1 | ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் உரைத்தது: |
2 | “"ஒருவர் உடலில் தோல்மீது தொழுநோய் போன்று, ஏதேனும் தடிப்போ, சொறி சிரங்கோ, வெண்படலமோ தோன்ற, அது தொழுநோயென ஐயமுற்றால், அவர் குருவாகிய ஆரோனிடம் அல்லது குருக்களாகிய அவர் புதல்வரில் ஒருவரிடம் கொண்டு வரப்படவேண்டும். |
3 | அவர் உடலில் நோயிருக்கும் இடத்தைக் குரு பார்த்து, அந்த இடத்தில் உரோமம் வெண்மையாக மாறி, நோயிருக்கும் பகுதி அவர் உடலிலுள்ள மற்றத் தோற் பகுதியை விடக் குழிந்திருந்தால், அது தொழுநோய்: அவரைப் பார்த்த குரு அவரைத் தீட்டுடையவர் என முடிவு செய்வார். |
4 | அவர் உடலின் மேல் வெள்ளைப்படலம் இருந்தும், அந்த இடம் மற்றப் பகுதிகளிலுள்ள தோலைவிடக் குழிவாயிராமலும், அதன் மீதுள்ள உரோமம் வெண்மை ஆகாமலும் இருந்தால், குரு அவரை ஏழு நாள் அடைத்து வைப்பார். |
5 | ஏழாம் நாள் அவரைப் பார்க்கும் போது நோய் பரவாமல் குறைந்திருந்தால், மீண்டும் ஏழு நாள் குரு அவரை அடைத்து வைப்பார். |
6 | ஏழாம் நாளில் மீண்டும் அவரை அழைத்துப் பார்வையிடுவார்.நோய் பரவாமல் குறைந்திருந்தால், அவர் தூய்மையானவர் எனக்குரு தீர்ப்புச் சொல்வார், அது சொறிசிரங்கு: அவர் தம் உடைகளைத் துவைக்க வேண்டும்: அவர் தீட்டற்றவர். |
7 | தீட்டற்றவர் என அறிவிக்கப்பட்டவர் தம்மைக் குருவுக்குக் காட்டியபின், மறுபடியும் சொறி சிரங்கு அவர் உடலில் ஏற்பட்டால் அவர் தம்மைக் குருவிடம் காட்ட வேண்டும். |
8 | மீண்டும் சொறி சிரங்கு அவர் உடலில் இருப்பதைக் குரு கண்டால் அவர் தீட்டுடையவர் என அறிவிப்பார்.அது தொழுநோய். |
9 | ஒரு மனிதர் தொழுநோயாளி எனில், அவர் குருவிடம் கொண்டு வரப்படுவார். |
10 | தோலில் வெண்ணிறத்தடிப்பு இருந்து, அது உரோமத்தை வெண்மையாக மாற்றி, திறந்த புண்ணாயிற்று எனக்குரு கணிப்பார். |
11 | அது அவர் உடலில் நெடுநாளாயிருக்கும் தொழுநோய்.குரு அவர் தீட்டுடையவர் என அறிவிப்பார்.அவரை அடைத்து வைக்கவேண்டும்.அவர் தீட்டுடையவரே. |
12 | வெண்குட்டம் உடலில் பரவி, நோயாளியின் கால்தொடங்கித் தலைவரைக் குரு காண்கிற எல்லா இடங்களிலும் தோலில் படர்ந்திருந்தால், |
13 | அவரைச் சோதித்துப் பார்க்கவேண்டும்.அவர் உடலில் முழுவதும் நோய் படர்ந்திருந்தால், அவர் தீட்டற்றவர் எனக்குரு அறிவிப்பார்.உடல் முழுவதும் வெண்மையாகிவிட்டதால் தீட்டற்றவர். |
14 | ஆனால் திறந்த புண் காணப்படும் நாளில், அவர் தீட்டுள்ளவர். |
