய்த பாவம் மன்னிக்கப்படும். |
23 | நீங்கள் இந்நாட்டில் எவ்விதக் கனிமரங்களை நட்டாலும், அவற்றின் கனி துண்டிக்கப்பட வேண்டும்: அதாவது மூன்றாண்டு உண்ணப்படாமல் விலக்கப்பட்டிருக்கும். |
24 | நான்காம் ஆண்டு அவற்றின் கனி முழுவதும் ஆண்டவருக்குப் படைக்கப்பட்டுத் தூய்மையாகும். |
25 | ஐந்தாம் ஆண்டில் அவற்றின் கனியை உண்ணலாம்.அதுமுதல் அவை உங்களுக்குப் பலன் அளித்துவரும்.நான் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்! |
26 | எந்த இறைச்சியையும் குருதியோடு உண்ண வேண்டாம்: குறி பார்க்க வேண்டாம்: நாள் பார்க்க வேண்டாம். |
27 | தலைமுடியைத் திருத்திக் கொள்ள வேண்டாம். |
28 | செத்தவனுக்காக உடலைக் கீறிக்கொள்ள வேண்டாம்: பச்சை குத்திக்கொள்ளவும் வேண்டாம்: நானே ஆண்டவர்! |
29 | நாட்டில் விபசாரம் வளர்ந்து, ஒழுக்கக்கேடு பெருகாதபடி, உன் மகளை இழிவுபடுத்தி வேசித்தனம் பண்ண அனுமதியாதே! |
30 | ஓய்வு நாள்களைக் கடைப்பிடித்து, என் தூயகத்தைக் குறித்து அச்சம் கொள்ளுங்கள்: நானே ஆண்டவர்! |
31 | பில்லி சூனியம் பார்க்க வேண்டாம்: குறிகாரரை அணுகவேண்டாம்: அவர்களைத் தேடி அவர்களால் தீட்டாக வேண்டாம்.நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்! |
32 | நரை திரண்டவருக்குமுன் எழுந்து நில்.முதிர்ந்தவர் முகத்தை மதித்து நட: உன் கடவுளுக்கு அஞ்சி வாழ்: நானே ஆண்டவர்! |
33 | உங்கள் நாட்டில் தங்கியிருக்கும் அன்னியருக்குத் தீங்கிழைக்காதே! |
34 | உங்களிடம் தங்கும் அன்னியர் உங்கள் நாட்டில் பிறந்தவரைப் போல் இருக்க வேண்டும்.உங்கள் மீது நீங்கள் அன்புகூர்வதுபோல் அவர் மீதும் அன்புகூருங்கள்.ஏனெனில், எகிப்தில் நீங்களும் அன்னியர்களாய் இருந்தீர்கள்: நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்! |
35 | நீட்டல், நிறுத்தல், கொள்ளல் ஆகிய அளவுகளில் நேர்மையைக் கடைப்பிடியுங்கள். |
36 | தராசும், படிக்கல்லும், மரக்காலும் அளவு சரியான படியும் உங்களிடம் இருக்கட்டும்! உங்களை எகிப்து நாட்டினின்று வெளிக்கொணர்ந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நானே! |
37 | நீங்கள் என் எல்லா நியமங்களையும் கட்டளைகளையும் கடைப்பிடித்து ஒழுகுங்கள்: நானே ஆண்டவர்! |