1 | ஆண்டவர் மோசேயிடம், |
2 | “நீ ஆரோனையும் அவனுடன் அவன் புதல்வரையும் வரவழைத்து, உடைகளையும் திருப்பொழிவு எண்ணெயையும், பாவம்போக்கும் பலிக்காக ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கிடாய்களையும் மற்றும் ஒரு கூடையில் புளிப்பற்ற அப்பங்களையும் கொண்டு வரச்செய். |
3 | மக்கள் கூட்டமைப்பு முழுவதையும், சந்திப்புக்கூடார நுழைவாயிலின் முன் கூடிவரச்செய்” என்றார். |
4 | மோசே தமக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி செய்தார்.சந்திப்புக் கூடார நுழைவாயில்முன் கூட்டமைப்பு குழுமியபோது, |
5 | மோசே கூட்டமைப்பிடம், “இக்காரியத்தைச் செய்யும்படி ஆண்டவர் கட்டளையிட்டுள்ளார்” என்று கூறி, |
6 | ஆரோனையும், அவர் புதல்வரையும் வரவழைத்துத் தண்ணீரில் குளிக்கச்செய்தார். |
7 | உள்ளங்கியை உடுக்கச் செய்து இடைக்கச்சையைக் கட்டி, மேலங்கியை அணிவித்து, ஏப்போதை அவர்மேல் போட்டு, ஏப்போதின் கைவண்ணப் பட்டையை அவருக்குக் கட்டி, |
8 | மார்புப் பட்டையை அவருக்கு அணிவித்து, அதில் ஊரிம், தும்மிம் ஆகியவற்றை வைத்து, |
9 | தலையில் பாகை அணிவித்து, பாகையின்மேல் முன்பக்கம், புனித பொன்முடியான பொற்பட்டத்தைக் கட்டினார். |
10 | பின்னர் மோசே, திருப்பொழிவு எண்ணெயை எடுத்துத் திருஉறைவிடத்தையும் அதில் உள்ள எல்லாவற்றையும் திருப்பொழிவு செய்து புனிதப்படுத்தினார். |
11 | திருப்பொழிவு எண்ணெயில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின்மேல் ஏழு முறை தெளித்து, பலிபீடத்தையும் அதன் அனைத்துக் கருவிகளையும் நீர்த்தொட்டியையும், அதன் தாங்கியையும் புனிதப்படுத்தும்படி திருப்பொழிவு செய்து, |
12 | ஆரோனின் தலையின்மேல் திருப்பொழிவு எண்ணெயில் கொஞ்சம் வார்த்து அவரைத் திருநிலைப்படுத்தும்படி அவருக்கு அருள்பொழிவு செய்தார். |
13 | ஆண்டவரது ஆணைப்படி, மோசே ஆரோனின் புதல்வரை வரவழைத்து, அவர்களுக்குக் கோடிட்ட உள்ளாடைகளை உடுத்துவித்து, இடைக்கச்சைகளைக் கட்டித் தலையில் பாகை அணிவித்தார். |
14 | பின்னர், பாவம் போக்கும் பலிக்கான காளையை அவர் கொண்டு வந்தார்.அதன் தலையின்மேல் ஆரோனும் அவர் புதல்வரும் தங்கள் கைகளை வைத்தனர். |
15 | அது வெட்டப்பட்டது, மோசே அதன் இரத்தத்தில் சிறிது தம் விரலால் எடுத்துப் பலிபீடத்தின் கொம்புகளைச் சுற்றிலும் பூசி, பலிபீடத்தற்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றி, எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றி, கறைநீக்கப்பலி செய்வதற்காக அதைப் புனிதப்படுத்தினார். |
16 | ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டபடி குடல்கள்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின் மேலிருந்த சவ்வையும், இரு சிறுநீரகங்களையும் அவற்றின் கொழுப்பையும் பலிபீடத்தில் மோசே எரித்தார். |
17 | காளையின் தோலையும் இறைச்சியையும் சாணத்தையும் பாளையத்திற்கு வெளியே நெருப்பிட்டுக் கொளுத்தினார். |
18 | பின்னர், அவர் எரிபலிக்கான ஆட்டுக்கிடாயைக் கொண்டு வந்தார்.அதன் தலைமீது ஆரோனும் அவர் புதல்வரும் கைகளை வைத்தனர். |
19 | அது வெட்டப்பட்டது.மோசே அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளித்தார். |
20 | ஆட்டுக்கிடாய் துண்டிக்கப்பட்டது.மோசே அதன் தலையையும் துண்டங்களையும் கொழுப்பையும் எரித்து, |