15 | எனவே, திறந்த புண்ணைக் கண்டால் அவர் தீட்டுள்ளவர் என அறிவிப்பார்.திறந்தபுண் தீட்டுடையது: அது தொழுநோய். |
16 | திறந்த புண் மாறி வெண்ணிறம் அடைந்தால், அவர் குருவிடம் வருவார். |
17 | குரு அவரைச் சோதித்துப் பார்ப்பார்.நோய்த்தழும்பு வெண்மையாகி மாறிற்றெனில், அவர் தீட்டற்றவர் எனக் குரு அறிவிப்பார்: அவர் தீட்டற்றவர். |
18 | உடலில் கட்டி ஏற்பட்டு, அது குணமாகி, |
19 | கட்டி இருந்த இடத்தில் வெள்ளைத்தடிப்பு, அல்லது சிவப்பு கலந்த வெண்மை மறு தோன்றினால், அதனைக் குருவுக்குக் காட்டவேண்டும். |
20 | குரு அதைச் சோதித்துப்பார்ப்பார்.அந்த இடம் மற்றத் தோலைவிடத் தாழ்ந்து, அந்த இடத்தில் உரோமம் வெண்மையாக மாறியிருந்தால், அவர் தீட்டுள்ளவர் எனக் குரு அறிவிப்பார்.அது கட்டியால் உண்டான தொழுநோய். |
21 | குரு அதைச் சோதித்துப் பார்க்கும் போது, அதில் வெள்ளை உரோமம் இல்லை என்றும், மற்றத் தோலை விடக் குழிந்திராமல் சற்றுக் கருமையாக மட்டும் உள்ளது என்றும் கண்டால், அவர் அவரை ஏழு நாள் அடைத்து வைப்பார். |
22 | தோலில் புள்ளி படரக்கண்டால், அது தொழு நோய்.அவர் தீட்டு உடையவர் எனக் குரு அறிவிப்பார். |
23 | வெள்ளை மறு பரவாமல் அது இருந்த இடத்தில் மட்டும் இருந்தால், அது கட்டியின் தழும்பு: எனவே அவர் தீட்டற்றவர் எனக் குரு அறிவிப்பார். |
24 | ஒருவரது உடலில் நெருப்புப்பட்டதனால் தீக்காயம் ஏற்பட்டு, நெருப்புப்பட்ட இடத்தில் சிவப்பு அல்லது வெண்மையான மறு தோன்றினால், அவரைக் குரு சோதித்துப் பார்க்க வேண்டும். |
25 | அந்த மறுவில் உரோமம் வெண்மையாக மாற அந்த இடம் தோலைப் பார்க்கிலும் குழியாக இருந்தால், அது நெருப்பினால் ஏற்பட்ட தொழுநோய்.அவர் தீட்டுள்ளவர் எனக் குரு அறிவிப்பார்.அது தோழுநோய்தான். |
26 | அதைச் சோதித்துப் பார்க்கும் குரு, அந்த மறுவில் வெள்ளை உரோமம் இல்லை என்றும் மற்றத் தோலைவிடக் குழிந்திராமல் சற்றுக் கருமையாக உள்ளது என்றும் கண்டால், அவரை ஏழு நாள் தனியாக வைப்பார். |
27 | ஏழாம் நாளில் அவரைச் சோதித்துப் பார்த்து, தோலில் அது பரவி இருந்தால், அவர் தீட்டுள்ளவர் எனக் குரு அறிவிப்பார்: அது தொழுநோய். |
28 | மறு தோலில் பரவாமல், அவ்விடத்திலேயே சற்றுக் கருமையாக இருந்தால் அது நெருப்பினால் ஏற்பட்ட தடிப்பு.அவர் தீட்டற்றவர் எனக் குரு அறிவிப்பார்.அது நெருப்பால் ஏற்பட்ட வடு. |
29 | ஆணுக்கோ, பெண்ணுக்கோ தலையிலோ தாடையிலோ, நோய் ஏற்பட்டால் |
