1 | ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது: |
2 | “இஸ்ரயேல் மக்களுக்கு நீங்கள் கூறவேண்டியது: |
3 | ஒருவனுக்கு விந்து ஒழுக்கு இருப்பின்-உடலிலிருந்து அது வெளிப்பட்டாலும், உடலுள் அடக்கிவைக்கப்பட்டாலும்-அது அவனுக்குத் தீட்டு. |
4 | விந்து ஒழுக்கு உடையவன் படுக்கும் படுக்கை அனைத்தும் தீட்டு: அவன் அமரும் இருக்கை அனைத்தும் தீட்டே. |
5 | அவன் படுக்கையைத் தொடுபவன், தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுக வேண்டும்.மாலை மட்டும் அவன் தீட்டுடையவன். |
6 | விந்து ஒழுக்கு உடையவன் அமர்ந்தவற்றின் மீது அமர்பவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுக வேண்டும்.மாலை மட்டும் அவன் தீட்டுடையவன். |
7 | அவன் உடலைத் தொடுபவனும் தன் உடைகளைத் துவைத்து தண்ணீரில் முழுக வேண்டும்.மாலை மட்டும் அவன் தீட்டுடையவன். |
8 | அவன் தீட்டற்ற ஒருவன்மீது உமிழ்ந்தால், இவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும்.மாலைமட்டும் அவன் தீட்டுடையவன். |
9 | அவன் ஏறிப் பயணம் செய்பவை அனைத்தும் தீட்டு. |
10 | அவன் அடியிலிருக்கும் எதையும் தொடுபவன் ஒவ்வொருவனும் மாலைமட்டும் தீட்டுடையவன்.அதைச் சுமப்பவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும்.மாலைமட்டும் அவன் தீட்டுடையவன். |
11 | அவன் தன்னைத் தண்ணீரில் கழுவாதிருக்கையில், தன்கையால் எவனைத் தொட்டாலும், அவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும்.மாலை மட்டும் அவன் தீட்டுடையவன். |
12 | அவன் தொடும் மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும்: மரக்கலம் தண்ணீரில் அலசப்படவேண்டும். |
13 | அவனது ஒழுக்கு நின்று தீட்டு அகன்றால், அவன் தன்னைத் தீட்டகற்ற ஏழுநாள் காத்திருக்கவேண்டும்: பின்பு அவன் தன் உடைகளைத் துவைத்து, தன் உடலை ஊற்று நீரில் கழுவியதும், அவனது தீட்டு அகலும். |
14 | எட்டாம் நாள், இரு காட்டுப் புறாக்களை அல்லது புறாக் குஞ்சுகளை, சந்திப்புக்கூடார வாயிலில் ஆண்டவர் திருமுன் குருவிடம் கொடுக்க வேண்டும். |
15 | குரு அவற்றில் ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும், மற்றதை எரிபலியாகவும் செலுத்தி அவனுக்காக, ஆண்டவர் திருமுன் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார். |
16 | விந்து கழிந்தவனும் தன் உடலைக் கழுவுவாள்.மாலை மட்டும் அவன் தீட்டுடையவன். |
17 | விந்து பட்டதோலும் உடையும் நீரால் கழுவப்படவேண்டும்.மாலைமட்டும் அவை தீட்டாயிருக்கும். |
18 | அவனுடன் அவன் மனைவி படுத்திருந்தால், இருவரும் தண்ணீரில் முழுக வேண்டும்.மாலைமட்டும் அவர்கள் தீட்டாயிருப்பர். |
19 | மாதவிலக்கில் இரத்தப்பெருக்குடைய பெண் ஏழுநாள் விலக்காய் இருப்பாள்.அவளைத் தொடுபவர் மாலைமட்டும் தீட்டாயிருப்பர். |
20 | மாத விலக்கின்மீது எதன்மீது படுக்கிறாளோ, எவற்றின்மீது அமர்கிறாளோ அவை அனைத்தும் தீட்டே. |
21 | அவள் படுக்கையைத் தொடுபவர் அனைவரும் தம் உடைகளைத் துவைத்து நீரில் முழுகவேண்டும்.மாலைமட்டும் அவர்கள் தீட்டாய் இருப்பர். |
22 | அவள் அமரும் மணையைத் தொடுபவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும்.மாலைமட்டும் அவன் தீட்டாய் இருப்பான். |
23 | அவள் படுக்கையின்மீதும் அவள் அமர்ந்த மணையின்மீதும் இருந்த எதையாகிலும் தொட்டவனும் மாலைமட்டும் தீட்டாய் இருப்பான். |
24 | ஒருவன் அவளுடன் படுக்கையில் படுத்துக்கொண்டு, அவள் தீட்டு அவன் மீதுபட்டது என்றால், அவன் ஏழுநாள் தீட்டுடையவன்: அவன் படுக்கும் படுக்கை அனைத்தும் தீட்டே. |
25 | பெண் ஒருத்திக்கு உரிய மாதவிலக்கு நாள்கள் கடந்தும் உதிரப்பெருக்கு நீடித்தால், அந்த நாள்கள் எல்லாம் விலக்கு நாள்களைப்போல் தீட்டானவையே. |
26 | அந்த நாள்கள் எல்லாம் அவள் படுக்கும் படுக்கை அனைத்தும், விலக்குக் காலப் படுக்கைக்கு ஒத்ததே: அவள் அமரும் அனைத்தும் தீட்டுக் காலத்தைப் போன்றே விலக்காய் இருக்கும். |
27 | அவற்றைத் தொடுபவன் தன் உடைகளைத் துவைத்து, நீரில் மூழ்கவேண்டும்.மாலைமட்டும் அவன் தீட்டாய் இருப்பான். |
28 | அவள் தன் இரத்தப்பெருக்கு நின்றபின், ஏழு நாள் கழித்தபின் தீட்டற்றவள் ஆவாள். |
29 | எட்டாம் நாள், இரு காட்டுப் புறாக்களையோ புறாக் குஞ்சுகளையோ சந்திப்புக் கூடார வாயிலில் குருவிடம் கொண்டு வருவாள். |
30 | குரு அவற்றில் ஒன்றைப் பாவம் போக்கும் பலியும் மற்றதை எரி பலியுமாக்கி, அவளுக்காக ஆண்டவர் திருமுன் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார். |
31 | இஸ்ரயேல் மக்கள், தங்கள் நடுவே இருக்கும் எனது தங்குமிடத்தைத் தீட்டாக்கி, சாகாதபடிக்கு, நீங்கள் அவர்கள் தீட்டுகளிலிருந்து அவர்களை விலக்கி வைக்க வேண்டும். |
32 | விந்து ஒழுக்கினாலும் விந்து அழிவினாலும் தீட்டானவனுக்கும் |
33 | தன் விலக்கினாலும் நோயுற்றவளுக்கும்-உடல் தூய்மையற்ற ஆணுக்கும் பெண்ணுக்கும்- தீட்டாயிருப்பவளோடு படுத்தவனுக்கும், உரிய சட்டம் இதுவே”. |