1 | ஆண்டவர் மோசேயிடம் கூறியது: |
2 | தொழுநோயாளியின் தீட்டகற்றும் நாளில் அவரைக் குறித்த சட்டம்: அவர் குருவிடம் அழைத்து வரப்பட வேண்டும்.குரு பாளையத்திற்கு வெளியே வந்து, அவரைச் சோதித்துப் பார்க்க வேண்டும். |
3 | தொழுநோயாளியின் நோய் குணமாயிற்று எனக் குரு கண்டால், |
4 | தீட்டு அகற்றப்பட இருப்போரை உயிருள்ள, குறையற்ற இரு குருவிகளையும், ஒரு கேதுரு மரக்கட்டையையும், கருஞ்சிவப்பு நூலையும், ஈசோப்பையும் வாங்கி வருமாறு பணிப்பார். |
5 | மண்பாண்டத்தில் ஊற்றிய ஊற்று நீரில் குருவி ஒன்றின் கழுத்தை அறுப்பார்: |
6 | உயிருள்ள குருவியையும், கேதுரு மரக்கட்டையையும், கருஞ்சிவப்பு நூலையும் ஈசோப்பையும் எடுத்து, இவை அனைத்தையும் உயிருள்ள குருவியையும் ஊற்று நீரில் கழுத்தறுக்கப்பட்ட குருவியின் குருதியில் தோய்ப்பார்: |
7 | தொழுநோயால் ஏற்பட்ட தீட்டை அகற்றப்படவிருப்போரின் மீது ஏழுமுறை தெளித்து, அவரது தீட்டை அகற்றுமாறு உயிருள்ள குருவியைத் திறந்த வெளியில் விட்டுவிடுவார். |
8 | தீட்டு அகற்றப்படுவோர் தம் உடைகளைத் துவைத்து, தம் தலையை மழித்து நீராடியதும் தூய்மையாவார்: பின்பு, பாளையத்திற்குச் சென்று, ஏழு நாள் தம் கூடாரத்துக்கு வெளியே தங்கியிருப்பார்: |
9 | ஏழாம் நாளில் தம் தலை, தாடி, புருவம், மற்றும் உரோமம் அனைத்தையும் மழுங்கச் சிரைத்துத் தம் உடலை நன்கு கழுவித் தூய்மையாவார். |
10 | எட்டாவது நாள், ஒரு வயது நிரம்பிய பழுதற்ற ஓர் ஆட்டையும் இரு கிடாய்க்குட்டிகளையும், இருபதுபடி அளவில் பத்தில் மூன்று பங்கு மாவை எண்ணெயில் பிசைந்து தயாரித்த உணவுப் படையலையும் ஆழாக்கு எண்ணெயையும் கொண்டு வரவேண்டும். |
11 | தூய்மைப்படுத்தவிருக்கும் குரு தீட்டு அகற்றப்படவிருக்கும் மனிதரையும், பலிப் பொருள்களையும், சந்திப்புக்கூடார வாயிலுக்குக் கொண்டு வருவார். |
12 | பின்னர், குரு ஆழாக்கு எண்ணெயையும் கிடாய்க் குட்டிகளில் ஒன்றையும் குற்றம் நீக்கும் பலியாக ஒப்படைப்பார்.ஆண்டவர் திருமுன் ஆரத்திப்பலியாக அவற்றைச் செலுத்துவார். |
13 | பாவம் போக்கும் பலிக்கும் எரிபலிக்கும் உரியவற்றை வெட்டும் தூய இடத்தில் கிடாய்க் குட்டியையும் வெட்டுவார்.இந்தக் குற்றப்பழி நீக்கும் பலி பாவம் போக்கும் பலி போன்று குருவுக்கு உரியது.ஏனெனில், அது மிகவும் தூய்மையானது. |
14 | குற்றம் நீக்கும் பலியின் குருதியில் குரு சிறிது எடுத்துத் தீட்டு அகற்றப்படவிருப்போரின் வலக்காது மடல், வலக்கைப் பெருவிரல், வலக்கால் பெருவிரல் ஆகியவற்றின் மீது பூசுவார். |
15 | பின்பு, குரு அந்த ஆழாக்கு எண்ணெயில் சிறிது தன் இடக்கையில் ஊற்றி, |
16 | தன் வலக்கை விரலை அதில் தோய்த்து, ஏழு முறை அந்த எண்ணெயைஆண்டவர் திருமுன் தெளிப்பார். |
17 | தன் கையில் எஞ்சியிருக்கும் எண்ணெயில் சிறிது எடுத்து, தீட்டு அகற்றப்படவிருப்போரின் வலக்காது மடல், வலக்கைப் பெருவிரல், வலக்கால் பெருவிரல் ஆகியவற்றின் முன்பு பூசிய குற்றப்பழி நீக்கும் பலிக்குருதியின் மீது அவர் பூசுவார். |