30 | குரு அந்த நோயைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.நோயுள்ள இடம் குழிவாயும், உரோமம் பொன்னிறமாகவும் குறைவாகவும் இருந்தால் தீட்டு எனக் குரு அறிவிப்பார்.அது தாடையிலோ தலையிலோ ஏற்படும் சொறி வகையான தொழுநோய் ஆகும். |
31 | குரு அதைச் சோதித்துப் பார்த்து அவ்விடத்தில் மற்றத் தோலைவிடக் குழிந்திராமல் கருப்பு உரோமம் இல்லை என்றால், குரு ஏழுநாள் அவரைத் தனியாக வைப்பார். |
32 | ஏழாம் நாளில் அவரைக் குரு சோதித்துப் பார்ப்பார்.அந்தச் சொறி படராமலும், அங்கு மஞ்சள் உரோமம் இல்லாமலும், மற்றத் தோலைவிடக் குழிவு இல்லாமலும் இருந்தால், |
33 | அவர் சொறி இருக்கும் இடம் நீங்கலாக, மற்ற இடங்களைச் சிரைத்துக் கொள்வார்.மீண்டும் குரு அவரை ஏழுநாள் தனியாக வைப்பார். |
34 | ஏழாம் நாளில் குரு சோதித்துப் பார்க்கும்போது, தோலில் சொறி பரவாமல், மற்றத் தோலைவிடக் குழிந்திராமல் இருந்தால் அவர் தீட்டற்றவர் என அறிவிப்பார்.தம் ஆடைகளைத் துவைத்தபின், அவர் தூய்மையாவார். |
35 | தூய்மையானவராக அறிவிக்கப்பட்டபின் உடலில் சொறி படர்ந்தால், |
36 | குரு அவரைச் சோதித்துப் பார்ப்பார்.தோலில் சொறி பரவி இருந்தால் உரோமம் மஞ்சள் நிறமா எனக் குரு பார்க்கத் தேவை இல்லை.அவர் தீட்டுள்ளவர். |
37 | சொறி குறைந்து, அந்த இடத்தில் கருப்பு உரோமம் முளைத்ததெனில் சொறி குணமாயிற்று: அவர் தீட்டற்றவராய் இருக்கிறார்.அவர் தீட்டற்றவர் எனக் குரு அறிவிப்பார். |
38 | ஓர் ஆண் அல்லது பெண்ணின் உடலில் வெள்ளைப் புள்ளிகள் காணப்பட்டால், |
39 | குரு சோதித்துப் பார்ப்பார்.அவர்கள் மேல் தோலில் மங்கின வெண்ணிறத்தில் இருந்தால் அது தோலில் தோன்றுகிற வெள்ளைத்தேமல்: அவர் தூய்மையானவர். |
40 | தலைமுடி உதிர்ந்து ஒருவர் மொட்டையானால், அவர் தூய்மையானவர். |
41 | முன்புறத் தலைமுடி உதிர்ந்து, அரை மொட்டையானால், அவரும் தூய்மையானவர். |
42 | மொட்டைத் தலையில் செந்நிறம் கலந்த வெண்மையான புண் உண்டானால் அது தொழுநோயின் தொடக்கம். |
43 | குரு அவரைச் சோதித்துப் பார்ப்பார்.அவரது மொட்டைத் தலையிலோ, அரை மொட்டைத் தலையிலோ, உடலின் தோலில் தோன்றும் தொழுநோய் போன்ற செந்நிறம் கலந்த வெண்மையான தடிப்பு இருந்தால், |
44 | அவர் தொழுநோயாளி.அவர் தீட்டுள்ளவர்.அவர் தீட்டுள்ளவர், எனக் குரு அறிவிப்பார்.ஏனெனில் நோய் அவர் தலையில் உள்ளது. |
45 | தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக் கொண்டு, “தீட்டு, தீட்டு”, என குரலெழுப்ப வேண்டும். |