21 | குடல்களையும், தொடைகளையும் தண்ணீரால் கழுவிய பின்னர், ஆட்டுக்கிடாய் முழுவதையும் ஆண்டவர் கட்டளையிட்டபடியே பலிபீடத்தின்மேல் எரிபலியாக எரித்தார்.இது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலி. |
22 | பின்னர், அவர் திருநிலைப்பாட்டுக்குரிய அடுத்த ஆட்டுக்கிடாயைக் கொண்டு வந்தார்.அதன் தலைமீது ஆரோனும் அவர் புதல்வரும் கைகளை வைத்தனர். |
23 | அது வெட்டப்பட்டது.மோசே அதன் இரத்தத்தில் சிறிது எடுத்து, ஆரோனின் வலக்காதுமடலிலும், வலக்கைப் பெருவிரலிலும், வலக்கால் பெருவிரலிலும் பூசினார். |
24 | பின்னர், அவர் ஆரோனின் புதல்வரையும் அழைத்து, அவர்களுடைய வலக்காது மடலிலும் வலக்கைப் பெருவிரலிலும் வலக்கால் பெருவிரலிலும் சிறிது இரத்தத்தைப் பூசி, எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து, |
25 | கொழுப்பையும், கொழுப்பு வாலையும், குடல்கள் மேலிருந்த கொழுப்பு முழுவதையும் கல்லீரலின் மேலிருந்த சவ்வையும் இரு சிறுநீரகங்களையும் அவற்றின் கொழுப்பையும் வலது முன்னந்தொடையையும் எடுத்து, |
26 | ஆண்டவர் திருமுன் வைத்திருக்கும் புளிப்பற்ற அப்பக்கூடையிலுள்ள புளிப்பற்ற நெய்யப்பம் ஒன்றும், எண்ணெயில் தோய்த்த அப்பம் ஒன்றும் அடை ஒன்றும் எடுத்து, அந்தக் கொழுப்பின் மேலும் வலது முன்னந்தொடையின் மேலும் வைத்து, |
27 | அவற்றையெல்லாம் ஆரோனின் உள்ளங்கைகளிலும் அவர் புதல்வருடைய உள்ளங்கைகளிலும் வைத்து ஆரத்திப் பலியாக ஆண்டவர் திருமுன் அசைத்து, |
28 | அவற்றை அவர்கள் உள்ளங் கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின் மேல் இருந்த எரிபலியோடு எரித்தார்.இது திருநிலைப்பாட்டுப்பலி.இதுவே ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலி. |
29 | பின்னர், மோசே நெஞ்சுக்கறியை எடுத்து, அதை ஆண்டவர் திருமுன் ஆரத்திப்பலியாக அசைத்தார்.ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டவாறு, திருநிலைப்பாட்டுக்கான ஆட்டுக்கிடாயில் அது மோசேயின் பங்காயிற்று. |
30 | மோசே திருப்பொழிவு எண்ணெயிலும் பலிபீடத்தின் மேலிருக்கும் இரத்தத்திலும் சிறிது எடுத்து ஆரோன் மேலும் அவர்தம் உடைகள்மேலும் ஆரோனின் புதல்வர் மேலும் அவர்கள் உடைகள்மேலும் தெளித்தார்: இவ்வாறு ஆரோனையும் அவர் உடைகளையும் அவர் புதல்வரையும் அவர்கள் உடைகளையும் புனிதப்படுத்தினார். |
31 | பின்னர் மோசே ஆரோனையும் அவர் புதல்வரையும் நோக்கி, “நான் கட்டளையிட்டவாறு அந்த இறைச்சியைச் சந்திப்புக் கூடார நுழைவாயில் முன்பாகச் சமைத்து, அத்துடன் திருநிலைப்பாட்டுக் காணிக்கைக் கூடையிலிருக்கும் அப்பத்தையும் உண்பீர்கள். |
32 | இறைச்சியிலும் அப்பத்திலும் எஞ்சியிருப்பதை நெருப்பிலிட்டுக் கொளுத்திவிடுங்கள். |
33 | திருநிலைப்பாட்டு நாள்கள் முடியும்வரை ஏழு நாள்கள் சந்தப்புக்கூடார நுழைவாயிலைவிட்டு நீங்காதீர்கள்ஏழு நாள்கள் நீங்கள் புனிதப்படுத்தப்படுவீர்கள். |
34 | இன்று செய்யப்பட்டது உங்கள் கறையை நீக்குவதற்காக ஆண்டவர் கட்டளையிட்டதாகும். |
35 | நீங்கள் சாகாதபடி ஏழு நாள்கள் இரவும் பகலும் சந்திப்புக் கூடார நுழைவாயிலில் ஆண்டவருக்காகக் காவல் காப்பீர்கள்.இதுவே நான் பெற்ற கட்டளை” என்றார். |
36 | மோசேயின் மூலமாக ஆண்டவர் கட்டளையிட்ட எல்லாவற்றையும் ஆரோனும் அவர் புதல்வரும் செய்தனர். |