18 | பின்னர், அவர் தம் கையில் எஞ்சியிருக்கும் எண்ணெயைத் தீட்டு அகற்றப்படவிருப்போரின் தலையில் தடவி அவருக்காக ஆண்டவர் திருமுன் கறை நீக்கம் செய்வார். |
19 | பாவம் போக்கும் பலியைச் செலுத்தி, தீட்டகற்றப்பட இருப்போருக்குத் தீட்டு நீங்கக் கறை நீக்கம் செய்வார்.பின்னர் எரிபலிக்குரியதை வெட்டுவார். |
20 | எரிபலியையும், உணவுப்படையலையும் பலிபீடத்தில் படைப்பார்.இவ்வாறு குரு கறைநீக்கம் செய்ய அந்த மனிதர் தூய்மையாவார். |
21 | இவற்றைச் செலுத்த இயலாத ஏழையாயிருந்தால் அவர் குற்றப்பழி நீக்கத்திற்கான ஆரத்திப் பலியாகவும், குறைநீக்கப் பலியாகவும் ஒரு கிடாய்க் குட்டியையும், உணவுப் பலியாக இருபது படி அளவில் மரக்காலில் பத்தில் ஒரு பங்கு மாவை எண்ணெயில் பிசைந்து தயாரித்த உணவுப்படையலையும் ஆழாக்கு எண்ணெயையும் |
22 | தம் நிலைமைக்கேற்ப, இரு புறாக்களையோ, புறாக் குஞ்சுகளையோ கொண்டுவர வேண்டும்.ஒன்று பாவம்போக்கும் பலி: மற்றது எரிபலி. |
23 | அவற்றை அவர் எட்டாம் நாளில் சந்திப்புக்கூடார வாயிலில் ஆண்டவர் திருமுன் தம் தீட்டை அகற்றிக்கொள்வதற்காகக் கொண்டுவர வேண்டும். |
24 | குற்றப்பழி நீக்கும் கிடாய்க்குட்டியையும், ஆழாக்கு எண்ணெயையும் குரு வாங்கி, ஆண்டவர் திருமுன் ஆரத்திப்பலியாகக் காட்டுவார். |
25 | குற்றப்பழி நீக்கும் கிடாய்க்குட்டியை அடித்து அதன் இரத்தத்தில் சிறிது பிடித்துத் தீட்டு அகற்றப்படவிருப்போர் வலக்காது மடலிலும் வலக்கைப் பெருவிரலிலும் வலக்கால் பெருவிரலிலும் பூசுவார். |
26 | பின்னர், அவர் தம் இடக்கையில் சிறிது எண்ணெயை ஊற்றி, |
27 | தம் வலக்கை விரலை அதில் தோய்த்து, ஏழுமுறை அந்த எண்ணெயை ஆண்டவர் திருமுன் தெளிப்பார். |
28 | தம் கையில் எஞ்சியிருக்கும் எண்ணெயில் சிறிது எடுத்து, தீட்டு அகற்றப்பட இருக்கிறவரின் வலக்காது மடல், வலக்கைப் பெருவிரல், வலக்கால் பெருவிரல் ஆகியவற்றில் முன்னர் பூசிய குற்றப்பழி நீக்கும் பலிக்குருதியின் மீது அவர் பூசுவார். |
29 | பின்னர் அவர் தம் கையில் எஞ்சியிருக்கும் எண்ணெயைத் தீட்டு அகற்றப்பட விருப்போரின் தலையில் தடவி அவருக்காக ஆண்டவர் திருமுன் கறைநீக்கம் செய்வார். |
30 | பின்னர்த் தீட்டு அகற்றப்படவிருப்போர் தம் நிலைமைக்குத் தக்கவாறு கொண்டுவந்த புறா எனினும் புறாக் குஞ்செனினும், |
31 | அவற்றில் ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும், மற்றதை எரிபலியாகவும் உணவுப் படையலோடு படைப்பார்.இவ்வாறு குரு தீட்டு அகற்றப்படுவோருக்கு ஆண்டவர் திருமுன் கறைநீக்கம் செய்வார். |
32 | தம்மைத் தூய்மையாக்கிக் கொள்ளப் போதுமானவற்றைக் கொண்டுவர இயலாத தொழுநோயாளிக்கு உரிய சட்டம் இதுவே.” |
33 | ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது: |
34 | உங்களுக்கு உடைமையாக நான் வழங்கும் கானான் நாட்டிற்கு நீங்கள் வந்த பின்னர், அங்குள்ள ஒரு வீட்டில் தொழுநோயை நான் வரச்செய்தால், |