46 | நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர்.எனவே தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார். |
47 | ஆட்டு உரோமம், அல்லது பஞ்சு நூலால் செய்யப்பட்ட உடையில், |
48 | அல்லது பஞ்சு நூலும் ஆட்டு உரோமமும் சேர்த்து நெய்யும் பாவில் அல்லது ஊடுநூலில், அல்லது தோலாடையில், அல்லது தோலால் செய்யப்பட்ட எதிலும், தொழுநோயின் அடையாளம் தோன்றி, |
49 | உடையிலோ, தோலாடையிலோ, பாவிலோ, ஊடுநூலிலோ, தோல் அல்லது தோலினால் செய்யப்பட்ட எதிலாவது, நோய் பச்சை அல்லது சிவப்பு நிறமாகக் காணப்பட்டால், அது தொழுநோய்.குருவுக்கு அதைக் காட்ட வேண்டும். |
50 | குரு அந்த நோயைச் சோதித்துப்பார்த்து, நோய் தீண்டியவற்றை ஏழுநாள் தனியாக வைத்து, |
51 | ஏழாம் நாளில் அதைக் கவனிக்க வேண்டும்.உடையிலோ, பாவிலோ, ஊடுநூலிலோ, தோலாடையிலோ, தோலால் செய்யப்பட்ட எதிலோ இருந்தால், அது வளரும் தொழுநோய்.அது தீட்டானது. |
52 | அந்த நோயுள்ள ஆட்டு உரோமத்தாலோ பஞ்சு நூலாலோ ஆன உடையையும் பாவையும், ஊடுநூலையும், தோலாடையையும், தோலால் செய்யப்பட்ட எதையும் சுட்டெரிக்க வேண்டும்.ஏனெனில் அது வளரும் தொழுநோய்.அது நெருப்பில் சுட்டெரிக்கப்பட வேண்டும். |
53 | உடையிலோ, பாவிலோ, நூலிலோ, தோலால் செய்யப்பட்ட எதிலோ அந்த நோய் பரவவில்லை எனக் குரு கண்டால் |
54 | குரு நோய் தீண்டியதைக் கழுவச் சொல்லி, இரண்டாம் முறையும் ஏழுநாள் தனியாக வைப்பார். |
55 | அது கழுவப்பட்ட பின் அதைச் சோதித்தப்பார்ப்பார்.நோய் தீண்டிய பகுதி நோய் பரவாதிருக்கும் நிறம் மாறாதிருந்தால், அது தீட்டானது.அது உட்புறம் இருந்தாலும் வெளிப்புறம் இருந்தாலும் அதை நீ நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும். |
56 | கழுவப்பட்டபின், நோய் குறைந்துவிட்டது எனக் குரு கண்டால், அந்தப் பகுதியை உடையிலிருந்து, தோலாடையிலிருந்து அல்லது பாவு அல்லது ஊடுநூலிலிருந்து கிழித்தெறிந்து விடவேண்டும். |
57 | ஆடையிலோ, பாவிலோ, ஊடுநூலிலோ, தோலால் செய்யப்பட்ட எதிலோ நோய் மீண்டும் காணப்படுமாயின் அது பரவும்.எனவே நோய் தீண்டியதை நெருப்பில் எரிக்க வேண்டும். |
58 | ஆடையோ, பாவோ, ஊடுநூலோ, தோலால் செய்யப்பட்ட எதுவோ கழுவியபின் அந்த நோய் நீங்கிப்போகும்.இரண்டாம் முறை கழுவியபின் அது தூய்மையானது ஆகும். |
59 | ஆட்டு உரோம உடை, பஞ்சு நூல் உடை, பாவு, ஊடுநூல், தோலால் செய்யப்பட்ட பை ஆகியவற்றுள் எதுவும் தீட்டுடையதா தீட்டற்றதா என அறிவதற்குத் தொழுநோய் பற்றிய சட்டம் இதுவே.” |