1 | மோசே எட்டாம் நாளில் ஆரோனையும் அவர் புதல்வரையும் இஸ்ரயேலின் பெரியோர்களையும் வரவழைத்தார். |
2 | அவர் ஆரோனிடம் கூறியது: “நீ பாவம் போக்கும் பலியாக ஊனமற்ற காளைக்கன்று ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஆண்டவர் திருமுன் கொண்டு வா.நீ சொல்ல வேண்டியது: |
3 | இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவர் திருமுன் பாவக் கழுவாய்ப் பலிக்காக ஒருவயது நிரம்பிய மறுவற்ற காளைக்கன்று ஒன்றையும் செம்மறிக்கிடாய் ஒன்றையும் |
4 | நல்லுறவுப் பலிகளுக்காக ஒரு காளையையும் ஓர் ஆட்டுக் கிடாயையும் எண்ணெயோடு கூடிய உணவுப் படையல்களையும் கொண்டு வாருங்கள்.ஏனெனில் இன்று ஆண்டவர் உங்களுக்குத் தோன்றுவார்.” |
5 | அவர்கள் மோசே கட்டளையிட்டவற்றைச் சந்திப்புக் கூடாரத்திற்கு முன்பாகக் கொண்ட வந்தார்கள்.சபையார் அனைவரும் வந்து ஆண்டவர் முன்பாக நின்றனர். |
6 | அப்பொழுது மோசே, “நீங்கள் செய்யுமாறு ஆண்டவர் கட்டளையிட்டது இதுவே: ஆண்டவரது மாட்சி உங்களுக்குத் தோன்றும்” என்றார். |
7 | மோசே ஆரோனிடம், “நீ பலிபீடத்தருகில் வந்து உன் பாவம் போக்கும் பலியையும் எரிபலியையும் செலுத்தி, உனக்காகவும் மக்களுக்காகவும் கறை நீக்கம் செய்வாய்.ஆண்டவர் கட்டளைப்படி அதற்காக மக்கள் செலுத்த வேண்டிய பலியையும் செலுத்தி அவர்களுக்காகக் கறை நீக்கம் செய்வாய்” என்றார். |
8 | ஆரோன் பலிபீடத்தருகில் தமக்கென்று பாவக்கழுவாய்ப் பலியாகக் காளைக்கன்று ஒன்றை அடித்தார். |
9 | ஆரோனின் புதல்வர்கள் அதன் இரத்தத்தை அவரிடம் கொண்டு வர, அவர் தம் விரலை அதில் தோய்த்து பலிபீடத்தில் கொம்புகளில் பூசி, எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்திற்கு அடியில் ஊற்றினார். |
10 | பாவம் போக்கும் பலியின் கொழுப்பையும் சிறுநீரகங்களையும் கல்லீரலிலிருந்து எடுத்த சவ்வையும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே பலிபீடத்தின் மேல் சுட்டெரித்து, |
11 | இறைச்சியையும் தோலையும் பாளையத்திற்கு வெளியே நெருப்பிலிட்டு அழித்தார். |
12 | பின்பு அவர் எரிபலிக்கிடாயை அடித்தார்.ஆரோனின் புதல்வர் அதன் இரத்தத்தை அவரிடம் கொண்டு வர, அவர் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தார். |
13 | எரி பலியின் துண்டங்களையும் தலையையும் அவரிடம் கொண்டு வந்தனர்.அவர் அவைகளைப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்து, |
14 | குடல்களையும் தொடைகளையும் கழுவி, இவற்றைப் பலிபீடத்தின் மேல் இருக்கும் எரிபலியோடு சுட்டெரித்தார். |
15 | பின்னர், அவர் மக்களுக்கான பலியை, பாவம் போக்கும் பலிக்கிடாயைக் கொண்டுவந்து அதைக்கொன்று, முன்னதைப்போலவே பாவம்போக்கும் பலியாகச் செலுத்தினார். |
16 | பின்னர் அவர் எரிபலியைக் கொண்டு வந்து நியமத்தின்படியே செலுத்தினார்: |
17 | உணவுப் படையல்களைக் கொண்டுவந்து தம் கைநிறைய எடுத்து காலையில் செலுத்தும் எரிபலியோடு பலிபீடத்தின்மேல் சுட்டெரித்தார். |
18 | பின்னர், மக்களின் நல்லுறவுப் பலிகளாகிய காளையையும் கிடாயையும் கொன்று, அவற்றின் இரத்தத்தை ஆரோனின் புதல்வர் அவரிடத்தில் கொண்டு வந்தனர்.அவர் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தார். |
19 | காளையிலும் கிடாயிலுமிருந்து எடுத்த கொழுப்பு வாலையும் குடல்களையும் சிறுநீரகங்களையும் கல்லீரலின் மேலிருந்த சவ்வையும் கொண்டு வந்து, |
20 | நெஞ்சுக் கறிகளின்மீது வைத்தார்கள்.கொழுப்புப் பகுதிகளைப் பலிபீடத்தின்மேல் ஆரோன் சுட்டெரித்தார். |
21 | நெஞ்சுக் கறியையும் வலதுமுன்னந்தொடையையும் மோசே நியமித்தபடி ஆரோன் ஆண்டவர் திருமுன் ஆரத்திப்பலியாக அசைத்தார். |
22 | பின்னர், ஆரோன் மக்களுக்கு நேராகத் தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார்: தாம் பாவம் போக்கும் பலியையும் எரிபலியையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்திய பின் கீழே இறங்கினார். |
23 | மோசேயும் ஆரோனும் சந்திப்புக் கூடாரத்தினுள் நுழைந்தனர்: பின்னர் வெளியே வந்து மக்களுக்கு ஆசி வழங்கினர்.அப்போது ஆண்டவருடைய மாட்சி மக்கள் அனைவருக்கும் தோன்றியது. |
24 | ஆண்டவர் முன்னிலையிலிருந்து நெருப்பு புறப்பட்டு வந்து, பலிபீடத்தின் மேலிருந்த எரிபலியையும் கொழுப்பையும் விழுங்கியது.மக்கள் அதைக் கண்டு ஆரவாரம் செய்து முகங்குப்புற விழுந்தனர். |