35 | அந்த வீட்டின் உடைமையாளன், என் வீட்டில் நோய்க்கான அறிகுறி தென்படுகிறது எனக் குருவுக்கு அறிவிக்க வேண்டும். |
36 | குரு நோயைச் சோதித்துப் பார்க்கச் செல்லுமுன் வீட்டிலுள்ள அனைத்தையும் வெளியேற்றுமாறு கட்டளையிடுவார்: இல்லையேல் வீட்டிலுள்ள அனைத்தும் தீட்டெனக் கருதப்படும்.பின்னர் நோயைச் சோதிப்பதற்காகக் குரு வீட்டினுள் நுழைவார். |
37 | அவர் நோய் பற்றியிருக்கும் இடத்தைப் பார்வையிடுவார்.வீட்டுச் சுவர்களில் பச்சையும் சிவப்புமான கறை இருந்து, அப்பகுதி சுவர்ப்பரப்பை விடக் குழிவாயிருந்தால், |
38 | குரு வீட்டைவிட்டு வெளியே வந்து வாயிலை ஏழு நாள் அடைத்து வைப்பார். |
39 | ஏழாம் நாள் மீண்டும் வந்து சோதித்துப் பார்ப்பார்.அங்கு நோய்க்குறி சுவர்களில் பரவக்கண்டால், |
40 | அந்த இடத்திலுள்ள கற்களைப் பெயர்த்து நகருக்கு வெளியே தீட்டான இடத்தில் போடப் பணிப்பார். |
41 | வீட்டின் உட்சுவரைச் செதுக்கி, செதுக்கப்பட்ட பூச்சுமண்ணை நகருக்கு வெளியே தீட்டான இடத்தில் கொட்டிவிட்டு, |
42 | பெயர்த்த கற்களுக்குப் பதிலாக வேறு கற்களைக் கொண்டுவந்து வேறுமண்ணை எடுத்துப் பூசச் சொல்வார். |
43 | கற்களை மாற்றி, சுவரைக் கொத்திப் பூசிப் புதிதாக்கியபின்னர் அந்நோய் வீட்டில் மீண்டும் தென்பட்டால், |
44 | குரு வந்து பார்ப்பார்.நோய் வீட்டில் இடம் பெற்றதெனில் அது வளரும் தொழுநோய். அது தீட்டு. |
45 | எனவே, வீட்டை இடித்து, அதன் மரங்களையும் மண்ணையும் நகருக்கு வெளியே தீட்டான இடத்தில் கொட்ட வேண்டும். |
46 | வீடு அடைக்கப்பட்டிருந்த நாள்களில் அதனுள் செல்பவன் மாலைவரை தீட்டுள்ளவன். |
47 | வீட்டிலே படுத்திருந்தவனும், அவ்வீட்டில் உணவுண்டவனும், தங்கள் உடைகளை வெளுக்க வேண்டும். |
48 | குரு, வீடு பூசப்பட்டபின் மீண்டும் வந்து அங்கு நோய் பரவவில்லை எனக் கண்டால், அந்த வீடு தூயது என அறிவிப்பார்.ஏனெனில் நோய் குணமாகிவிட்டது. |
49 | வீட்டின் கறையை நீக்க, இரு குருவிகள், கேதுருக்கட்டை, சிவப்பு நூல், ஈசோப்பு ஆகியவற்றைக் குரு எடுப்பார்: |
50 | ஒரு குருவியை மண்பாண்டத்திலுள்ள ஊற்று நீரில் கொல்வார்: |
51 | கேதுருக் கட்டையையும், ஈசோப்பையும், சிவப்பு நூலையும், உயிருள்ள குருவியையும் கொல்லப்பட்ட அக்குருவியின் குருதியிலும் ஊற்று நீரிலும் தோய்த்து, வீட்டின் மேல் ஏழு தரம் தெளிப்பார். |
52 | குருவியின் குருதி, ஊற்று நீர், உயிருள்ள குருவி, கேதுருக்கட்டை, ஈசோப்பு, சிவப்பு நூல், இவற்றால் கறை நீக்கம் செய்வார். |
53 | உயிருள்ள குருவியைக் குடியிருப்புக்கு வெளியே மைதானத்தில் விட்டு விடவேண்டும்.இவ்வாறு வீட்டிற்கான கறை நீக்கம் செய்ததும் அது தூய்மையாகும். |
54 | இது அனைத்துத் தொழுநோய்க்கும், சொறிக்கும் |
55 | உடைப் பத்துக்கும், வீட்டு நோய்க்கும் |
56 | வீக்கம், சிரங்கு, வெள்யைமறு ஆகியவற்றிற்கான சட்டம். |
57 | எப்போது தீட்டு, எப்போது தூய்மை என முடிவு செய்வதற்குரிய தொழு நோய்க்கான சட்டமும் அதுவே.” |